|
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீயாத்தமங்கையில் (திருச்சாத்தமங்கை) அவயந்திநாதர் கோயில் உள்ளது. இங்கு சிவத்தொண்டு செய்யும் குடும்பத்தில் பிறந்தார் திருநீலநக்கர். ஒருநாள் சிவபூஜை செய்ய, தன் மனைவியுடன் கோயிலுக்கு கிளம்பினார். அவருடைய மனைவி பூஜைக்குரிய மலர்களை எடுத்துக் கொடுக்க நீலநக்கர் சுவாமிக்கு அணிவித்தார். அப்போது சுவாமியின் சிலையின் மீது விஷம் கொண்ட சிலந்திப்பூச்சி ஒன்று ஏறுவதைக் கண்ட அம்மையாரின் மனம் துடித்தது. செய்வதறியாமல் தன் வாயால் ஊதி பூச்சியை கீழே விழச் செய்ய, அவரது எச்சில் சுவாமி மீது பட்டது. நீலநக்கருக்கு கோபம் கொப்பளித்தது. “அபசாரம் செய்து விட்டாயே!. எம்பெருமானின் மேனியை எச்சில் படுத்தலாமா...” என்று கை ஓங்கினார். அம்மையாரோ அழுதபடி “பொன்னார் மேனியனின் திருமேனி புண்ணாகாமல் இருக்கவே பூச்சியை ஊதி விரட்டினேன். அது பாவமா?” என்றார். ”ஆயிரம் சமாதானம் சொன்னாலும் நீ செய்த பழிச்செயலை என் மனம் ஏற்காது. இனி நீ என் மனைவியல்ல. நான் உன் கணவனும் அல்ல” என்று சொல்லி புறப்பட்டார்.
வேறுவழி தெரியாமல் நீலநக்கரின் மனைவி கோயிலிலேயே தங்கிவிட்டார். ”சிவபெருமானே! உனக்கு சேவை செய்தேன். ஆனால் கணவரிடம் இருந்து பிரித்து விட்டாயே இது நியாயமா?” என்று கதறினார். அன்றிரவு நீலநக்கரின் கனவில் தோன்றி, ”நீலநக்கரே! என் உடம்பைப் பாரும். உன் மனைவி ஊதிய இடம் தவிர மற்ற இடமெல்லாம் கொப்புளங்கள் தோன்றியுள்ளன. என் மீதுள்ள அன்பால் செய்த செயலுக்கு நீ கோபம் கொண்டது முறையா? ” எனக் கேட்டார் சிவபெருமான். கண்விழித்த நீலநக்கர், கோயிலுக்கு ஓடினார். ’உண்மையான அன்புள்ளம் கொண்டவர்கள் தவறு செய்தாலும் கடவுள் மன்னிப்பார்’ என்ற உண்மையை கனவு மூலம் சிவன் தெரிவித்ததாக மனைவியிடம் கூறி வருந்தினார். அதன் பின், தம்பதியாக சேர்ந்து சிவவழிபாடு செய்தனர். இந்த அடியாரே ’நீலநக்க நாயனார்’ என்று நாயன்மார்களில் ஒருவராகும் பேறு பெற்றார்.
|
|
|
|