|
மன்னர் காசிராஜன் மகள் மதிவாணிக்கு சுயம்வரம் நடத்த ஏற்பாடானது. கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் புலியை அடக்குபவருக்கே பெண் தருவதாக மன்னர் அறிவித்தார். பங்கேற்க மன்னர்கள் தயங்கினர். மகதநாட்டு மன்னர் திரிலோசனன் சவாலை ஏற்று கூண்டுக்குள் நுழைய புலி கடுமையாகத் தாக்கியது. ஆனாலும் புலியை வெற்றி கொண்டார். திருமணமும் நடந்தது. மணமக்கள் காசி விஸ்வநாதரை தரிசிக்கச் சென்றனர். சுயம்வரத்தில் பங்கேற்க முடியாமல் போன மன்னன் ஒருவன் அங்கு வந்தான். திரிலோசனனை கண்டதும், அவனது வெற்றியை பாராட்டுவது போல் கட்டித் தழுவியபடி கத்தியால் குத்தினான். மதிவாணி அதிர்ந்தாள். தாலி கட்டிய அன்றே கணவனை இழப்பது கொடுமை தானே! குத்திய மன்னனை காவலர்கள் அங்கேயே கொன்றனர். கணவனை இழந்த மதிவாணி பித்துப் பிடித்தது போலிருந்தாள். இனி வாழக்கூடாது என்ற முடிவில் கங்கையாற்றில் குதித்தாள். வெள்ளம் அவளை இழுத்துச் சென்றது. அப்போது கரையில் போன கவுதம முனிவர், யாரோ ஒரு பெண்ணை வெள்ளம் இழுத்துச் செல்கிறதே என்று காப்பாற்ற முயன்றார். மதிவாணியின் கூந்தலைப் பிடித்து இழுத்தபடி கரைக்கு வந்தார்.
மயக்கம் தெளிந்த மதிவாணி கண்விழித்ததும் முனிவரைக் கண்டாள். அவரின் பாதத்தில் விழுந்து வணங்கினாள். “தீர்க்க சுமங்கலியாக இருப்பாயாக” என வாழ்த்தினார். விரக்தியுடன் சிரித்த மதிவாணி, “சுவாமி! வேதம் கற்றவர்களின் வாயில் பொய் வராது. ஆனால் கணவனை இழந்த என்னை சுமங்கலியாக இருக்கும்படி வாழ்த்துகிறீர்களே!” என்று சொல்லவும் முனிவர் அதிர்ந்தார். அவளிடம், “மகளே! என் வார்த்தை இந்த பிறப்பில் பொய்யாக போயிருக்கலாம். ஆனால் அடுத்த பிறவியில் நீ சந்திரமதி என்னும் பெயரில் பிறப்பாய். பிறக்கும் போதே உன் கழுத்தில் தாலி இருக்கும். உன் கணவர் அரிச்சந்திரன் என்னும் பெயரில் பிறந்து சத்தியசீலனாக அவதரிப்பார். அவர் கண்ணுக்கு மட்டுமே அந்த தாலி தெரியும். பல பிறவிகளில் பட வேண்டிய கஷ்டங்களை ஒரே பிறவியில் அனுபவித்து முக்தி பெறப் போகும் அவரே உன்னை திருமணம் புரிவார். நீங்கள் இருவரும் நித்ய இன்பமான பிறவாநிலையைப் பெறுவீர்கள்” என்றார். துன்பம் கூட இன்பத்துக்கே என்பது மதிவாணியின் வாழ்வு உணர்த்தும் கருத்து.
|
|
|
|