|
ஒரு கூடை நிறைய மாம்பழங்களும், மற்றொரு கூடை நிறைய மாங்காய்களும் இருக்கின்றன. பழக்கூடையின் அருகில் சென்றால் வாசனை மூக்கைத் துளைக்கிறது. விருப்பமுடன் எடுத்து பழத்தை உண்போம் அல்லவா? பழத்திற்கு உதாரணமாக நல்ல சொற்களையும், புளித்த காய்களுக்கு உதாரணமாக தீயசொற்களையும் சொல்வார்கள் பெரியவர்கள். குழந்தைகளுக்கு நல்ல சொற்களைப் பேசுவதற்கு பெற்றோர் பழக்க வேண்டும். அதிலும் கடவுளின் திருநாமங்களைப் உச்சரிக்க கற்றுத் தர வேண்டும். கடவுளின் திருநாமத்தை உச்சரித்தால் ஆபத்து நீங்கும் என்பதை மகாபாரதம் விளக்குகிறது. சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களைப் பழி வாங்கும் நோக்கத்தில், ஒற்றை ஆடையுடன் இருந்த திரவுபதியை அரச சபைக்கு இழுத்து வந்தான் துச்சாதனன். சபையினர் முன்னிலையில் அவளின் ஆடையை இழுக்கவும் முயன்றான். கைகளால் ஆடையைப் பற்றியபடி திரவுபதி “அனாதரட்சகா! ஆபத்பாந்தவா! கோபாலா, கோவிந்தா” எனக் கண்ணனை அழைத்தாள். அவளின் கூக்குரல் கேட்ட கண்ணனின் மனதில் நன்றி உணர்வு பெருக்கெடுத்தது. அவன் ஒருமுறை சுதர்சனச் சக்கரம் சுழற்றிய போது கையில் காயம் உண்டானது. விரலில் இருந்து ரத்தம் வழியக் கண்ட திரவுபதி, தன் சேலையைக் கிழித்து கட்டு போட்டாள்.
இந்த நிகழ்வை நினைவு கூர்ந்து கண்ணன் ஓடோடி வந்து அபயம் அளித்தான். துச்சாதனன் இழுக்க இழுக்க ஒற்றை ஆடை நீண்டு கொண்டே போனது. “ஏ மனிதா! பிறருக்கு சிறுஉதவி செய்தாலும் அதைப் பன்மடங்காக்கி நான் கொடுப்பேன் என்பதை புரிந்து கொள்” என்கிறான் இச்சம்பவம் மூலம் கண்ணன். ஒருநாள் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது லட்சுமியின் கவனம் தெருவில் நடந்து சென்ற ஒரு ஏழையின் மீது திரும்பியது. நோஞ்சான் உடம்பு, குழி விழுந்த கண்கள், தளர்ந்த நடை, கந்தல் உடை என்றிருந்த அவன் மீது இரக்கப்பட்டாள் லட்சுமி. “என்ன லட்சுமி அவன் மீது பரிதாபமா?” என்றார் விஷ்ணு. “பிரபோ...பாவம். அந்த மனிதனுக்கு ஏதாவது வழி காட்டுங்கள்” என்றாள். பொன்முடிப்பு ஒன்றை அவன் முன் கிடக்கச் செய்தார் விஷ்ணு. அதை எடுப்பான் என காத்திருந்தாள் லட்சுமி. ஆனால் அவனுக்கோ திடீரென ஒரு எண்ணம் முளைத்தது. என்ன அது? கண்களை மூடியபடி தன்னால் நடக்க முடிகிறதா என சோதிக்க விரும்பினான். கண்ணை மூடிக் கொண்டு பொன்முடிப்பை கடந்து சென்றான். “என்ன சுவாமி இது?” “தேவி! கொடுக்க நினைத்தாலும் அதை பெறுவதற்கும் புண்ணியம் என்னும் தகுதி வேண்டுமே! எட்டெழுத்து மந்திரத்தை ஒருமுறை கூட இவன் சொன்னதில்லை போலும்” என்றார் விஷ்ணு. அப்போது “நாராயணா” என ஜபித்தபடி நாரதர் வந்தார். “எட்டெழுத்து மந்திரமான நாராயண திருநாமத்தை இடைவிடாமல் ஜபிப்பவன் தான் ஒருவரே” என்ற எண்ணம் நாரதருக்கு எழுந்தது. இதை அறிந்த விஷ்ணு, பூலோகத்திலுள்ள விறகுவெட்டி ஒருவரை பார்த்து வரும்படி நாரதரை அனுப்பினார்.
