|
செல்வந்தர் ராமசாமியின் தோட்டத்தில் ஒரு வாழைமரம் குலை தள்ளியது. அதை குலதெய்வமான பெருமாளுக்கு படைக்க விரும்பினார். அதை கொண்டு வந்த தோட்டக்காரனிடம், “அதிலே எத்தனைப் பழமிருக்குன்னு எண்ணு” என்றார் ராமசாமி. “58 பழங்கள்” என்றான் தோட்டக்காரன்.
“சரி... இன்று கோயில் குருக்களிடம் கொடுத்திடு” என்றார்.
மாலையில் புறப்பட்டான் தோட்டக்காரன்.
வழியில் பள்ளி முடிந்து வீட்டுக்குச் செல்லும் தோட்டக்காரனின் மகன் கண்ணன், வாழைத்தாரைச் சுமந்து செல்லும் தந்தையைக் கண்டு ஓடி வந்தான்.
“அப்பா... எனக்கு இரண்டு பழம் கொடேன். பசிக்கிறது.” என அடம்பிடித்தான்.
பிள்ளைப்பாசம் கண்களை மறைத்தது. ’நடப்பது நடக்கட்டும்’ என்றெண்ணி, ஒரு பழத்தைக் கொடுத்தான். ஆனாலும், கண்ணனுக்கு பசியடங்வில்லை.
“இதை யாரிடமும் சொல்லாதே” என்று மகனிடம் சொல்லிவிட்டு, வாழைக்குலையை கோயில் குருக்களிடம் சேர்த்தான். அதைக் கண்ட மக்கள் ராமசாமியின் பக்தியை மெச்சினர்.
அன்றிரவு ராமசாமியின் கனவில் தோன்றிய பெருமாள் ’எனக்குப் பசியடங்கவில்லை’ என்றார்.
“நேத்து தானே வாழைக்குலை அனுப்பினேன்” என பதிலளித்தார். “நான் சாப்பிட்டது ஒரு பழம். மீதி
57 பழங்களும் கணக்கில் சேராது” என்றார் பெருமாள்.
ராமசாமி விழிக்க நடந்ததை விளக்கினார் பெருமாள்.
“பசியால் வாடிய கண்ணன் சாப்பிட்ட ஒன்று மட்டுமே எனக்குரியது. மற்றதெல்லாம் உன் பெருமைக்காக நீ கொடுத்தது. பசியால் வாடுவோருக்கு உணவளித்தால் அவர்களின் கண்களிலே என்னைத் தரிசிக்கலாம். தருபவனும் நானே... பெறுபவனும் நானே...” என்றார்.
“அப்படியானால்....!” என்றார் ராமசாமி.
“பெருமைக்காக பக்தி செலுத்தினால் அது என்னைச் சேர்வதில்லை. அனைவரின் மீது அன்பு செலுத்தினால் நீ இருக்குமிடத்தில் நானிருப்பேன்” எனப் புன்னகைத்தார் பெருமாள். சிறுவன் கண்ணனைத் தேடி புறப்பட்டார் ராமசாமி. |
|
|
|