|
இளைய சமுதாயமே! லட்சியத்தை முதலில் தேடு. ’சாதிக்கப் பிறந்தவன் நான்’ என்னும் மந்திரத்தை அடிக்கடி சொல். குறிக்கோளை அடைய வேண்டும் என்ற தன்முனைப்புடன் செயல்படு. ’என்னால் முடியும்’ என்னும் நம்பிக்கை முழக்கம் உனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். இந்த பண்புகளை வலியுறுத்தும் லட்சிய வீரர் ஒருவரின் வாழ்வில் நடந்ததை பார்ப்போம்.
ரஷ்யாவின் விமானப்படையில் பைலட்டாக பணிபுரிந்தார் ஓர் இளம்வீரர். பன்னாட்டுப்போர் நடந்ததால் வானில் சர்..சர்... என விமானங்கள் பறந்து கொண்டிருந்தன. எந்த விமானம் எங்கு செல்கிறது என்பது புரியாதபடி போர்மேகம் சூழ்ந்திருந்தது. எதிரிநாட்டினரின் தாக்குதலால் பனிமலையின் அடர்ந்த காட்டில் விமானம் நொறுங்கி விழுந்தது. விமானம் எரிந்ததில் இளம்வீரர் கருகிப் போனதாக விமானப்படையினர் முடிவு கட்டினர்.
ஆனால் அவரோ காட்டிலுள்ள மரத்தின் கிளை ஒன்றில் தூக்கி வீசப்பட்டார். அவரது கணுக்காலில் குண்டு துளைத்திருந்தது. மெல்ல மரத்தை விட்டு கீழிறங்கினார். வலியால் துடித்தார். பசியும், வலியும் நரகத்தைக் கண்முன் கொண்டு வந்தன. கோட் பாக்கெட்டில் இருந்த ரொட்டித்துண்டுகளை எடுத்து பசியாறினார். பனிமலையின் அடிவாரத்தில் இரவு நேரத்தில் தாங்க முடியாத குளிர்காற்று வீசியது.
கனத்த கோட், சூட் அணிந்தும் கூட குளிரில் உடல் நடுங்கியது. பனியின் குளிர்ச்சி உடம்பு மரத்துப் போகச் செய்தது. வலி மறைந்தது. மறுநாள் காலையில் மனம் போன போக்கில் பனிச்சரிவில் உருள ஆரம்பித் தார். இப்படியாக 17 நாட்கள் கழிந்தன.
ஆனால், எப்படியாவது பிழைப்போம் என்ற நம்பிக்கையை மட்டும் அந்த இளம்வீரர் இழக்கவில்லை.
’நம்பினார் கெடுவதில்லை; நான்குமறை தீர்ப்பு’ என்னும் வாக்கு பொய்க்கவில்லை. வெளியில் பனியும், குளிரும் வாட்டினாலும், மனதிற்குள் நம்பிக்கை அவருக்குத் தேவையான உஷ்ணத்தை அளித்தது.
18வது நாள் மக்கள் நடமாடும் சிறு குடியிருப்பு பகுதி கண்ணில் தென்பட்டது. அங்குள்ளவர்கள் அவருக்கு பாலும், ரொட்டியும் கொடுத்தனர். சூடு பறக்க உடம்பைத் தேய்த்து விட்டனர். மரத்துப் போன உடம்பில் உணர்ச்சி வரத் தொடங்கியது. மீண்டும் கணுக்கால் வலி தீவிரமானது. தாங்க முடியாமல் மயக்கம் அடைந்தார்.
ஊரில் உள்ள மருத்துவர் ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.
காலம் கடந்து விட்டதால் வீரரின் கணுக்காலை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை. செயற்கைக்கால் பொருத்தினால் நடக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனாலும் விடாமுயற்சியாலும், தீவிர பயிற்சியாலும் முன் போலவே செயல்படத் தொடங்கினார். மீண்டும் விமானம் ஓட்ட வேண்டும் என்னும் எண்ணம் அவருக்குள் எழுந்தது. விமானப்படையின் உயர்அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
ஆனால், செயற்கை காலுடன் பயிற்சி பெற்று விமானத்தை ஓட்ட ஆரம்பித்தார். அவரை அதிகாரிகள், மீண்டும் படையில் சேர்த்தனர். “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்” என்னும் குறள் போல உறுதி இருந்தால் எண்ணியது கிடைக்கும் என்பதற்கு இவர் உதாரணம். |
|
|
|