|
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் புற்றில் விஷப்பாம்பு வாழ்ந்து வந்தது. யாரும் அந்தப்பக்கம் போனாலே கொத்தும். புற்று இருந்த பாதை பக்கத்து ஊருக்கு செல்லும் குறுக்கு வழி. ஆனால் பாம்புக்கு பயந்து ஊரார் மாற்றுப்பாதையில் சென்றனர். ஒருநாள் ஊருக்கு யோகி என்ற சாமியார் வந்தார். அவர் பாம்பிடம் பேசும் சக்தி கொண்டவர். ஊரார் தங்கள் பிரச்னையை அவரிடம் தெரிவித்தனர். ” இனி யாரையும் கடிக்காதே” என பாம்புக்கு கட்டளையிட்ட யோகி, பக்கத்து ஊருக்கு புறப்பட்டார். பாம்பும் அதற்கு கட்டுப்பட்டு நடந்தது. ஊரில் பலருக்கும் பயம் அற்றுப்போனது. அதிலும் பாபு என்ற சிறுவன் பாம்பைக் கல்லால் அடித்து துன்புறுத்தினான். காயத்தால் குற்றுயிரும் குலையுயிருமாகி போராடியது பாம்பு. மறுநாள் புற்று இருந்த வழியாக யோகி ஊருக்கு வந்த போது, பாம்பின் நிலையை கண்டார். நடந்ததை சொல்லி அழுதது பாம்பு. ”முட்டாளே! உன்னைக் கடிக்க வேண்டாம் என்று தானே சொன்னேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று சொல்லவில்லையே” என்றார் யோகி. அதன் பின் பாம்பு சீறியதை பார்த்து பாபு அதன் பக்கம் செல்லவில்லை.
|
|
|
|