|
குருகுலம் ஒன்றில் மாணவர்கள் காலையில் தோட்டப்பணிகளை கடமைக்காக செய்ய, வயதான குருநாதரோ களைப்பு அடையாமல் ஈடுபாட்டுடன் செய்தார்.“குருவின் தொல்லை தாங்க முடியவில்லை. அதிகாலையில் எழுந்தவுடன் மரக்கன்று நடு; தண்ணீர் பாய்ச்சு என்று தினமும் பாடாய்ப்படுத்துகிறாரே” என மாணவர்கள் புலம்பினர். “இளைஞனாக இருந்த போது இத்தோட்டத்தை நானே பராமரித்தேன். பூக்களையும், பழங்களையும் பார்க்கும்போது மனதிற்குள் அமைதி பிறக்கிறது. இயற்கை தானே நமக்கெல்லாம் சுத்தமான காற்றை தருகிறது” என அடிக்கடி குருநாதர் சொல்லி வந்தார். இருந்தாலும் மாணவர்கள் அதை ஏற்கவில்லை. தோட்ட வேலைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என திட்டம் தீட்டினர். தோட்டக் கருவிகளை ஒளித்து வைத்தனர். அவற்றை காணாமல் வருந்திய குருநாதர், “என் மேல் மதிப்பு இருந்தால், தோட்டக் கருவிகளை ஒப்படையுங்கள். மீறினால் சாப்பிடாமல் இருந்து என் உயிரை விடுவேன்.” என எச்சரித்தார். பதறிய மாணவர்கள் மன்னிப்பு கேட்டதுடன் கருவிகளை ஒப்படைத்தனர். ஒருநாள் மாணவர்களிடம், “எனக்கு வயதாகி விட்டது. நான் இறக்கும் போது இந்த தோட்டத்திலேயே புதைத்து, அதன் மீது மரக்கன்று நடுங்கள். ஒவ்வொரு முறை மரம் நடும் போதும், பூமித்தாய் உங்களை வாழ்த்தி மகிழ்வாள்” என்றார். குரு போதித்தது மாணவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் தான். |
|
|
|