|
மன்னர் ஒருவருக்கு மூடநம்பிக்கை அதிகமாக இருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட ஜோதிடர் ஒருவர், “அரசே! காலையில் எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் மகிழ்ச்சியாக அந்த நாள் அமையும்” என்றார். உடனே சேவகனை அழைத்த மன்னர், இரு காக்கைகள் தென்பட்டால் உடனே தகவல் அளிக்க உத்தரவிட்டார். மறுநாள் காலையில் ஓரிடத்தில் இரு காக்கைகள் நிற்பதைக் கண்ட சேவகன், “அடடா! நல்ல சகுனம்” எனக் கருதி மன்னரிடம் தெரிவித்தார். மன்னர் வருவதற்குள் ஒரு காக்கை பறந்தது. “தாமதமாக தகவல் அளித்த சேவகனுக்குப் பத்து கசையடி கொடுங்கள்” என உத்தரவிட்டார் மன்னர்.
சேவகனுக்கு சிரிப்பு வந்தது. “அலட்சிய புத்தி கொண்ட இவனுக்கு இன்னும் பத்து கசையடி சேர்த்து கொடுங்கள்” என உறுமினார் மன்னர். “காக்கைகளைப் பார்த்தது நான் மட்டுமே. அதற்கான பலனும் உடனே கிடைத்து விட்டது. காலையில் எதில் நாம் விழிக்கிறோம் என்பதைப் பொறுத்து ஒருநாள் அமைவதில்லை. நல்ல சிந்தனைகளே மதிப்புள்ளதாக்கும் நல்ல சகுனங்கள்” என்றான் சேவகன். அவனது விளக்கத்தால் மனம் தெளிந்தார் மன்னர். |
|
|
|