|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » அவள் செய்த சிகிச்சை! |
|
பக்தி கதைகள்
|
|
“ஆடிட்டர் சார், பெரிய பிரச்னையில மாட்டிக்கிட்டு இருக்கேன். என் சம்சாரத்துக்கு மன அழுத்தம். டிப்ரஷன். ட்ரீட்மென்ட் எடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்ல.” சொன்னவர் ஒரு தொழிலதிபர். ஆண்டுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் செய்பவர். தன் மனைவியின் நிலையை விவரித்தார். “அவளுக்கு எதிலும் ஒட்டுதல் இல்லை. சரியாக பேசுவதில்லை. ஒரு காலத்தில் நிறுவனங்களில் பல பொறுப்புக்களை வகித்து வந்தவரால் தற்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை” “நிதிஆலோசகர்களில் ஒருவன். என்னிடம் போய்” என்றேன் நான். “அவளுக்காக வேண்டிக்கோங்க. சார். யாராவது பெரியவர்களிடம் தீர்வு கேட்டு சொல்லுங்க” அன்று மாலையில் மீனாட்சியம்மனை வழிபட்டு பொற்றாமரைக் குளத்தில் அமர்ந்தேன். “அடுத்தவரின் கர்மக்கணக்கில் தலையிடாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்?”குரல் கேட்டு அதிர்ந்தேன். எதிரில் பச்சைப்புடவைக்காரி. “அடுத்தவர் படும் துன்பத்தைப் பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது தாயே!” “இதற்கே இப்படியென்றால் அந்தப் பெண்ணுக்கு சங்கிலியால் கட்டிவைக்கும் சூழ்நிலை கூட வரலாம்..” “தாயே! தவிர்க்க வழியே இல்லையா?” “ஏன் இல்லை. ஆனால் நோயை விடச் சிகிச்சை கடுமையாக இருக்குமே பரவாயில்லையா?” “தாயே அவளுக்கு மனச்சிதைவு வந்தால் குழந்தைகள் தாயை இழந்து தவிக்குமே!” “உன்னிடம் ஒரு ரகசியம் சொல்கிறேன். அதை அவளது கணவரிடம் பக்குவமாக எடுத்துச் சொல். என்ன நடக்கிறதென பார்ப்போம்.” மறுநாள் காலையில் தொழிலதிபரைச் சந்தித்தேன்.
“திருவண்ணாமலையில ஒரு யோகியிடம் பிரச்னை குறித்து கேட்டேன். ஆறு மாசமாவது உங்க மனைவி, தான் யாருன்னு காமிச்சிக்காம சென்னையில இருக்கிற புற்றுநோய் மருத்துவமனையில சாதாரண ஆளா சேவை செய்யணும். அவங்க கொடுக்கற சம்பளத்துல தான் வாழணும். அங்கேயே தங்கி இருக்கச் சொல்றாரு ” “இதனால குணமாயிருமா?” “சொன்னவரு கடவுளுக்குச் சமமானவரு. அவரோட வாக்கு பொய்க்காது. இப்போ இதைப் பண்ணலேன்னா நிலைமை மோசமாகும். அப்புறம் உங்க இஷ்டம்.” என்று சொல்லி புறப்பட்டேன். இது நடந்து இரண்டு மாதமாகி விட்டது. ஒருநாள் சிகிச்சையில் இருந்த என் நண்பர் ஒருவரைப் பார்க்க மருத்துவமனை சென்றேன். அவர் பெயரைச் சொல்லி விசாரித்தேன். “அழைத்துச் செல்கிறேன், வாருங்கள்.” என்ற நர்ஸைத் தொடர்ந்து போனேன். “என்னப்பா அந்தப் பெண்ணுக்கு என்ன ஆச்சு என்று தெரிந்து கொள்ளும் ஆசை இல்லையா?” “தாயே நீங்களா?” – கைகூப்பினேன் “என்ன நடந்தது; இனி என்ன நடக்கப் போகிறதென்று காட்டுகிறேன் பார்.” கண்முன் விரிந்த காட்சியில் அந்தப் பெண் சாதாரணமாக காட்சியளித்தாள். அது சென்னையிலுள்ள புற்றுநோய் மருத்துவமனை. அங்கு உதவியாளராக இருந்தாள். தங்குமிடத்தில் வசதிகள் அவ்வளவாக இல்லை. சில நாட்கள் நள்ளிரவு வரை கூட வேலை செய்ய வேண்டியிருந்தது. அங்கேயே சாப்பாடு கொடுத்து மாதம் ஐயாயிரம் கொடுத்தனர். முதலில் தொழிலதிபரின் மனைவி தரையில் விட்ட மீன் போலத் துடித்தாள். அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் மெல்ல நோயாளிகளைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தாள். முதல் நோயாளி 35 வயது பெண். மார்பகப் புற்று நோய். மார்பகத்தை இழந்த நிலையில் மரணத்தின் விளிம்பில் இருந்தாள். தன் வயதுள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமையைக் கேட்ட அவள் வருந்தினாள். இத்தனை நாளாக புடவை, நகை என வாழ்ந்த கடந்த காலத்தை எண்ணி வெட்கப்பட்டாள்.
