|
’குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பது பழமொழி. இதற்கு ஏற்றாற்போல் சென்னை குரோம்பேட்டைக்கு அருகில் ’குமரன் குன்றம்’ என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு மலை மீது அருள்புரியும் முருகனை சுவாமிநாத சுவாமி, பாலசுப்ரமண்ய சுவாமி என அழைக்கின்றார்கள். கேட்டவரங்களை அருள்பவர் என்பதால் பக்தர்கள் ’ஐஸ்வர்ய முருகன்’ என்கிறார்கள். எந்த ஒரு பிரார்த்தனையாக இருந்தாலும் மனப்பூர்வமாக இவரிடம் வைத்தால்... பக்தர்களை ஏமாற்றாமல் நிறைவேற்றுவார். எங்கே இருக்கிறது குமரன்குன்றம் கோயில்? குரோம்பேட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்து அஸ்தினாபுரம் செல்லும் சாலையில் எம்.ஐ.டி., பாலம் இறங்கி இடதுபக்கம் திரும்பினால் நேருநகரில் குமரன்குன்றம் உள்ளது. சுவாமியைத் தரிசிக்க மலை மீது ஏறினால், ’நகரத்தின் நடுவில் இப்படி ஒரு மலையா?’ என்ற மலைப்பு புதிதாக வரும் பக்தர்களுக்கு ஏற்படும். மலையில் இருந்து பார்த்தால் குரோம்பேட்டை, பல்லாவரம், விமானநிலையம் உள்ளிட்ட பல பகுதிகளை ’ஏரியல் வியூ’வில் பார்த்து மகிழலாம். சுவாமிநாதசுவாமியை தரிசிக்கவும், இயற்கைக் காட்சிகளைக் காணவும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிகம் வருகின்றனர். பிரமாண்டமான ராஜகோபுரம். அடிவாரத்தில் சித்தி விநாயகர், இடும்பன், காளி, நவக்கிரகம், உற்ஸவர் முருகன் ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள். இக்கோயிலை அடையாளம் காட்டிய நடமாடும் தெய்வம் காஞ்சி மகாப்பெரியவரின் திருவுருவப் படம் தனியறையில் வழிபாட்டுக்காக உள்ளது.
மகாப்பெரியவர் அடையாளம் காட்டிய கோயிலா? எப்படி? எப்போது? 1958 ம் ஆண்டில் சென்னையில் முகாமிட்டிருந்த காஞ்சி மகாப்பெரியவர் குரோம்பேட்டைக்கும் வந்த போது மலை உண்டே தவிர மலைக்கு மேல் முருகன் கோயில் கிடையாது. மலை மீது செடி, கொடியாக புதர் மண்டியிருந்தது. எனவே இந்த மலையை கண்டு கொள்வார் இல்லை. குரோம்பேட்டை சாலைகளில் பக்தர்களுடன் நடந்து சென்ற மகாப்பெரியவர் மலையைப் பார்த்து விட்டு, அப்படியே நின்றார். அண்ணாந்து பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு வணங்கினார். ’செடி, கொடிகள் என புதர் மண்டிக் கிடக்கும் மலையை வணங்குகிறாரே’ என்று உள்ளூர் அன்பர்களின் மனம் குழம்பியது. அவர்களை அழைத்து, ”இந்த மலைக்கு மேல யாராவது போனதுண்டா?” எனக் கேட்டார் மகா பெரியவர். “இல்லை பெரியவா... விஷ ஜந்துக்கள் இருக்கும்னு போறதில்லை. மலை ஏறிப் போறதுக்கான சூழ்நிலையும் இதுவரை வந்ததில்லை” என்றனர். “இனிமே வந்துடும்” என்றார் பெரியவர். உடன் இருந்த பக்தர்கள் அதிசயமாகப் பார்த்தனர். “மலைக்கு மேல முருகன் கோயில் ஒரு காலத்துல இருந்திருக்கு. கூடிய சீக்கிரம் வழிபாட்டை ஆரம்பிங்கோ” என்று சொல்லிய படி அந்த நடமாடும் தெய்வம் நடந்தது.
