|
ஓரிடத்தில் நாலு மனிதர்கள் சேர்ந்தால் நாட்டு நடப்பு, வீட்டு நடப்பு என்று பல பேச்சு அடிபடும். ’கேள்வியின் நாயகனாக’ மட்டும் சிலர் இருப்பதுண்டு. மற்றவர் அளிக்கும் பதில் மூலம் தங்களின் சந்தேகத்தை இவர்கள் தெளிவுபடுத்திக் கொள்வர். தகவல் தொடர்பு இல்லாத அந்தக் காலத்தில் இதே போல் திண்ணை மாநாடுகள் நாடெங்கும் பிரசித்தம். பாண்டிய மன்னர் ஒருவர், மதுரை நகரில் மாறுவேடத்தில் நகர்வலம் புறப்பட்டார். ஒரு வீட்டுத் திண்ணையில் பலர் அமர்ந்து பேசுவதைக் கண்டார். தானும் அதில் கலந்து கொண்டார். “முதுமைக்கு வேண்டியதை எப்போது சேமிப்பீர்கள்?” என ஒருவர் கேள்வி எழுப்பினார். முதியவர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. “எல்லோரும் ஏன் சும்மா இருக்கிறீர்கள்?” என்றான் இளைஞன் ஒருவன். “நாங்கள் செய்யத் தவறியதால் சும்மா இருக்கிறோம்; உன் போல இளைஞனே இதற்கு பதிலளிக்க வேண்டும்” என்றார் ஒரு முதியவர்
“முதுமையில் நலமாக வாழ இளமையில் சேமிக்க வேண்டும்! அப்படித் தானே ஐயா” என்றான் அவன். அனைவரும் கைதட்டினர். “இரவுக்கு வேண்டியதை எப்போது தயார் செய்ய வேண்டும்?” என அடுத்த கேள்வி பிறந்தது.
மூதாட்டி ஒருத்தி, “ஆமாம்... இது தெரியாதாக்கும்? காலங்காலமாக நாங்க செய்யற வேலை தானே? அரிசி, பருப்புன்னு அத்யாவசிய பொருட்களை பகலிலேயே வாங்கணும்” என்றாள்.
அனைவரும் ஆமோதித்தனர்.
“சரி...மழைக்காலத்திற்கு தேவையானதை எப்ப சேமிக்கணும்?”
“இது ஒரு கேள்வியா? மழைக்காலத்தில் வெளியே போக முடியுமா என்ன? கோடை கால வெயிலில் காய வைத்து பக்குவப்படுத்தணும்.” என்றாள் அந்த மூதாட்டி.
கேள்வி கேட்டவர், “சரியா சொன்னீங்க பாட்டி! இந்த உலகத்துல வாழும் நமக்கு என்றாவது ஒருநாள் ஆயுள் முடியப் போகிறது. மறுவுலகத்தில் நமக்கு கைகொடுப்பது எது?” எனக் கேட்டார்.
புகழ், அறிவு, நல்வினை, பக்தி, புண்ணியம் என்று ஆளுக்கு ஒரு பதிலைச் சொன்னார்கள். மன்னருக்கு எந்த பதிலும் திருப்தியளிக்கவில்லை. மாறுவேடத்தில் இருந்த அவர் அங்கிருந்து அரண்மனைக்குப் புறப்பட்டார். மறுநாள் காலையில் அரசவையைக் கூட்டினார்.
“மறுவுலகத்தில் நமக்கு உதவுவது எது?’ என்ற கேள்விக்கு பதில் அளிப்பவருக்கு தக்க சன்மானம் அளிப்பதாக அறிவித்தார் மன்னர். சிலர் தண்ணீர் பந்தல் வைத்து முகப்பில், “இதுவே மறுமைக்கு உதவும் சேமிப்பு” என எழுதியிருந்தனர்.
“அன்ன தானமே மறுமைக்கான புண்ணியம்” என எழுதி தர்ம சத்திரம் அமைத்தனர் சிலர்.
“கல்விக்கண் திறப்பதே தலைசிறந்த தர்மம்” என்றனர் சிலர் இப்படி தான தர்மத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் பெயரை குறிப்பிடத் தவறுவதில்லை என்பதை “தானம் செய்தால் போதாதா? எதற்காக பெயரைக் குறிப்பிட வேண்டும்?” எனக் கேட்டார் மன்னர்.
“மன்னா! நாங்கள் தானம் செய்வது ஊராருக்கு எப்படி தெரியும்? என கேள்வி எழுப்பினர்.
’ஓ... மறுவுலகத்திற்கு செல்லும் போது பெயரும் உங்களோடு வருமா என்ன?” என்று அறியாமையை சுட்டிய மன்னர் யாருக்கும் பரிசளிக்கவில்லை.
அதன்பின் ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடச் சென்ற மன்னர் அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். ஓரிடத்தில் பிச்சைக்காரன் ஒருவன் சோறு சாப்பிட அமர்ந்தான். அங்கிருந்த நாய் ஒன்று பசியுடன் அவனை நெருங்கியது. அதனைக் கண்டு இரங்கிய அவன், சோற்றைக் கொடுத்து அன்புடன் தடவிக் கொடுத்தான்.
“நாய்க்கு கொடுத்திட்டியே... உனக்கு வேண்டாமா” எனக் கேட்டார் மன்னர்.
“யாரிடமாவது பசிக்குதுனு கேட்டு வாங்கி நான் சாப்பிடுவேன். வாயில்லாத ஜீவன் அது என்ன செய்யும் பாவம்” என்றான் அவன். மன்னர் தன் சந்தேகத்திற்கு விடை கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார்.
இம்மைக்கும், மறுமைக்கும் கைகொடுப்பது சுயநலமற்ற அன்பு மட்டுமே என்பதை உணர்ந்து பிச்சைக்காரனுக்கு பரிசளிக்க உத்தரவிட்டார் மன்னர்.
|
|
|
|