அடுத்த நோயாளியின் வயது 57. தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர். உணவுக்குழாயில் புற்று. கையிலுள்ள பணத்தை எல்லாம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்து விட்டார். கதிரியக்கச் சிகிச்சைக்கு பணமில்லை என்ற நிலையில் தன் சம்பள பணத்தை கொடுத்து உதவினாள். அடுத்தவள் ஒரு பதினைந்து வயதுப் பெண். அவளுக்கு மூளையில் புற்று. அறுவை சிகிச்சை முடிந்தாலும், அவளுக்கு பேச்சு வரவில்லை. இன்னும் எத்தனை நாள் இருப்பாள் என்பதே கேள்விக்குறி தான். தொழிலதிபரின் மனைவி மற்றவர்களின் துன்பத்தை உணரத் தொடங்கினாள். சேர்த்து வைத்த பட்டுப்புடவைகள், லாக்கரில் குவிந்து கிடக்கும் நகைகள் எல்லாம் வெறும் குப்பைகளாக தோன்றின. இதுநாள் வரை மற்றவர்களைப் பார்த்து “அவள் பெரிய கார் வைத்திருக்கிறாளே; இவளது வீடு என்னுடையதை விடப் பெரியதாக இருக்கிறதே” என்று தான் பட்ட கவலைகள் எல்லாம் அர்த்தமற்றதாக தெரிந்தன. மனதில் பெருத்த மாற்றம் உண்டானது. ஆறுமாதம் முடிந்ததும் தொழிலதிபரின் மனைவி வீட்டுக்குத் திரும்பினாள். மனவியல் நிபுணரிடம் அழைத்துச் சென்றார் கணவர். மனநலத்துடன் அவள் இருப்பதாக தெரிவித்தார் பரிசோதித்த நிபுணர். தொழிலதிபருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “உன்னை இப்பவே நம்ம மில்லுக்கு எம். டி., யாக்கப் போறேன். மாசம் அஞ்சு லட்ச ரூபாய் சம்பளம். போக வர பி. எம். டபிள்யு., காரு. அது போக நீ இஷ்டப்பட்டபோது புடவை, நகை வாங்கிக்கலாம். அதுக்கான அன்லிமிடெட் கிரெடிட் கார்டு தரேன்.” என்றார்.
“அதெல்லாம் வேணாங்க. புற்று நோயாளிகளுக்கு உதவி செய்ய டிரஸ்ட் ஆரம்பிப்போம். அத நான் கவனிச்சிக்கறேன். அப்பப்பா! அவர்கள் படும் கஷ்டத்தை பாத்துக்கிட்டு சும்மா இருந்தா பாவமுங்க. மொத வேலையா இந்த லிஸ்டுல இருக்கறவங்க தேவைக்கு பணம் அனுப்ப ஏற்பாடு செய்யுங்க.” காட்சி முடிந்தது. நர்ஸ் வடிவில் நின்ற பச்சைப்புடவைக்காரியை வணங்கினேன். “உங்கள் கருணையை என்ன சொல்வது? அந்தப் பெண்ணின் கர்மக்கணக்கில் இருக்கும் சிக்கலைப் போக்க சரியான வழியைக் காட்டி காப்பாற்றிவிட்டீர்கள். தாயே” “கர்மக் கணக்கும் இல்லை; கத்திரிக்காயும் இல்லை. அவளிடம் அபரிமிதமான செல்வம் இருந்தது. ஆனால் அவளுக்கு மனநிறைவோ, நன்றியுணர்வோ சிறிதுமில்லை. ’நான் அவளைப் போல் அழகாக இல்லையே, இவளிடம் இருக்கும் நகை என்னிடம் இல்லையே’ என சதா புலம்பினாள். இதனால் மனஅழுத்தம் உண்டானது. மனநல மருத்துவர்கள் செய்யும் சாதாரண சிகிச்சை பலனளிக்கவில்லை. அதனால் தான் இந்த அதிர்ச்சி வைத்தியம் செய்தேன். நோயிலும், வலியிலும் உழல்பவர்களைப் பார்த்து அவள் மனம் திருந்தியது.”
“தாயே நீங்கள் செவிலியர் வடிவில் வந்திருக்கும் மகா மருத்துவச்சி.” “இப்போதே உனக்கு நோயற்ற வாழ்வை வரமாகக் கேட்கத் தோன்றுகிறதா?” “இல்லை தாயே! உயிர் போகும் வேதனையால் துடித்தாலும், தங்களை மறவாத பாக்கியம் தர வேண்டுகிறேன்” வெள்ளையுடையில் இருந்த பச்சைப்புடவைக்காரி சிரித்தாள். நான் மட்டும் அழுதேன். |
|
|
|
|