|
“நான் தேனியிலருந்து பேசறேங்க ஐயா. எங்க வூட்டுக்காரரு தவறிட்டாருங்க. சொத்து நிறைய இருக்கு. ஆனா கோர்ட்டு கேஸ் நடக்குது. என் பொண்ணுக்கு 28 வயசாகியும் வரன் அமையல. இந்த பிரச்னை எப்ப தீரும்னு பச்சைப்புடவைக்காரிட்ட கேட்டுச் சொல்லுங்க?” போனில் பெண் குரல். “பிரார்த்தனை பண்ணிக்கறேம்மா. சீக்கிரமே...” “அந்த கதை வேண்டாம்யா. என்ன பரிகாரம் பண்ணனும். ஆத்தாகிட்ட கேட்டுச் சொல்லுங்க.” முக்கால் மணிநேரம் மன்றாடியும் ”என் பிரச்னையை தீர்க்கிற சக்தி இருந்தும் உதவாத உங்களுக்கு ஆத்தா கூலி கொடுப்பா.” என சாபமிட்டு இணைப்பைத் துண்டித்தார். அதன்பின் மனம் எதிலும் ஒட்டவில்லை. அன்றிரவு சென்னை செல்ல வேண்டியிருந்தது. ரயில் கிளம்பும் நேரத்தில் ஒரு பெண் ரயிலில் ஏறினாள். பட்டுப்புடவையும் தங்கமுமாக ஜொலித்த அவள் புன்னகைத்தாள்.
“தாயே, நீங்களா?” “நானே தான்! தேனிக்காரி சொன்னதை நினைத்து வருத்தப்படுறியாக்கும்.” தலையசைத்தேன். “அவள் சொன்னது உண்மைதான். உனக்கு அந்த சக்தி இருக்கிறது.” “தாயே!” “நீ என்னுடன் பேசுகிறாய். அதன் உட்பொருள் என்ன? உன் ஆன்மாவின் ஆழத்தில் இருக்கும் அந்த நித்திய சத்தியப் பொருளுடன் தொடர்பு உண்டாகியிருக்கிறது. அந்த சத்தியம் நான் தான். அத்தொடர்பு இருக்கும் வரை உன்னால் மற்றவர் பிரச்னையை தீர்க்க முடியும்” “தாயே!” நான் அலறினேன்!. “ஆனால் அதில் பக்கவிளைவும் உண்டு. அங்கு நடப்பதைப் பார்.” தமிழகத்தின் தென்கோடியில் ஒரு சிறுநகரம். அங்குள்ள அம்மன் கோயிலை ஒட்டிய ஆசிரமத்தில் இளம்துறவி ஒருவர், சீடர்களுடன் இருந்தார். பக்தர்கள் தங்களின் பிரச்னைகளைச் சொல்லும் போது துறவி “எங்காத்தா கைவிட மாட்டா” என தைரியம் சொல்வார்.
சிலருக்கு பிரச்னை தீர்ந்துவிடும். அவர்களும் பூ, பழம், பணத்துடன் வருவார்கள். “சாமி உங்களால தான் சொத்து திரும்பக் கெடைச்சது” என காலில் விழுவார்கள். “எல்லாம் அவளோட வேலை. இதுல என் பங்கு ஒன்றுமில்லை.” என்பார் துறவி. ஒருநாள் 35 வயதில் ஒருவர் தேடி வந்தார். “சாமி என் பேர் குமார். டாக்டரா இருக்கேன். எனக்குப் புற்று நோய் வந்துருச்சி. இன்னும் மூணுமாசம் தான்னு சொல்லிட்டாங்க. சாகறதப் பத்திக் கவலைப்படல சாமி. செத்தா என் குடும்பம் அனாதை ஆயிடுமே.” மனம் இளகிய துறவி அம்மனின் சிலையை பார்த்துக் கொண்டிருந்தார். திடீரென அவரது மேனி சிலிர்த்தது. “நீ என்கூட ஆசிரமத்துல பத்துநாள் தங்கணும். நான் கொடுக்கற சாப்பாட சாப்பிடணும். உன் உயிருக்கு நான் உத்தரவாதம்.” குமார் அவரது காலில் விழுந்து வணங்கினான்.
