Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...
 
பக்தி கதைகள்
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி...

அந்த ஆணும், பெண்ணும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்பவர்களாக இருக்க வேண்டும். இருவர் கழுத்திலும் ஒரே மாதிரியான பட்டை தொங்கியது. அழகு என சொல்ல முடியாவிட்டாலும் களையாக இருந்தார்கள்.  இருவருக்கும் வயது முப்பதிற்குள். அவர்களின் காதல் மென்மையாக,  கண்ணியமாக  தெரிந்தது.  அவர்களை நான் பார்த்தது சென்னையின் பெரிய உணவகத்தில். எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் தான் அமர்ந்திருந்தனர். தங்களைத் தாண்டி ஒரு உலகம் இருப்பதை மறந்துவிட்டிருந்தனர்.
இத்தனைக்கும் கை விரல்கள்கூட தீண்டவில்லை. அவன் முகத்தில் தெரிந்த ஏக்கம் ஒரு கவிதை என்றால் அவள் கண்களில் இருந்த உணர்வு ஒரு காவியம்.  நான் அக்காட்சியைப் பார்த்து  மனம் உருகிக் கொண்டிருந்தேன்.  ஆகா! நேரமாகிவிட்டதே!  மதுரை செல்லும் விமானத்திற்கு இரண்டு மணிநேரம் தானே இருக்கிறது!  ஓடினேன்.
அன்று அவ்வளவு கூட்டம் இல்லை. விமானம் கிளம்பியதும் பணிப்பெண் ஒருத்தி  என் பெயர் சொல்லி அழைத்தாள்.  “என்னுடன் வர முடியுமா?”

எதற்காக அழைக்கிறாள்? என்ன பிரச்னை?  கடைசி மூன்று வரிசை இருக்கைகள் காலியாக இருந்தன.  “இங்கே உட்கார். பேச வேண்டும்.” ஆகா! பச்சைப்புடவைக்காரி! தயக்கமுடன் அமர்ந்தேன்.  என்ன... காதல் காட்சி மனதை உருக்கிவிட்டதோ?” தலை குனிந்தேன். “நீ பார்த்தது போல் இன்னொரு காட்சி நடப்பதைப் பார். மேலைநாட்டு இளைஞன் தன்னுடன் பணிபுரியும் பெண்ணை நேசிக்கிறான்.  அவளோடு பலமுறை பேசியிருக்கிறான். ஆனால் காதலைச் சொல்லும் துணிவில்லை. ஒரு வேளை சொல்லி, நட்பே முறிந்தால்... அதுவே கவலையானது. எந்நேரமும் அவள் நினைப்பு தான்.  ஆனால் எத்தனை நாளைக்கு காதலைச் சொல்லாமல் இருப்பது? அவன் கண்ணாடியில் தன்னைப் பார்க்கிறான். கொஞ்சம் பருமனாக தெரிகிறான். அதற்காக நிராகரித்து  விட்டால்... உடற்பயிற்சி செய்கிறான். தசைகள் இறுகி பொலிவு பெறுகிறான். இருந்தாலும் துணிவு  வரவில்லை. அவனுக்கு நண்பர்கள் அதிகமில்லை. தாயும் காலமாகி விட்டாள். தந்தையோ  ஓய்வு பெற்ற தபால்காரர். அப்பாவிடம் யோசனை கேட்கிறான் இளைஞன்.

“விலையுயர்ந்த மோதிரம் ஒன்றை அவளுக்கு கொடுத்து, ’உன்னைக் காதலிக்கிறேன். என்னை மணந்து கொள்வாயா?’ என்று கேட்டுவிடு.”  நல்ல உத்திதான். ஆறுமாதம் சேமித்த பணத்தில் மோதிரம் வாங்குகிறான் அவன்.   அப்போதும் காதலை அவள் ஏற்பாளா?  என தந்தையிடம் கேட்கிறான். “நாளை நானும் வருகிறேன். சற்று தள்ளி நிற்கிறேன். என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம்.” மறுநாள் தந்தையுடன் புறப்படுகிறான். அவள்  தோழிகளுடன் பூங்காவில் இருக்கிறாள்.   தந்தை, “போ. .. தைரியமாகச் சொல். பார்க்கலாம்.” “என் காதலை அவள் மறுத்தால்...” “இவளை விட அழகிகள் ஆயிரம் பேர் கிடைப்பார்கள். தைரியமாகச் செல்.” என்கிறார் தந்தை.
பெயர் சொல்லி அழைக்கிறான். திரும்பிப் பார்க்கிறாள். கூடவே தோழிகளும். புல்தரையில் மண்டியிடுகிறான். ஒரு கையில் ரோஜா. மறு கையில் மோதிரம்.

