|
ஒருமுறை நகர்வலம் சென்று கொண்டிருந்தார் மன்னர். ஒருவீட்டுவாசலில் காய வைத்திருந்த எள்ளை ஒருவன் தின்ன, கையும் களவுமாக பிடித்தனர். அவனிடம், ’ஏன்டா எள்ளைத் தின்றாய்? பசியா?’ எனக் கேட்டார் மன்னர். “மன்னா! நான் சிவபக்தன். பசுவாக பிறந்திருந்தால் அபிஷேகத்திற்கு பால் கொடுத்திருப்பேன். பூச்சியாக பிறந்தால் அவரது திருமேனியில் தழுவி ஓடியிருப்பேன்.
ஆனால் பாழும் மனிதனாக பிறந்ததால் கொடுக்க ஏதுமில்லை. இந்த எள்ளைத் திருடித் தின்றதும், அதன் உரிமையாளர் என்னை ’செக்கு மாடாக பிறப்பாய்’ எனத் திட்டினார். அடுத்த பிறவியில் அப்படி பிறந்தால், நான் அரைக்கும் எண்ணெய் சிவனின் கருவறையில் விளக்கேற்ற உதவுமே! அதனால் தான் இந்த பாவத்தை செய்தேன்” என்றான். அவ்வளவு தான். மன்னர் அவன் மீது பாய்ந்தார். அவனது வாய் ஓரம் ஒட்டியிருந்த எள்ளை எடுத்து தன் வாயில் இட்டுக் கொண்டார். இதைக் கண்டு திகைத்தான் திருடன். “மன்னா! ஏன் இப்படி செய்தீர்கள்? எச்சில் பட்ட எள்ளைத் தின்னலமா?’ என்றான். “அடே! நீ மட்டும் தனியாக செக்கிழுக்க முடியுமா! ஜோடி மாடு வேண்டாமா! அந்த மாடாய் நான் பிறக்கவே அப்படி செய்தேன்” என்றார். பக்திக்கு அளவு, ஈடு கிடையாது. |
|
|
|