|
இரண்டு நண்பர்கள் பாலைவனத்தில் பயணித்த போது தண்ணீர் குடிப்பதில் சண்டை வந்தது. ஒருவன் இன்னொருவனை அடித்து விட்டான். அடி வாங்கியவன் அழுது கொண்டே பாலைவன மணலில், “என் நண்பன் என்னை அடித்து விட்டான்” என எழுதி வைத்தான். அதன்பின் இருவரும் மவுனமாக நடந்து சென்றனர். பாலைவனத்தில் ஓரிடத்தில் பெரிய பள்ளம் இருந்தது. அதை கவனிக்காமல் அடிவாங்கியவன் பள்ளத்திற்குள் தவறி விழப் போனான். திடுக்கிட்ட மற்றொருவன், தன் உயிரை பணயம் வைத்து அவனைக் காப்பாற்றினான். இப்போதும் அவன் அருகில் இருந்த பாறையில் “என் நண்பன் என்னை காப்பாற்றினான்” என செதுக்கி வைத்தான். காப்பாற்றியவன், “அதென்ன நான் அடித்த போது மணலிலும், காப்பாற்றிய போது பாறையிலும் எழுதினாயே?” எனக் கேட்டான். “நண்பா...துன்பப்படுத்தியது காற்றில் மறைந்து போகட்டும் என மண்ணிலும், நீ செய்த உதவியை மறக்கக் கூடாது என்பதற்காகப் பாறையிலும் எழுதி வைத்தேன்.” என்றான். பிறர் செய்யும் தீமைகளை மண்ணில் புதைத்து விடுங்கள். மற்றவர்கள் செய்யும் உதவிகளை இதயப்பாறையில் செதுக்கி வையுங்கள்.
|
|
|
|