|
போர்க்களத்தில் உயிர் விட்ட கர்ணன் சொர்க்கம் சென்றான். தேவையான வசதிகள் அனைத்தும் அங்கிருந்தன. கர்ணனுக்கு பசி வந்ததால் தனக்காக நியமிக்கப்பட்ட பணியாளனிடம் உணவு கேட்டான். “ தங்களுக்கு உணவு தர வேண்டும் என கடவுளின் கட்டளை இல்லையே” என்றான் அவன். கோபமுடன் கர்ணன், “கடவுளே... என்ன தவறு செய்தேன். ஏன் இந்த தண்டனை?” என கேட்டான். “கர்ணா... நீ வள்ளலாக வாழ்ந்தாலும் யாருக்கும் ஒருமுறை கூட அன்னம் அளிக்கவில்லை. அதனால் உணவு மட்டும் உனக்கு கிடைக்காது” என அசரீரி கேட்டது. “என்னை மன்னியுங்கள். என் பசி தீர வழியில்லையா?” எனக் கேட்டான். “கர்ணா... ஒருமுறை முதியவர் ஒருவர் அன்னச்சத்திரம் செல்லும் போது, ஆள்காட்டி விரலால் வழிகாட்டினாய். எனவே உன் விரலுக்கு பசியை போக்கும் சக்தி உண்டு. அதை வாயில் வைத்தால் போதும்... பசியடங்கும்.” என பதில் கிடைத்தது. வழிகாட்டிய புண்ணியமே பசி போக்கும் என்றால் உணவு அளித்திருந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைத்திருக்கும் என எண்ணிய கர்ணனுக்கு ’வாய் வாழ்த்தாது; வயிறு தான் வாழ்த்தும்’ என்பதன் உண்மை புரிந்தது.
|
|
|
|