சீடர்கள் மூலம் குமாரை ஆசிரமத்தில் தங்க ஏற்பாடு செய்தார் துறவி. தினமும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து காலைக் கடனை முடித்து விட்டு, துறவியின் அருகில் ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பான் குமார். பூஜை முடிந்ததும் குமாரை இறுகத் தழுவிக் கொள்வார் துறவி. அப்போது துறவி குங்குமத்தை குமாரின் நெற்றியில் இடுவார். அதன் பின் குமாருடன் சேர்ந்து சாப்பிடுவார். இப்படி பத்து நாள் முடிந்ததும், “நீ புறப்படலாம். நாளை மருத்துவமனையில் பரிசோதித்து விட்டு முடிவை வந்து சொல். என் தாய் உன்னை கைவிடமாட்டாள்.” மறுநாள் மாலையில் வந்த குமார் துறவியின் காலில் விழுந்து கதறினான். “நோய் குணமாயிருச்சி சாமி. புற்று இருந்த அடையாளம் கூட இல்லைன்னு சொல்லிட்டாங்க” முற்றிய புற்றுநோய் குணமான விஷயம் தலைப்புச் செய்தியானது. துறவியின் புகழ் பரவியது. அவரைத் தேடி பக்தர்கள் வர ஆரம்பித்தனர். சீடர்கள் இதைப் பயன்படுத்தி ஆசிரமத்தைச் சென்னைக்கு மாற்றினர். விரைவில் பிரமாண்டமான ஆசிரமம் கட்டப்பட்டது. துறவியின் வெற்றி சில ஆண்டுகள் நீடித்தது.
புற்றுநோயின் இறுதிக்கட்டத்தில் இருந்த ஒரு பெண்ணை துறவியிடம் அழைந்து வந்தனர். அவளது நிலை கண்ட துறவிக்கு பயம் வந்தது. அதை மறைத்தபடி அம்மனின் பெயரைச் சத்தமாகச் சொல்லி திருநீறு இட்டார். அடுத்த நொடி அவள் மயங்கி விழுந்து இறந்தாள். விஷயத்தை மறைக்க சீடர்கள் முற்பட்டனர். துறவிக்கு களங்கம் சேர்க்க இறந்த பெண்ணின் உடலை அலங்கரித்து உட்கார வைத்ததாக புகார் கூறினர். அதனால் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார். துறவிக்குப் பணம் சேரச் சேர பக்தி சற்று விலகியது. கோடீஸ்வரர்கள், அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை சொல்வதும், அவர்களின் பணத்தைக் பாதுகாப்பதிலும் அக்கறை காட்டத் தொடங்கினார் அவர். கடைசியில் ஒரு பெண் விவகாரத்தில் சிக்கி சிறை சென்றார் அந்தத்துறவி.
“துறவி ஆரம்பத்தில் ஒழுங்காகத் தான் இருந்தான். 35 வயதுக்காரனுக்குப் புற்று எனத் தெரிந்ததும் மனதில் கருணை பொங்கியது. அதனால் அவனது ஆன்மாவின் அடியாழத்தில் உள்ள பிரபஞ்ச சக்தியுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது. அத்தொடர்பு நீடித்த வரையில் மற்றவர் பிரச்னைகளை தீர்க்க முடிந்தது. புற்று நோய் பாதித்த பெண்ணைப் பார்த்ததும் நம்மால் குணப்படுத்தமுடியுமா என்ற சந்தேகமும், அவளைக் குணப்படுத்தப் போவது நான் தான் என்ற அகந்தையும் எழுந்தது. பயம், சந்தேகம் வந்தால் பிரபஞ்ச சக்தியுடன் ஏற்பட்ட தொடர்பு அறுந்து விடும். புகழையும் செல்வத்தையும் துறவி இழக்க விரும்பவில்லை. நாடகம் ஆடத் தொடங்கினான். ஆசையும், அகங்காரமும் அழிவுப்பாதையில் தள்ளின.”
நடுங்கியபடிபச்சைப்புடவைக் காரியின் கண்களைப் பார்த்தேன். “நோய், பிரச்னையை தீர்க்கும் சக்தி அனைவரிடமும் இருக்கிறது யோகம், துறவு, அன்பு இவற்றால் அச்சக்தியை செயலில் காட்ட முடியும். அவ்வளவுதான். “உன்னால் நன்மை விளையும். அந்த சக்தியை உனக்கு தருகிறேன். என்ன சொல்கிறாய்? வேரற்ற மரமாக அவளது பாதங்களில் விழுந்தேன். “வேண்டாம் தாயே!” “என்ன வேண்டாம்? உன்னால் நல்லது நடக்க வேண்டாமா?” “என்னால் நல்லது நடக்கட்டும். ஆனால் அது என்னால் நடந்தது என்று எனக்கும் தெரியக்கூடாது. யாருக்கு நன்மை நடந்ததோ அவருக்கும் தெரிய வேண்டாம்” “தெரிந்தால் என்ன?” “எனக்கும் துறவி போல் பயம், அகங்காரம் வந்து விடும். அந்நிலையில் நான் இப்போது வகிக்கும் பதவியை இழப்பேனே.” “அப்படி என்ன பதவியப்பா?” “காலகாலத்திற்கும் கையில் கிளிதாங்கிய உன் கொத்தடிமையாக இருக்கும் உன்னத பதவியம்மா அது!” பராசக்தி கலகலவென்று சிரித்து மறைந்தாள். ரயில் சென்னை சேரும் வரை நான் அழுதேன்.
|
|
|
|