|
பக்திக்கு இலக்கணம் வகுத்தவர்கள் நம் முன்னோர். பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்கள் அவர்கள். வரகுண பாண்டியன் என்ற மன்னன் சிவ பூஜையும், சிவ கைங்கரியமுமே தனது வாழ்க்கையின் பொருள் என வாழ்ந்து வந்தான். அவனது ஆட்சிக் காலத்தில் ஒரு நாள் திருவிடைமருதூர் சிவன் கோயிலுக்காக அளிக்கப்பட்ட நிலத்தில் விளைந்த எள்ளை, கோயிலின் எதிரே காயவைத்திருந்தனர். அப்போது அங்கே வந்த ஒருவன் ஒரு கைப்பிடி எள்ளை எடுத்து வாயில் போட்டபோது, மன்னன் பார்த்துவிட்டான. ஆனால், எள்ளை அள்ளியவனோ! எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதைச் சாப்பிடுவதிலேயே குறியாயிருந்தான். மன்னன் அவனை அழைத்து “சிவன்கோயிலில் எள்ளை சாப்பிட்டால் என்ன தண்டனை கிடைக்கும், தெரியுமா?” என்றான். “தெரியும்” என்று நிதானமாகச் சொன்னதுடன், கிடைக்கப்போகும் தண்டனையை அனுபவிக்க காத்திருந்தவனைப் போல் சலனமில்லாமல் காணப்பட்டான்.
“உனக்கான தண்டனை என்னவென்று தெரியுமா?” என்று கேட்டான் அரசன். “தெரியும்... அடுத்த பிறவியில் எருதாகப் பிறந்து, இந்த கோயிலின் வேலைகளுக்காகப் பயன்படுவேன்!” என்றான் மகிழ்வோடு. அதைக்கேட்ட அரசன், “வாயைத் திற!” என்றான் அதட்டலாக. ‘சொல்பவன் அரசனாயிற்றே ’ என்று பயந்து, நடப்பது நடக்கட்டும் என்று வாயைத் திறந்தான். அவன். பாண்டியன் உடனே அவன் வாயில் விரலைவிட்டு கொஞ்சம் எள்ளை எடுத்துத் தன் வாயில் போட்டுக் கொண்டான். எல்லோரும் திகைத்து நிற்க, “நீ எருதாகப் பிறந்து கோயிலுக்கு உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதால், நானும் உன் வாயிலிருந்த எள்ளை முழு மனதோடு எடுத்துத் தின்றேன். நானும் எருதாகப் பிறந்து உனக்கு ஜோடியாக வந்து நாமிருவரும் சிவன்கோயில் தொண்டு செய்து மகிழலாம்” என்றான். மன்னன். வரகுணபாண்டியனின் மேன்மையான உள்ளத்தை நினைத்து, வியந்து போனார்கள் எல்லோரும். பக்தி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணம் இருக்க முடியுமா? |
|
|
|