|
விஞ்ஞானி ஒருவருக்கு அவரது படைப்பை குறை சொன்னால் ஏற்கும் பக்குவம் இல்லை. நீண்டகால ஆராய்ச்சியின் பயனாக புதிய சூத்திரம் ஒன்றைக் கண்டறிந்த அவர், தன்னைப் போல ஒரு மனிதனை உருவாக்கி உயிர் கொடுத்து உலாவ விட்டார். காரணம் என்றாவது ஒருநாள் உயிரை பறிக்க எமன் வருவான்; அப்போது ஏமாற்றி தப்ப வேண்டும் என்பதால் தான். எதிர்பார்த்தது போல ஒருநாள் எமதர்மன் விஞ்ஞானியிடம் வந்தான். நடை, உடை, பாவனை என அனைத்திலும் விஞ்ஞானி போலவே இருந்த நகல் மனிதனைக் கண்ட எமனுக்கு குழப்பம் வந்தது. திடீரென யோசித்த எமன், “விஞ்ஞானியே! மனிதன் போலவே உருவாக்குவது சவால் தான் என்றாலும் அதில் குறையும் உள்ளது” என்றான். “என் படைப்பில் என்ன குறை இருக்கிறது?” என்றார் நிஜவிஞ்ஞானி. “உங்களைத் தான் தேடிட்டு இருந்தேன். எனக்கே பரீட்சை வைக்கிறீங்களா?” என்றான் எமன். “எப்படி என்னை கண்டுபிடித்தீர்கள்?” எனக் கேட்டார் விஞ்ஞானி. “தங்களுக்கு புத்திசாலித்தனத்துடன் ஆணவமும் சேர்ந்திருக்கிறது. அதனால் தான் குறை என்றதும் பொறுக்க முடியவில்லை. குறையை திருத்த வேண்டுமே தவிர தாழ்வாக கருத தேவையில்லை. மேலும் பிறப்பும், இறப்பும் இயற்கை நியதி. யாரும் தப்ப முடியாது” என்றான் எமன். |
|
|
|