|
மாணவன் ராமச்சந்திரன் படிப்பில் படுசுட்டி. ஆனால் மற்றவரிடம் பழகுவதில் சுமார். ஒருநாள் வகுப்பில் உம்மென்று இருந்தவனைக் கண்ட தமிழாசிரியர் அவனை விசாரித்த போது, காலையில் டிபன் நன்றாக இல்லை என அம்மாவை திட்டியது தெரிய வந்தது.“ராமச்சந்திரா! பொறுமை கசக்கும்; அதன் பலனோ இனிக்கும் என்பதை நீ கேட்டதில்லையா! பெற்றோர் மீது அன்பு காட்டுவது உன் கடமை. ஏதோ அவசரத்தில் உன் அம்மா செய்ததால் டிபன் முன்பின் இருந்திருக்கலாம். அதற்காக கோபப்படலாமா” எனக் கேட்டார். “ஏன் என்று தெரியவில்லை! கோபம் வந்தால் நண்பர்களைக் கூட சில நேரத்தில் திட்டி விடுகிறேன்.” என்றான். “ உயர்வுக்கும், தாழ்வுக்கும் காரணம் நாக்கு. இதைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமையும். இன்று வீட்டுக்குச் சென்றதும் உன் அம்மாவிடம் திட்டியதற்காக மன்னிப்புக் கேள்.” என்றார் ஆசிரியர்.
தலையசைத்தவனிடம், “சரி. கோபத்தை குறைக்க ஒரு வழி சொல்கிறேன். செய்வாயா?” என்றார் ஆசிரியர். “சொல்லுங்கள் ஐயா!”“இரும்பு ஆணிகள் நிறைய கையில் வைத்துக் கொள். ஒவ்வொரு முறை நீ கோபப்படும் போதும் ஒரு ஆணியை எடுத்து சுவற்றில் அடி. படிப்படியாக அதைக் குறைக்க முயற்சி செய்.” “ செய்கிறேன் ஐயா.” முதல் வாரம் பத்து ஆணிகள் அடிக்க நேர்ந்தது. அதை பார்த்த போதெல்லாம் அவன் மனதிற்குள் அதன் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அடுத்த வாரம் அவன் நான்கு முறை தான் கோபம் கொண்டான். மூன்றாவது வாரம் ஒரு முறை, நான்காவது வாரம் கோபமே வந்தாலும் காட்டிக் கொள்ளவில்லை. ஆணியே அடிக்கவில்லை. ஒருநாள் வகுப்பில், “ஐயா! இப்போதெல்லாம் நான் கோபத்தை கட்டுப்படுத்த பழகி விட்டேன்” என்றான் பெருமையாக. “அப்படியானால் நீ அடித்த ஆணிகளை எல்லாம் பிடுங்கு. சுவர் எப்படி உள்ளது என பார்த்து விட்டு வா.”
மறுநாள் ஆசிரியரிடம், “அடித்த அடையாளம் ஆழமாக உள்ளது. வீட்டுச் சுவரும் கெட்டு விட்டது.” “கோபத்தில் பேசும் சொற்கள் மாறாத வடுவாகப் பிறர் மனதில் பதிந்து விடும் அடித்த அடையாளம் போல. இதை ’நாவினால் சுட்ட வடு’ என்கிறார் வள்ளுவர்” என்றார். “இனி யாரிடமும் கோபப்படமாட்டேன் ஐயா. மீறி வந்தாலும் அடக்கமுடன் பேசுவேன்” என்றான் அவன். நல்லவனாக நாமும் இருக்கஉறுதியேற்போம்.
|
|
|
|