“உன்னை காதலிக்கிறேன். மணந்து கொள்வாயா?” பிரமை பிடித்தவளாக வெறித்துப் பார்க்கிறாள். பின் ஓடி வந்து தழுவியபடி, “யெஸ்” எனக் கத்துகிறாள்.  தந்தை கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறார்.  இதை பார்த்த எனக்கும் கண்ணீர். “சொல். இக்கதை எதை உணர்த்துகிறது?” கதையில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது. அதை அவளது அருள் இன்றி எப்படி உணர முடியும்? அவளைப் பார்த்துக் கண்ணீர் மல்கினேன். அன்னை அருளால் கதையின் உட்பொருளை உணர்ந்ததும் இன்னும் அழுதேன். “தாயே! நாங்கள் எவ்வளவு நன்றி கெட்டவர்கள் என்பதை உணர்த்தும் ஆன்மிகக் கதை இது. அந்த இளைஞனும், அவன் காதலித்த பெண்ணும் சராசரி மனிதர்கள் தானே. அவள் இளவரசி இல்லையே! கோடீஸ்வரரின் மகள் இல்லையே! அவளுக்காக உணவைக் குறைத்து, உடலை வருத்தி, காசு சேமித்து.. அப்பப்பா ஏறக்குறைய தவமே செய்கிறான் அவன். இன்றிருந்து நாளை மடியப்போகும் அவளுக்கே அவ்வளவு இந்தபாடு என்றால் என்றென்றும் எங்களுக்காக இருக்கும் உங்கள் அருள் பெற  எத்தனை காலம் தவம்  செய்ய வேண்டும்? ஆனால் நாங்கள்  அப்படி  செய்வதில்லையே!

அம்மா என அழைத்தால் போதும்  ஓடி வருவீர்கள். அந்தப் பெண்ணிற்கே ஒரு தங்க மோதிரம் கொடுக்க வேண்டுமென்றால்  உங்களுக்கு...உலகிலுள்ள தங்கம், வைரங்களை எல்லாம் காலடியில் கொட்டினாலும் போதாதே! ஆனால் அதுவும் முடியாதே!  அவை  ஏற்கனவே உங்களுடையவை தானே! அவர்களின் காதல் சில ஆண்டுகள் இனிக்கலாம். குழந்தைகள், பொருளாதாரம், பணி சம்பந்தப்பட்ட பிரச்னைகள் என்று வந்த பின் காதல் கசக்கும். அதற்கே இந்தப் பாடென்றால் காலகாலத்திற்கும் நிலைத்திருக்கும் உங்களின் அருள் பெற  என்னவெல்லாம் செய்ய வேண்டும்?  “நீ நூறு வருடம் ஊசிமுனையில் நின்று தவம் செய்தால் தான் அருள்பாலிப்பேன்” என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அப்படிச் சொல்லவில்லையே அம்மா! அந்த இளைஞன் காதலை அவள் ஏற்பாளோ என அஞ்சியபோது அவன் தந்தை சொன்ன வார்த்தைகளைக் கவனியுங்கள். “இவளை விட அழகிகள் ஆயிரம் பேர் கிடைப்பார்கள்”  ஆனால் தாயே, எங்களுக்கு உங்களை விட்டால் யாரம்மா இருக்கிறார்கள்?  நீங்கள்  கைவிட்டால்  எங்கள் கதி என்னாகும். அந்நிலையில் உங்கள் அருளைப் பெற இன்னும் எவ்வளவு  கடுமையாகத் தவம் செய்ய வேண்டும்? தவம் வேண்டாம். அம்மா என அன்புடன்  அழைத்தால்  ஓடி வருகிறேன் என்கிறீர்கள். அதுவும் வேண்டாம். சகமனிதர்களைத் துன்புறுத்தாமல் இருந்தால் போதும், அருள் தருவனே என நீங்கள் முழங்குகிறீர்களே!

தகுதியே இல்லாத எங்கள் மீது  அருளைப் பொழிகிறீர்களே... எப்படி சாத்தியம் தாயே?”
“பதிலை நீயே சொல்லிவிட்டாயே!”
“புரியவில்லையே”
“நீ சொன்னதில் கடைசி வார்த்தை என்ன?”
“தாயே!”
“அது தான் பதில். நான் தாய். மலையைத் தூக்கு. கடலைத் தாண்டு என்று காதலி ஆயிரம் நிபந்தனைகள் போடலாம். தாய் அப்படிச் சொல்ல மாட்டாள்.  என்னை  நோக்கி  அரையடி வைத்தால் போதும்.  நான் பறந்து வந்து உன்னைத் தூக்கிக்கொள்வேன்.   என் அன்பை மனிதர்கள் எப்போது புரிந்துகொள்வார்களோ?” அவள் மறைந்தாள். இன்னும் சில நிமிடத்தில் விமானம் மதுரையில் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு. நான் மவுனமாக அழுது கொண்டிருந்தேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar