|
வேதத்தில் சாமம், நதியில் கங்கை, விருட்சத்தில் அரசமரம், பஞ்சபூதத் தலங்களில் சிதம்பரம் எப்படி உயர்ந்ததோ, அதுபோல் விரதங்களில் உயர்ந்தது மகாசிவராத்திரி. திதிகளில் சதுர்த்தசிக்கு அதிபதி ஸ்ரீருத்ரன். அவருக்குரியது சிவராத்திரி. அதாவது தேய்பிறையின் பதினான்காம் நாளில் சிவனை வழிபடுவதால் நன்மை கிடைக்கும். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும், மாசி தேய்பிறை சதுர்த்தசி ’மகாசிவராத்திரி’யாக (மார்ச் 4) சிவன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. அன்று சூரியன் மறைந்து மறுநாள் சூரியன் உதிக்கும் வரை நான்கு கால பூஜையை நடத்துவர். ஒவ்வொரு கால பூஜையிலும் அபிஷேகம், மலர்கள், பாராயணம், நிவேதனம் என்று மகிழ்ச்சியில் திளைப்பார் சிவன். ’சிவராத்திரி’ என்ற சொல்லுக்கு ’மோட்சம் அருள்வது’ என பொருள். இந்நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவனை பூஜிப்பர். சிவராத்திரி பூஜையை முதலில் பார்வதியே முன்னின்று நடத்தினாள். அதில் மகிழ்ந்த சிவன் அருளை வாரி வழங்கினார்.
அப்போது“நான் செய்த இந்த நான்கு கால பூஜையை யார் செய்தாலும், அவருக்கு எல்லா நலன்களையும் வழங்க வேண்டும்”என்று பார்வதி கேட்க, சிவனும் சம்மதித்தார். தேவர்கள் அசுரர்கள் இணைந்து அமுதம் பெற வேண்டி பாற்கடல் கடைந்த வரலாறு நமக்குத் தெரியும். பாற்கடலில் திரண்ட ஆலகால விஷத்தைக் கண்டதும் தேவர்கள் அஞ்சி ஓடினர். ஆனால் அதை குடித்த சிவன் ஆனந்த தாண்டவம் புரிந்தார். ஒரு திரயோதசியன்று இந்நிகழ்வு நடந்தது. சிவனுக்கு களைப்பு ஏற்படாமல் இருக்கவும், அவரது அருள் வேண்டியும் அடுத்த நாள் சதுர்த்தசியன்று நான்கு காலங்களிலும் சிவனை வழிபட்டனர். இதுவே மகா சிவராத்திரி பூஜையாக நடக்கிறது. இந்நாளில் ஒரு வில்வ இலையால் சிவனை பூஜித்தாலும் பாவம் பறந்தோடும். கோடிக்கணக்கான பூக்களால் பூஜித்த புண்ணியம் கிடைக்கும். மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்வது எப்படி? காலையில் நீராடி சிவனை வழிபட வேண்டும். மாலை கோயிலில் நடக்கும் நான்கு கால பூஜையில் பங்கேற்க வேண்டும். ஒரே கோயிலில் வழிபடலாம் அல்லது ஒவ்வொரு கால பூஜையையும் வெவ்வேறு கோயிலில் தரிசிக்கலாம். அதன்பின் குளித்து விட்டு அடியார்களுக்கு உணவளித்து விட்டு, பின்னர் உண்ணலாம்.
உணவு, உறக்கத்தை விலக்கினால், நம் புலன்கள் கட்டுப்படும். புலன்கள் கட்டுப்பட்டால் மட்டுமே சிவனருளை பெற முடியும். விரதமிருக்க முடியாதவர்கள் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு கால பூஜை முடிந்ததும் பால், பழம் உண்ணலாம். தண்ணீர் குடிக்கலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கை உப்பின்றி வேக வைத்துச் சாப்பிடலாம். சத்துமாவை வெல்லமுடன் சேர்த்து உண்ணலாம். சிவராத்திரியன்று கோயில், வீடுகளில் நமசிவாய மந்திரத்தை அதிகநேரம் ஜபிக்க வேண்டும். கோளறு பதிகம் படித்தால் பயம் அகலும். தைரியம் பெருகும். சிவ புராணம், லிங்காஷ்டகம், தேவாரம், திருவாசகம் படிக்கலாம். திருவிளையாடல் புராணம், பெரிய புராணத்தை பிறர் சொல்லக் கேட்டாலும், படித்தாலும் நன்மை கிடைக்கும்.
|
|
|
|