|
பிரளயம் என்னும் அழிவுக்காலம் நெருங்கியது. வெள்ளம் சூழ்ந்தால் உலகம் அழியுமே என வருந்திய பிரம்மா, தனது படைப்புக்கருவிகளை காக்க சிவனின் உதவியை நாடினார்.
”ஒரு கும்பத்தை எடு. அதில் அமுதத்தை நிரப்பு. படைப்புக்கருவிகளை உள்ளே வைத்து கும்பத்தின் வாயில் மாவிலை, தேங்காய் வை. குடத்தின் நான்குபுறமும் வேதங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள், புராணங்களை வை. நூலைச் சுற்று. ஒரு உறியில் அந்த கும்பத்தை வைத்து பிரளய வெள்ளத்தில் மிதக்க விடு. மற்றதை பார்த்துக் கொள்கிறேன்” என்றார் சிவன். பிரம்மாவும் அப்படியே செய்தார். மிதந்த கும்பம் ஓரிடத்தில் நின்றது. வேடன் வடிவில் தோன்றிய சிவன், அம்பு வில்லுடன் வந்து கும்பத்தின் மீது அம்பு தொடுத்தார். கும்பத்தின் கோணம் (மூக்குப்பகுதி) உடைந்தது. அந்த இடம் குடமூக்கு, கும்பகோணம் எனப் பெயர் பெற்றது.
கும்பம் உடைய அதனுள் இருந்த அமுதம் தரையில் சிந்தியது. அதுவே மகாமகக் குளம். கும்பத்தில் இருந்த பொருட்கள் அங்கங்கே சிதறின. தர்ப்பை ஒரு லிங்கமாக மாறியது. கும்பத்தின் மேலிருந்த தேங்காய் ’நாரிகேள லிங்கம்’ எனப் பெயர் பெற்றது. ’நாரிகேளம்’ என்றால் தென்னை. அமுதம் சிதறிக் கிடந்த மணலை சிவன் கையில் எடுத்து லிங்கமாக வடித்தார். அதுவே கும்பேஸ்வரர் என்றும், அமுதேஸ்வரர் என்றும் பெயர் பெற்றது. பிரளய வெள்ளம் வடிந்ததும் நிலைமை சீரடைந்தது. சிவபெருமான் லிங்கத்தில் ஐக்கியமாகி இருக்கும் தகவல் பார்வதியை எட்டியது. அவளும் இங்கு வந்தாள். அவளை ’மங்களநாயகி’ என அழைக்கின்றனர். அதன் பின் மீண்டும் இறையருளால் உயிர்கள் படைக்கப்பட்டன. அதில் மனிதர்கள் தங்களின் பாவம் தீர அவ்வப்போது புனித நதிகளில் நீராடினர். பாவச்சுமையை தாங்க முடியாத கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கோதாவரி, பொன்னி (காவிரி), சரயு, கன்னியாகுமரி, பயோட்டணா என்ற ஒன்பது நதிகளும் சிவபெருமானிடம் விமோசனம் கேட்டனர். “கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமகத்தன்று நீராடினால் பாவம் தீரும்,” என்றார் சிவன். இதன்படி நவநதி கன்னியரும் மாசிமகத்தன்று நீராடினர். இந்நாளில் நீராடி பாவம் நீங்கப் பெறுவோம். |
|
|
|