ஆச்சரியப்பட்ட குரோம்பேட்டை மக்கள், அடுத்த சிலநாட்களில் திரளாக மலை மீதேறி சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்தனர். மலை உச்சியில் கண்ட காட்சி வியப்பில் ஆழ்த்தியது. ஆம்! முருகன் வழிபாட்டில் பிரதானமாக விளங்கும் வேல் ஒன்று கிடைத்தது. பரவசப்பட்டுப் போனவர்கள், ’வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா’ கோஷத்தோடு, மகா பெரியவாளின் ஞான திருஷ்டியை எண்ணி வியந்தனர். வேலை அங்கேயே நட்டு சில காலம் எளிய முறையில் வழிபட்டனர். கூடிய விரைவில் மலையை சீர்படுத்தி முருகனுக்கு மலை உச்சியில் விக்ரஹம் அமைத்தனர். அதன் பின் குரோம்பேட்டை ’குமரன்குன்றம்’ பகுதிக்குத் தனிஅடையாளம் கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு அருகே அறுபடை வீடுகளுள் ஒன்றான சுவாமிமலை உள்ளது போலவே கையில் தண்டாயுதத்துடன் முருகன் இங்கே எழுந்தருளியிருக்கிறார். வடக்கு நோக்கிய சன்னதி. அழகு ததும்பும் அற்புத திருவடிவம். முருகனுக்குப் மயில் தானே வாகனமாக இருக்கும்? ஆனால் இங்கு யானை வாகனம் உள்ளது. சுவாமிமலையில் இருப்பது போலவே, சிவன், பார்வதிக்கு சன்னதிகள் இங்குண்டு. மலையேறினால் முருகனைத் தரிசிக்கலாம்.
சுவாமிமலையை நினைவுபடுத்தும் விதத்தில் குமரன்குன்றம் ஆலயம் அமைந்திருப்பதால் இது ’மத்ய சுவாமிமலை’ என்று அழைக்கப்படுகிறது. தலைநகர் டில்லியில் சுவாமிமலை போலவே உள்ள கோயில் ’உத்திர சுவாமிமலை’ எனப்படுகிறது. அறுபது ஆண்டுக்கு முன் இக்கோயில் அறியப்பட்டு வழிபாடு நடந்தாலும் 500 ஆண்டுகள் பழமைமிக்கது என்கிறது தல புராணம். 120 படிகள் ஏறினால் மலை உச்சியை அடையலாம். அடிவாரத்துக்கும், மலைஉச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் மீனாட்சி– சுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. நடராஜர், சரபேஸ்வரர், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன், பைரவர் சன்னதிகள் இங்குள்ளன. பரிவார தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை உள்ளனர். இங்கு கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி, நவராத்திரி, பிரதோஷம் உள்ளிட்ட விசேஷங்கள் சிறப்பாக நடக்கின்றன. மலை மீதிருக்கும் குமரக்கடவுளுக்கு எண்ணற்ற விசேஷங்கள். தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாளில் அடியவர்களால் படிபூஜை நடத்தப்படும். வைகாசி விசாகத் திருவிழாவின்போது லட்சார்ச்சனை. தவிர ஆடிக் கிருத்திகை, கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம், கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, தைப்பூச பால்காவடி உற்ஸவம், பங்குனி உத்திரம் போன்ற வைபவங்கள் சிறப்பாக நடக்கின்றன.
பவுர்ணமி நாட்களில், முருகனுக்குரிய விசேஷ நாட்களில் முருகன் அடியவர்கள் ஒன்றுகூடி குமரன்குன்றம் மலையை ’கிரிவலமாகச்’ சுற்றுகின்றனர். குமரன்குன்றம் ஆலய ராஜகோபுரத்துக்கு எதிரே பிரதான சாலையில் எதிர்ப்புறம் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் உள்ளது. மருமகன் முருகனைத் தரிசிப்பவர்கள் மாமனான பெருமாளையும் தரிசிக்கலாம். இங்கு நரசிம்மர், ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. குமரனையும், கோவிந்தனையும் ஒருசேர தரிசித்து, குறைகள் அகலப் பெறுங்கள்! நிறைவான வாழ்வு பெறுங்கள்! |
|
|
|