|
நாரத மகரிஷி ஒரு சமயம் வைகுண்டத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பக்தன் அவரை வழிமறிக்க, காரணம் புரியாத நாரதர், “ஏம்பா! என்னை ஏன் மறிக்கிறாய்?” என்று கேட்டார். “சுவாமி! எனக்கு குழந்தைகளே கிடையாது. எனவே எனக்குத் தாங்கள்தான் குழந்தைபாக்கியத்தை பகவானிடம் இருந்து பெற்றுத் தரவேண்டும்?” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான். “சரி’ என்று ஒப்புக் கொண்ட நாரதரும், வைகுண்டம் சென்றதும் பகவானிடம் தன் பக்தனின் குறையை எடுத்துக் கூறினார். அதற்கு பகவான், “நாரதரே! இப்பிறவியில் அவனுக்கு மகப்பேறு வாய்க்கும் பாக்கியம் இல்லை!” என்று சொல்லிவிட, நாரதரும் அந்தச் செய்தியை பக்தனிடம் கூறிவிட்டுச் சென்றுவிட்டார். வருடங்கள் பல உருண்டோடின. ஒருநாள் அந்த பக்தனின் தெருவழியே சென்ற நாரதர் அவன் வீட்டிற்கு முன் ஐந்தாறு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார். அக்குழந்தைகள் எல்லாம் அந்த பக்தனின் குழந்தைகள்தான் என்று நன்கு விசாரித்துத்தெரிந்துகொண்டார். உடனே பகவானைக் காண வைகுண்டம் நோக்கிப் புறப்பட்டார்.
பகவானிடம், “சுவாமி! அந்த பக்தனுக்கு இப்பிறவியில் குழந்தைபாக்கியம் இல்லை என்றீர்களே... இப்போது மட்டும் எப்படி அவனுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது?” என்று கேட்டார் நாரதர். பகவான் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல், அந்த பக்தனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறு கூறிவிட்டார். நாரதர் திரும்பி வந்து பக்தனிடம் கேட்க, “சுவாமி! ஒரு சமயம் பக்தியில் சிறந்து விளங்கிய இறையடியார்கள் சிலர் என் வீட்டிற்கு வருகை தந்தனர். நான் அவர்களை அன்புடன் வரவேற்று, அவர்கள் மனம் கோணாமல் நன்றாக உபசரித்தேன். அவர்கள்தான் மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் செல்லும் போது எனக்கு மகப்பேறு உண்டாக நல்லருள் புரிந்தனர்!” என்றான் சந்தோஷம் பொங்க. “பகவானைக் காட்டிலும் அடியவர்க்கு அத்தனை உயர்வா?” என்ற ஐயத்துடன் மீண்டும் வைகுண்டம் சென்ற நாரதரை புன்முறுவலுடன் வரவேற்ற பகவான், “தாம் நியதிக்கு மீறி ஏதும் செய்ய இயலாது. ஆனால் அடியார்கள் அனைத்தும் அருளும் பேராற்றல் கொண்டவர்கள். அவர்கள் வேண்டுவோருக்கு வேண்டுவன தந்து அருள்புரிவதைத் தன்னாலும் தடுக்க முடியாது” என்று புன்னகையுடன் கூற, நாரதருக்கு அடியாரின் பெருமைகள் புரிந்தன.
|
|
|
|