|
ஒரு வயதான மேஸ்திரி வேலையில் இருந்து ஓய்வு பெற விரும்பினார். இந்த முடிவை கான்ட்ராக்டரிடம் தெரிவித்தார். நீண்டகால ஊழியர் ஓய்வு கேட்கிறாரே என்ற வருத்தம் அவருக்கு உண்டானது. இருந்தாலும் மேஸ்திரியிடம், ‘ எனக்காக இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டித் தாருங்கள்‘ என்றார் கான்ட்ராக்டர். அரைமனதாக தலையசைத்தார் மேஸ்திரி.
கட்டிடப் பணி துவங்கியது. மேஸ்திரியின் மனதிற்குள், ‘ஓய்வு பெறப் போகும் நேரத்தில் இந்த கடைசி வீட்டை ஒழுங்காக கட்டுவதால் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது.‘ என எண்ணி ஏனோ தானோ என கட்டினார். ஒருநாள் மேஸ்திரியை அலுவலகத்திற்கு வரவழைத்து, ‘ நமது நிறுவனத்தில் நீண்டநாள் பணி செய்ததால் வெகுமதியாக நீங்கள் கட்டிய வீட்டை தங்களுக்கே அளிக்க விரும்புகிறோம்‘ என்றார் கான்ட்ராக்டர். ’வடை போச்சே’ என சினிமா பாணியில் வருந்தினார் மேஸ்திரி. வாழ்க்கை என்னும் வீட்டுக்கு மேஸ்திரியாக இருப்பது நாம் தான். இன்றைய செயல்கள் தான் நாளைய வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கப் போகிறது. எனவே வாழ்வில் ஒவ்வொரு அடியையும் விழிப்புடன் எடுத்து வையுங்கள்.
|
|
|
|