|
ஒரு சமயம் சந்திரன், குருவான பிரஹஸ்பதியிடம் பாடங்கள் அனைத்தும் கற்று முடித்தான். எல்லாம் அறிந்ததும், தான் இப்போது. குரு போலவே அறிவு படைத்தவன்; இனி தனக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வம் ஏற்பட்டது அவனுக்கு அதை உணர்ந்த குரு, அவனுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தார். சந்திரனை அழைத்து, அப்போதுதான் பூலோகத்தில் பிறந்திருந்த ஒரு குழந்தையைக் காட்டி, அதற்கு ஜாதகம் கணிக்குமாறு சொன்னார். சில நிமிடங்களிலேயே, ஜாதகத்தைக் கணித்த சந்திரன், “இந்தக் குழந்தையின் ஆயுள் ஓர் ஆண்டு மட்டுமே... அடுத்த வருடம் இதே நாளில் பாம்பு தீண்டி இக்குழந்தை இறந்து விடும்” என பலனும் சொன்னான். “சரி! நீ போய்விட்டு ஒரு வருடம் கழித்து வா!” என அவனை அனுப்பினார், குரு.
ஓராண்டு முடிந்தது. அன்று குழந்தையின் பிறந்தநாள். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை வானில் இருந்து சந்திரனும் பிரஹஸ்பதியும் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென தொட்டிலின் இரும்புச் சங்கிலி மேல் நாகமொன்று நெளிந்து வந்தது. அதைக் கண்ட சந்திரன் ஏக மகிழ்ச்சியோடு “நான் சொன்னது அப்படியே நடக்கிறது பாருங்கள். இன்னும் சில நிமிடங்கள்தான் அச் சிசுவின் வாழ்வு!” என கர்வத்தோடு குருவிடம் சொன்னான். குழந்தை மேலிருந்து தம் பார்வையை சற்றும் விலக்காமல், “மேற்கொண்டு நடப்பதைப் பார்” என்றார், குரு. பாம்பு வேகமாக இறங்க, அந்த சமயம் திடுமென்று கண் விழித்தது குழந்தை. பளபளப்பான பாம்பை ஏதோ விளையாட்டு பொம்மை என நினைத்து, அதைப் பிடிக்க கையைக் காலை உதைத்துக் கொண்டு துள்ள, அந்த வேகத்தில் பாம்பு சங்கிலியின் இரு வளையங்களுக்குள் சிக்கி நசுங்கி, இறந்து விழுந்தது. தன் கணிப்பு தவறானதை நினைத்து பதறிப்போனான், சந்திரன். இக் குழந்தை தப்பிக்க வேண்டுமாயின், ஒரே வழி, குரு பார்வை மட்டுமே. ஆனால் ஜாதகத்தில் குரு பார்வையே இல்லையே என யோசித்துக் குழம்பி, தன் குருவிடமே விளக்கம் கேட்டான்.
மெல்ல சிரித்தார், பிரஹஸ்பதி. “குழந்தையின் ஜாதகத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன, இத்தனை நேரமும் நான்தான் அதை வைத்த விழி வாங்காது பார்த்துக் கொண்டிருந்தேனே, அது புரியவில்லையா உனக்கு?” என்றார். சந்திரன் புரிந்து கொண்டான். வெறும் படிப்பைக் கொண்டு, தன்னை குருவுக்கு சமமாக நினைத்து அகந்தை கொண்டது தவறு என்பதை உணர்ந்தான். வருந்தி, மன்னிப்பை யாசித்த அவனுக்கு ஆசியளித்து வாழ்த்தினார், குரு. |
|
|
|