அந்த விறகுவெட்டி காட்டில் மரங்களை வெட்டி, சந்தைக்குச் சென்று விற்று விட்டு வருவான். விறகு விற்ற காசில் வாங்கிய அரிசி, பருப்பை மனைவியிடம் கொடுப்பான். அவனது மனைவி வெந்நீர் தயாராக வைத்திருப்பாள். அலுப்பு தீர வெந்நீரில் குளித்தபின் மனைவி, மக்களுடன் சோறு சாப்பிடுவான். பின் வெற்றிலை பாக்கு சுவைத்தபடி சிறிது நேரம் பேசுவான். அதன் பின்னர் கிழிந்தபாயை விரித்து விட்டு “நாராயணா” என ஒரு தடவை கைகுவித்து கடவுளை வணங்கி விட்டு படுத்து விடுவான். கவலை இல்லாத மனம், கடும் உழைப்பு, ஆழ்ந்த தூக்கம்... இதை விட என்ன சுகம் வேண்டும் வாழ்வில்? குடியிருக்க மாடி வீடு, ஏசி அறை, காரில் பயணம், அறுசுவை உணவு பற்றிய சிந்தனை சிறிதுமில்லை அவனுக்கு. விறகுவெட்டியைப் பார்த்த நாரதர் தினமும் ஒரு முறை ’நாராயணா’ எனச் சொல்லும் இவன் நிம்மதியுடன் வாழும் போது, அல்லும் பகலும் நாராயண மந்திரம் ஜபிக்கும் தனக்கு என்ன புண்ணியம் கிடைக்கும் என்ற எண்ணம் உண்டாக, வைகுண்டம் வந்து மகாவிஷ்ணுவிடம் விசாரித்தார். எண்ணெய்க் கிண்ணம் ஒன்றை வரவழைத்த விஷ்ணு, அதை நாரதரின் உள்ளங்கையில் வைத்தார். “ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தாமல் உலகையே சுற்றி விட்டு வா. உனக்கு உண்மை புரியும்” என்றார். “இது என்ன பிரமாதம்?” என்று சொல்லி விட்டு நாரதர் கிளம்பினார். எண்ணெய் சிந்தாமல் இருக்க வேண்டும் என்பதால் வேறு எதிலும் அவரது கவனம் செல்லவில்லை. காலையில் புறப்பட்ட நாரதர் மாலையில் தான் வைகுண்டம் வந்து சேர்ந்தார். “ என்ன நாரதா வலம் வந்து விட்டாயா?” “வந்து விட்டேன் சுவாமி.” “இன்று எத்தனை முறை நாராயண மந்திரத்தை உச்சரித்தாய்?” எனக் கேட்டார் விஷ்ணு. “நேரம் ஏது சுவாமி?” “எண்ணெய் கிண்ணம் ஒன்றை கையில் ஏந்தியதால் ஒரு தடவை கூட சொல்ல முடியவில்லையே. ஏழையான விறகுவெட்டியின் உழைப்பை நம்பி மனைவி, பிள்ளைகள் இருக்கின்றனர். தினமும் அவர்களின் பசி போக்கும் கடமை அவனுக்கு இருக்கிறது. அதற்கிடையில் ஒரு முறையாவது என்னை நினைக்கிறானே? அது உயர்ந்த விஷயம் இல்லையா?” என்றார் மகாவிஷ்ணு. விறகுவெட்டியின் மேன்மை அறிந்து மவுனமாகி விட்டார் நாரதர். கடமையைச் சரிவர செய்பவர்கள், அன்றாடம் அரை நிமிடம் கடவுளை சிந்தித்தாலும் இறையருள் என்னும் செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது நிஜம் தானே! |
|
|
|