Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » தாயன்புக்கு என்ன விலை
 
பக்தி கதைகள்
தாயன்புக்கு என்ன விலை

எமனுக்கு கொடுத்தாலும் கொடுப்பாளே தவிர, யாருக்கும் தன் பிள்ளையை இரவல் கொடுக்க மாட்டாள் தாய். ஆனால் சந்தர்ப்ப வசத்தால் குழந்தைகளைப் பிரிந்த தாய், பிள்ளைகளின் கோபத்திற்கு ஆளாகிறாள். கடைசியில் தன் தவறை எப்படி உணர்கிறார்கள் என்பதை பார்ப்போமா? கட்டடத் தொழிலாளர்களான செல்லம்மா, மாரியப்பன் தம்பதிக்கு கணேஷ், முருகேஷ் என இருமகன்கள். வேலைக்குப் போனால் கூலி கிடைக்கும் என்ற நிலை. இருந்தாலும் வறுமை அறியாதபடி பிள்ளைகளை வளர்த்தனர்.

புதிதாக கட்டுகின்ற கட்டடத்தில் செங்கல்லைச் சுமந்தபடி மாடிப்படி ஏறிய மாரியப்பன், கவனக்குறைவால் விழுந்தான். மருத்துவமனை செல்லும் வழியிலேயே இறந்தான். நிலை குலைந்தாள் செல்லம்மா. ஆனால் நடந்ததை மறைக்கும் விதமாக செல்லம்மாவுக்கு சில ஆயிரங்களை கொடுத்து சரிக்கட்டினார் கட்டட மேஸ்திரி. கணவனை இழந்த துயரத்தில் செல்லம்மா ஓரிரு மாதம் எங்கும் செல்லவில்லை. கையிலுள்ள பணம் கரைந்தது. பிள்ளைகளுக்காக மீண்டும் வேலைக்குப் புறப்பட்டாள்.  வேலி இல்லாத பயிருக்கு ஆபத்து நேர்வது இயல்பு தானே. செல்லம்மாவுக்கு அங்கிருந்த கட்டட மேஸ்திரியால் நெருக்கடி ஏற்படவே, வேலையை உதறினாள்.  வீட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தாள். காலை முதல் இரவு வரை  வேலை இருந்ததால் பிள்ளைகளை கவனிக்க முடியவில்லை. ஒருநாள் இளையவன் முருகேஷ் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் அம்மா வேலை செய்யும் வீட்டிற்கு வந்தான். வீட்டிற்கு வருமாறு அடம் பிடித்தான். தினமும் இது தொடர்கதையானதால் அந்த வேலையும் போனது.   இந்நிலையில் ஒருநாள் செல்லம்மாவின் உறவுக்காரர் பழனியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ”செல்லம்மா... எப்படிம்மா இருக்க?”

”பழனிமாமா! நீங்க எப்படி இருக்கீங்க?” என பதில் கேள்வி கேட்டாள். ”பொய் சொல்லாத செல்லம்! உன் கண்களே நிலைமையைச் சொல்லாமச் சொல்லுது” என்றதும்  மனம் உடைந்தாள். ”மாமா! கணவரின் துணை இல்லாம பெண் வாழ்றது சவாலா இருக்கு. மூத்தவனுக்கு 15 வயசாச்சு. இளையவனுக்கு 12 வயசாச்சு. இவங்களை நல்லபடியா படிக்க வைக்கவும் என்னால முடியல.  நிர்கதியா நிற்கிற எனக்கு வழி காட்டத் தான் கடவுள் உங்களை அனுப்பியிருக்காரு” என்று நடந்ததைச் சொல்லி அழுதாள். செல்லம்மாவுக்கு உதவும் எண்ணத்துடன் பழனி ஒரு யோசனையை சொன்னார். அதன்படி பிள்ளைகளுடன் செல்லம்மா புதிய உடை அணிந்து கொண்டு குதூகலமாக நடந்தாள். ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு நகரத்தை நோக்கி விரைந்தனர்.

மூத்த மகன் கணேஷ், ”அம்மா! நாம எங்க போறோம்? எனக் கேட்டான். அவர்கள் நுழைந்த கட்டடத்தின் முகப்பில், ’அன்பு காப்பகம்’ என எழுதப்பட்டிருந்ததை காட்டினாள். ”இங்கே எதுக்குமா?” எனக் கேட்டான்.  ”என் கண்ணுகளா...இங்க தான் நீங்க தங்கப் போறீங்க! சாப்பாடு, துணிமணி எல்லாம் கிடைக்கும்.  இங்கிருந்தே பள்ளிக்கூடம் போகலாம். நல்லா படிச்சு பெரிய வேலைக்கு நீங்க போகணும்” என்றாள். அம்மாவின் பேச்சு கணேஷுக்கு பிடிக்கவில்லை. அரசு அதிகாரி ஒருவரின் வீட்டில் வேலை செய்யத் தயாரானாள் செல்லம்மா. ஒருநாள் காப்பகத்திற்கு அவள் வந்தபோது, இரு மகன்களும் முகம் கொடுத்து பேசவில்லை. இனிமேல் அம்மாவை சந்திக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், ஆதரவளித்த அரசு அதிகாரிக்கு வெளியூர் மாறுதல் கிடைக்கவே, செல்லம்மாவும் அவர்களுடன் புறப்பட்டாள். பதினைந்து ஆண்டுகள் ஓடின.

வயோதிகத்தால் செல்லம்மாவால் வேலை செய்ய முடியவில்லை. அதிகாரியும், அவரது மனைவியும் இறந்து விட்டனர். அதன் பின் செல்லம்மாவை ஆதரிப்பார் யாருமில்லை.  அன்பு காப்பகத்திற்கு வந்த செல்லம்மா, பிள்ளைகள் குறித்து விசாரித்தாள்.  மூத்த மகன் கணேஷ் நல்ல வேலையில் இருப்பதும், அவனுடைய பராமரிப்பில் தம்பி இருப்பதும் தெரிய வந்தது. செல்லம்மாவை ஏற்க முடியாது என கணேஷ் மறுத்தான். மனம் நொந்த அவள்,  ”பத்து மாதம் இந்த வயிற்றில் உன்னைச் சுமந்தேனே... அதற்குரிய தண்டனையா இது” என சொல்லி புறப்பட்டாள்.

ஒருநாள் வேலை விஷயமாக வெளியூர் சென்றான் கணேஷ். ஓட்டல் ஒன்றில் தங்கினான். சிறுது நேரத்தில் திடீர் அழைப்பு. உடனடியாக அலுவலகம் வர உத்தரவிட்டார் மேலதிகாரி. அறையை காலி செய்வதாகச் சொன்ன போது அட்வான்ஸ் பணத்தில் ஒருநாள் வாடகையை கழித்து விட்டுக் கொடுத்தது ஓட்டல் நிர்வாகம். ஒருமணி நேரம் கூட தங்காத அறைக்கு ஒருநாள் வாடகையா என யோசித்தான். யாரோ தலையில் அடித்தது போல இருந்தது. பெற்ற தாயின் அருமை புரிந்தது அவனுக்கு. பத்து மாதம் சுமந்தாளே தாய்... அவளுக்கு வாடகை தர என்னால் ஒருபோதும் முடியாது  என்ற சிந்தனை எழுந்தது. அழுகை முட்டியது. மனம் நிறைய பாசம், நன்றியைச் சுமந்தபடி தாயைப் பார்க்க தம்பியுடன் விரைந்தான் கணேஷ்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar