Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஊர்ந்து சென்ற துன்பப்பாம்பு!
 
பக்தி கதைகள்
ஊர்ந்து சென்ற துன்பப்பாம்பு!

அன்று மாலை என் வாடிக்கையாளர் நாதன் என்னைக் காண வந்தார். வாடகைக்கார் நிறுவனம் நடத்தும் அவருக்கு வயது 45. நல்ல வருமானம். மனைவி, மகன், மகள் என நிறைவான வாழ்க்கை.   ஆனாலும் மகிழ்ச்சி இல்லை.  “நான் இப்போ பிரச்னையில மூழ்கிக்கிட்டு இருக்கேன். அதான் உங்ககிட்ட அழுதுட்டுப் போக வந்தேன். “என் மனைவிக்கு அடிக்கடி தலைவலி வரும். ஏதாவது மருந்து சாப்பிடுவா. போன வாரம் ஸ்கேன் பாத்துட்டு மூளையில கட்டி இருக்குன்னு சொல்லிட்டாங்க. ஆப்பரேஷன் பண்ணனுமாம். கேன்சரா இருந்தா உயிருக்கே ஆபத்துங்கறாங்க. காலேஜுல படிக்கிற என் பொண்ணு, காதலனோட ஊர் சுத்துறதா பேச்சு அடிபடுது. என் மகன் படிப்புல சுமாரா இருக்கான். என் காரு ஒண்ணு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. கோர்ட்டு, கேசுன்னு வேற அலையுறேன்.” நான் மவுனம் சாதித்தேன்.  “தினமும் பச்சைப்புடவைக்காரிக்கு பூஜை பண்றேன். வாரம் தவறாம கோயிலுக்குப் போறேன். புதுகார் எடுத்தா முதல்ல அவ காலடில சாவி வச்சிப் பூஜை பண்ணிட்டுத்தான் சவாரிக்கு அனுப்புறேன். ஆனா அவ மேல வச்சிருக்க நம்பிக்கை போயிடுமோ தோணுது சார்.”

நாதன் கிளம்பிய பின்னும் அவர் வார்த்தைகள் என் காதில் ஒலித்தன.

ஆபீசில் இருந்து கிளம்பினேன். சாலை முனையில் சென்ற போது போக்குவரத்துத்துறை அதிகாரிகள் காரை நிறுத்தினர். ஓட்டுனர் உரிமம், பதிவுச் சான்றிதழ்களைக் காண்பித்தேன்.

“சார்... ஆர்.டி.ஓ., மேடத்தை பஸ் ஸ்டாண்டில இறக்கி விட முடியுமா?”

தலையசைத்தேன்.

அந்தப் பெண் அதிகாரியைப் பார்த்ததும் மரியாதை எழுந்தது. அதிகாரிக்கு ஊழியர்கள் சல்யூட் அடித்தனர்.

காரின் இருக்கையில் அமர்ந்தாள் அந்த அதிகாரி.

“போகலாமா... மேடம்?”

’தாயே’ என அழைப்பாயே...இன்று என்னாச்சு உனக்கு?”

சட்டென திரும்பினேன். புன்முறுவலுடன் நின்றாள் பச்சைப்புடவைக்காரி.

“உன் நண்பரின் பிரச்னை பற்றிப் பேசவே வந்தேன். வண்டியை எடு சொல்றேன்.”

சாலையில் சென்ற போது வேகத்தடை வரவே, வேகத்தை குறைத்தேன்.  

“வண்டியை ஓரம் கட்டு.”

செய்தேன்.

“இதுவரை வேகமாக வந்த நீ திடீரென ஏன் வேகத்தைக் குறைத்தாய்?”

“இது கூடவா புரியவில்லை தாயே? வேகத்தடையில் வேகமாக சென்றால் உங்களுக்கும் நோகும். வண்டிக்கும் நல்லதல்ல.”

“சபாஷ். இதை நாதனிடம் சொல்.”

“புரியவில்லையே?”

“தடை இல்லாத நால்வழிச் சாலையில் வேகமாகப் பறக்கலாம். ஆனால் வேகத்தடையில் மெதுவாகத் தான் செல்ல வேண்டும். அப்போது தான் வண்டிக்கும் பயணிக்கும் நல்லது”

“இது நாதன்.. ..”

“அந்த மனிதர் தேவையற்ற பரபரப்புடன் இருக்கிறார்.
மனைவியின் சிகிச்சை, மகளின் பிரச்னை, விபத்து தொடர்பான வழக்கு எல்லாம் உடனே முடிய வேண்டும் எனத் துடிக்கிறார். முன்ஜென்ம வினைகள் அவரைத் தாக்கும் நேரம் இது.  வாழ்க்கை என்னும் அவரது வண்டி, வேகத்தடையின் மீது செல்வதால் மெதுவாக போகச் சொல். மனைவி, குழந்தைகளிடம் நிறைய நேரம் பேசட்டும். அவர்கள் மனதில் இருப்பதை அறியட்டும்.
மேகத்திலிருந்து வெளிப்படும் சூரியனாக ஒருநாள் துன்பங்களிலிருந்து வெளி வருவார். அப்போது வாழ்வு பிரகாசிக்கும்.”

“நன்றிம்மா. துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற பதட்டத்தில் மனிதர்கள் எதையாவது செய்து பெரிய துன்பத்தில் மாட்டுகிறார்களம்மா.”

“ஆமாம். இது தான் செய்ய வேண்டியது என்ற தெளிவிருந்தால் செய்யலாம். இல்லாவிட்டால் பொறுப்பது நல்லது.  

“அங்கே பார்.”

அது சென்னை பெசன்ட் நகர் கடற்கரை. மாலை நேர இருள் தொடங்கியது.

இரு இளம்பெண்கள் மணலில் படுத்தபடி பேசிக் கொண்டிருந்தனர். கடல் காற்றின் சுகத்தில் சற்று நேரத்தில் கண்ணயர்ந்தனர். நிலா வெளிச்சத்தில் ஏதோ அசைவது போல் உணர்ந்த ஒரு பெண் சட்டென எழுந்தாள். கண்ட காட்சி அவளை திடுக்கிட வைத்தது.   
ராஜநாகம் ஒன்று தோழியின் மீதேறி ஊறத் தொடங்கியிருந்தது.

“வீல்” என அலற வேண்டும் என எழுந்த உந்துதலை அடக்கிக் கொண்டாள்.

’ச்சூ போ’ என்று நாயை விரட்டலாம்; ஆனால் பாம்பை எப்படி விரட்டுவது?

தோழியின் உயிரைக் காப்பாற்ற யோசித்தாள்.

பாம்பு இருக்கும் இடம் விட்டுத் தள்ளிச் சென்று, தோழியின் தலைமாட்டில் போய் நின்றாள். மெதுவாகக் குரல் கொடுத்து அவளை எழுப்பினாள்.

“உமா, அவசரப்பட்டு எழுந்திராத. நான் சொல்ற வரைக்கும் அப்படியே படுத்துக்கோ. உன் நல்லதுக்குத் தான் சொல்றேன். உடம்பைக் கொஞ்சம் கூட அசைக்காம பிணம் போல இரு”

அவள் மீது பாம்பு ஊர்ந்து செல்வதைத் தட்டுத் தடுமாறிச் சொல்லி விட்டாள்.

முதலில் அதிர்ந்தாலும் மனதைத் தேற்றிக் கொண்டு, நிலைமையைச் சமாளித்தாள் உமா.

பச்சைப்புடவைக்காரியின் திருநாமங்களை மனதிற்குள் சொல்லியபடி அசையாமல் கிடந்தாள். பத்து நிமிடத்தில் உடம்பின் மீதேறிய பாம்பு இறங்கி சென்றது. அதன்பின் தோழியைத் தழுவி நன்றி சொன்னாள் உமா.

“அந்த மனிதர் நாதன் மீதும் துன்பம் என்னும் ராஜநாகம் ஊர்ந்து செல்கிறது.  அசைந்தாலோ, முரட்டுத்தனமாகத் தப்பிக்க முயன்றாலோ பாம்பு கொத்தும். அமைதி காத்தால் எல்லாம் சரியாகும். ஒவ்வொரு இருண்ட இரவுக்குப் பின்னும் ஒளிமயமான விடியல் உண்டு.

“தாயே.. அவரது துன்பம் தீர உங்களுக்கு அர்ச்சனை, அபிஷேகம், தங்கத்தேர் என பரிகாரம் செய்யலாமா?”

“வேண்டாம். நாதனிடம் பணம் இருப்பதால் மனைவிக்கு ராஜவைத்தியம் பார்க்க முடிகிறது. ஆனால் நோயில் தவிக்கும் ஏழைகள் பலர் வழியின்றித் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவலாம். ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு உதவினால் அவரது மகளின் பிரச்னை தீரும். ஏழை மாணவர் படிப்புக்கு உதவினால் மகன் ஒழுங்காகப் படிப்பான்”

நான் அவளை பார்த்தபடி கண்ணீர் சிந்தினேன்.

“துன்பத்தை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்ற பாடம் உனக்கும் தான். புரிந்ததா?”

“இல்லை, தாயே. எனக்கு பொருந்தாது.”

“என்ன தைரியம்? என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டாயா?”

“யார் செய்தாலும் தப்பு தப்புத்தான் அம்மா?”

“என்ன உளறுகிறாய்?”

“தாயே! நான் உங்கள் கொத்தடிமை. எனக்குத் துன்பம் வந்தது என்றால்... நான் துன்பப்பட வேண்டும் என நீங்களே நினைக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்!. நீங்களாகப் பார்த்துக் கொடுக்கும் துன்பம், கோயிலில் தரும் குங்குமத்தை விடப் புனிதமானது தாயே. அதை மறுக்க நான் என்ன பித்தனா?

“என் மீது ஊறிச் செல்லும் துன்பம் என்னும் நாகம் தீண்டவேண்டும் என நீங்கள் விரும்பினால் அதை விடச் சிறந்த இன்பம் வேறில்லையம்மா!! பாம்பு  தீண்டி உயிர் பிரியும் போதும் மனதிலும், வாயிலும் உங்கள் பெயர் இருந்தால்... அதை விட பாக்கியம் வேறில்லை?”

அவள் சிரித்தபடி மறைந்தாள். நான் காருக்குள் தனியாக அமர்ந்தபடி அழுதேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar