|
கிராமத்தில் வாழ்ந்த முதியவர் ஒருவர் தன் சொத்தை மகனுக்கு உயில் எழுதி வைக்க நினைத்தார். சொத்தை அவன் பாதுகாப்பாக வைத்திருப்பானா என்ற சந்தேகம் எழுந்ததால் சோதிக்க விரும்பினார். ஒருநாள் அவனிடம், “நீ இன்னும் ஒரு மாதத்திற்குள் ஏதாவது வேலைக்கு சென்று, சம்பளத்தைக் கொடுத்தால் வீட்டையும், வயலையும் உன் பெயருக்கு எழுதுவேன். மீறினால் நம்மூர் பிள்ளையார் கோயிலுக்கு எழுதுவேன்” என்றார். உடனடியாக வேலை தேடுவதாக தெரிவித்த அவன், நண்பனை சந்திக்க நகரத்திற்கு புறப்பட்டான். ஒரு வாரம் கழித்து வந்தவன் சம்பள பணத்தில் இரண்டாயிரம் கொடுத்தான். அதை வாங்கியவர் தூக்கி வீசினார். “ இந்த பணம் உன்னுடையதாக தெரியவில்லை. உண்மையைச் சொல்.” என்றார் “ஆமாம் அப்பா. யாரோ பட்டணத்தில் ரோட்டில் தவறுதலாக தவற விட்ட பணம் இது” என்றான்.
பத்து நாள் கழித்து மீண்டும் வீட்டுக்கு வந்தவன், பணத்தைக் கொடுக்க அதையும் ஏற்க மறுத்தார். நண்பனிடம் கடனாக பெற்ற பணம் என்பதை ஒப்புக் கொண்டான். கெடு முடியும் நாளுக்கு முதல் நாள் களைப்புடன் வந்தவன், “அப்பா... என்னால 500 ரூபாய் தான் சம்பாதிக்க முடிந்தது” என்று சொல்லி பணத்தை நீட்டினான். இந்த முறை முதியவர் ரூபாயை கிழிக்க முயன்றார். பதறிப் போன அவன், “என்னப்பா...இப்படி பண்ணலாமா” என்று சொல்லி வேகமாக பணத்தை பிடுங்கினான். மகிழ்ச்சியுடன் முதியவர், “இப்போது தான் நீ பொறுப்பு உணர்வை நிரூபித்திருக்கிறாய். என் உழைப்பால் கிடைத்த சொத்துகளை அக்கறையுடன் பாதுகாப்பாய் என்ற நம்பிக்கை வந்து விட்டது” என்றார். மகன் ஆர்வமுடன், “இந்த பணம் உழைப்பால் வந்தது என்பது எப்படி கண்டுபிடித்தீர்கள்?” எனக் கேட்டான். அதற்கு முதியவர், “ உழைப்பால் கிடைத்த பணத்தை மற்றவர் அலட்சியப்படுத்தினால் ஒருவரால் சகிக்க முடியாது. இதற்கு முன்னர் நீ கொடுத்த பணம் அதிகம் என்றாலும், அலட்சியப் படுத்திய போது பொருட்படுத்தாமல் இருந்தாய். ஆனால் நீ பாடுபட்டு கிடைத்த பணத்தை கிழிக்க முயன்றதும் தடுத்து விட்டாய். உனக்கான கதவு திறந்ததால் நிச்சயம் உயர்வாய் என்பது புரிகிறது” என்றார். பெருமிதத்துடன் அப்பாவை கட்டிக் கொண்டான் அவன். |
|
|
|