|
திருச்சியில் வியாபாரி ஒருவர் சிறிய அளவில் அரிசி வியாபாரம் செய்து வந்தான். ஸ்ரீரங்கத்திற்கு அடிக்கடி சென்று அரிசி விற்றான். ஆனால் ஸ்ரீரங்கநாதரை ஒரு முறை கூட தரிசிக்கவில்லை. ஒருசமயம் அவனது வியாபாரம் மிகவும் மந்தமாகிவிட, என்ன செய்வது என யோசித்தான். அவனுக்கு ஓர் உபாயம் தோன்றியது. அதன்படி பேரருளாளனான ஸ்ரீரங்கநாதரின் பெயரால், தான் விற்கும் அரிசியை ‘திருவரங்கம் அமுதுபடி’, ‘ஸ்ரீரங்கம் நல்லரிசி’ என்று கூவி விற்க முடிவு செய்தான். அடுத்த நாள் முதல் அப்படியே கூவி விற்றதில், மளமளவென்று அவனுடைய அரிசி அத்தனையும் விற்றது. வியாபாரம் செழித்து, விரைவில் செல்வந்தனானான்.
நாட்கள் ஓடின. வயதாகி அந்த வியாபாரி ஒரு நாள் உயிர் நீத்தார். யமகிங்கரர்கள், நரகத்திற்கு அழைத்துச் செல்ல வந்தனர். அதே சமயம் வைகுண்டத்தில் இருந்து நாராயண தூதர்கள் வந்து, “இவன் பரமபக்தன். இவனை வைகுண்டத்திற்கு எழுந்தருளப்பண்ணவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்றார்கள். யமகிங்கரர்களுக்கு எதுவும் புரியவில்லை. “பொய் சொல்லி ஜனங்களை வஞ்சித்துப் பிழைத்தவனுக்கு உரியது நரகம்தானே?’ எனக் கேட்டார்கள். “இவன் ஸ்ரீரங்க திவ்யதேசத்தின் திருநாமத்தை தினமும் வாய் விட்டுக் கூவி வந்தான். அந்த நாமத்தின் மகிமையால் இவனுக்கு வைகுந்தம் கிடைத்துள்ளது. இவன் புண்ணிய பாக்கியசாலி!” எனக் கூறினர் நாராயண தூதர்கள். ஸ்ரீரங்கத்தின் மகிமை சொல்லவும் அரிது! |
|
|
|