|
துறவிகளின் மடத்திற்கு செல்லும் வாய்ப்பு சிறுவன் ஒருவனுக்கு கிடைத்தது. பஜனை செய்தபடி இருந்த பக்தர்கள் கூட்டத்துடன் அமர்ந்தான். தலைமைத்துறவியிடம் ஆசி பெற பக்தர்கள் வரிசையில் நின்றனர். துறவியின் கையில் காவித்துணி கட்டிய தண்டம் இருப்பதைக் கண்டான். அதை வைத்திருப்பதன் நோக்கம் என்ன எண்ணியபடி நகராமல் நின்றான். “என்னப்பா...கொஞ்சம் நகரு... உன் பின்னால் பலர் காத்திருக்கிறார்கள் இல்லையா?” என்ற துறவியிடம், “சுவாமி! ஒரு சந்தேகம். இந்த தண்டத்தை எதற்காக வைத்திருக்கிறீர்கள்?” என்றான். “தம்பி! தெரிந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியதே! அதற்கு என் வாழ்த்துக்கள். சிவனை வணங்கும் சைவத் துறவிகள் தண்டத்தில் திருநீறை முடிச்சாக கட்டியிருப்பர். பெருமாளை வணங்கும் வைணவத் துறவிகள் காவிக்கொடியை முடிச்சாக கட்டியிருப்பர். இந்த தண்டம் சக்தி வாய்ந்தது. துறவிகள் உச்சரிக்கும் மந்திரத்தை உள்வாங்கும் சக்தி இதற்குண்டு. எங்கள் காலத்திற்கு பிறகு, இந்த தண்டத்தை அடுத்த மடாதிபதி வைத்துக் கொள்வார்.
அப்போது அதிலுள்ள மந்திர சக்தி அவர்களைச் சென்றடையும். இதனால் தண்டத்தை யாரும் தொட அனுமதிப்பதில்லை. பக்தர்களைக் கைகளால் தொடாமலேயே ஆசியளித்து பிரசாதம் வழங்குவதால் இதன் மந்திரசக்தி பாதுகாக்கப்படுகிறது. துறவிகள் யாரையும் தொட அனுமதிப்பதில்லை என பாமர மக்கள் தவறாக கருதுகின்றனர்” என்றார். விளக்கம் கேட்ட சிறுவன் துறவியிடம் விடை பெற்றான். |
|
|
|