|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அற்பமானது ஏதுமில்லை |
|
பக்தி கதைகள்
|
|
அவதார புருஷர்கள் தாமரை இலைத் தண்ணீர் போல ஆசையின்றி வாழ்வார்கள். இவர்கள் பிறர் நலனில் அக்கறை கொள்வார்கள். இவர்களில் ராமகிருஷ்ண பரமஹம்சர் முதன்மையானவர். மனைவி சாரதாதேவியாருடன் இல்லறத்தில் ஈடுபடாமல் அவரைக் காளிமாதாவாகக் கருதி வழிபட்டார். கோல்கட்டா தட்சிணேஸ்வரம் காளி கோயிலின் பூஜாரியான இவரைக் காண வரும் பக்தர்களிடம் உரையாடுவார். தனக்கு அளிக்கப்படும் பழங்களை பிரசாதமாக பக்தர்களுக்கு திருப்பிக் கொடுப்பார். தன் தேவைக்காக ஒருபோதும் எடுக்க மாட்டார். இது யாரிடமும் இல்லாத அபூர்வ குணம். இப்பண்பு சாரதாதேவியாருக்கும் இருந்தது. கணவர் எவ்வழியோ மனைவியும் அவ்வழி என வாழ்ந்தார் அவர். சீடர்களுக்கு சாரதாதேவியார் தாயாக இருந்து உணவளிப்பார். தட்சிணேஸ்வரம் கோயிலில் இருந்த மடத்தை தங்களின் தாய்வீடாகக் கருதி பக்தர்கள் குருசேவையில் ஈடுபடுவர். ராமகிருஷ்ணர் பூஜை முடித்து விட்டு பகல்நேரத்தில் தியானத்தில் ஈடுபடுவார். மாலை நேரத்தில் சீடர்களுக்கு உபதேசம் செய்வார். உவமை காட்டி சொல்வது ராமகிருஷ்ணரின் தனி பாணி.
ஆமை தண்ணீருக்குள் அங்குமிங்குமாக அலையும். ஆனால் அதன் நினைப்பெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா? குளக்கரையில் இட்ட முட்டைகளின் மீது தான். அது போல இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் குடும்பத்தினருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். ஆனால் மனதை எப்போதும் கடவுளின் மீது வைக்க வேண்டும். ஒரு கையால் குடும்ப கடமைகளில் ஈடுபடுங்கள். இன்னொரு கையால் கடவுளின் திருவடியைப் பிடியுங்கள். இல்லறக் கடமைகள் முடிந்ததும், இருகைகளாலும் கடவுளைப் பற்றுங்கள். அவரது உபதேசங்கள் பின்பற்ற எளிமையானவை. கடைபிடித்தால் வாழ்வு சுகமாக இருக்கும். மற்றவர்களை உற்று கவனிப்பதிலும் அவர் சமர்த்தர். ஒருமுறை கோல்கட்டாவைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர் ராமகிருஷ்ணரை தரிசிக்க வந்தார். காலையில் வந்தவர் நாள் முழுக்க ஆன்மிகம் குறித்து உரையாடும் எண்ணத்துடன் மடத்தில் தங்கினார்.
மடத்தில் சேவையாற்றிய சிறுவன் ஒருவனிடம்,”என்ன வேண்டும்” எனக் கேட்டார் ராமகிருஷ்ணர். அருகில் இருந்த கத்தியைக் காட்டிய அவன், ”ஐயா... தோட்டத்தில் கிழங்குகளைத் தோண்டி எடுக்கப் போகிறேன். அதற்கு கத்தி வேண்டும்” என்றான். ராமகிருஷ்ணர் தர முடியாது என மறுக்கவில்லை. ஆனாலும் உற்று கவனித்தபடி, ”வேலை முடிய எவ்வளவு நேரமாகும்?” ” பொழுது சாய்ந்து விடும்” என்றான். ”அப்போது தான் கத்தியைக் கொடுப்பாயா?” தலையசைத்தான். ராமகிருஷ்ணரும் கொடுத்தார். உடனிருந்த செல்வந்தர் மனதிற்குள், ”சாதாரண கத்தியைக் கொடுக்க ஏன் இப்படி யோசிக்கிறார் இவர்?” என கருதினார்.
சூரியன் மறைந்து இருள் கவியத் தொடங்கியது. சிறுவன் கத்தியைக் கொடுக்கவில்லை. நேரம் கடந்ததால் ராமகிருஷ்ணர் தோட்டத்தை நோக்கி நடந்தார். செல்வந்தரும் அவரைப் பின்தொடர்ந்தார். ஓரிடத்தில் கத்தி கேட்பாரற்றுக் கிடந்தது. ராமகிருஷ்ணர், ”பார்த்தீர்களா! அந்தப் பையன் வேலை முடிந்ததும் கத்தியைத் திருப்பித் தர மாட்டான் என நான் நினைத்தது உண்மையாகி விட்டது?” என்றார். ”குருஜி! அவன் கத்தியை ஒப்படைக்க மாட்டான் என்று ஏன் நினைத்தீர்கள்?” எனக் கேட்டார். ”அந்த சிறுவன் கத்தியைக் கேட்டபோது அவனது சட்டையை கவனித்தீர்களா! முதல் பட்டனை இரண்டாவது துளையில் மாட்டியிருந்தான். அணியும் ஆடையில் கூட அக்கறை இல்லாதவன் இவன் மற்ற விஷயங்களில் எப்படி கவனம் செலுத்துவான்?” என விளக்கம் அளித்தார். சின்ன விஷயத்தில் கூட மனிதன் அக்கறை கொள்ள வேண்டும். அற்பமானது என்று எதையும் கருதுவது கூடாது. அவரது உபதேசம் ஒவ்வொன்றும் நம்மை வழிநடத்தும் அனுபவ முத்துக்கள்!
|
|
|
|
|