|
குருகுலத்தில் ஆருணி என்ற இளவரசன் படித்தான். மிகவும் அடக்கமானவன். குருவின் கட்டளையை அப்படியே நிறைவேற்றுபவன். ஒருமுறை குருவின் வயலுக்குள், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பாய்ந்தது. பயிர்கள் மூழ்க ஆரம்பித்தன. ஆருணியிடம், “நீ போய் உடைப்பை அடைத்து வா” என குரு கட்டளையிட்டார். அரண்மனையில் செல்லமாக வளர்ந்த ஆருணி மண்வெட்டியுடன் போனான். உடைப்பை அடைக்க போராடினான். முடியாததால் உடைப்புக்கு குறுக்கே படுத்து விட்டான். அவனைத் தாண்டி தண்ணீர் ஒரு சொட்டு கூட வயலுக்குள் போகவில்லை. இரவு வரை ஆருணி வராததைக் கண்ட குரு, மற்ற மாணவர்களுடன் வயலுக்கு சென்றார். ஆருணி உடைப்பை மறைத்து படுத்திருப்பதையும், தண்ணீர் வயலுக்குள் வராததையும் கண்டு ஆச்சரியப்பட்டார். குரு பக்தியே இதற்கு காரணம் என்பதைப் புரிந்து கொண்டார். அவனை எழுந்து வர ஆணையிட்டார். ஆருணிக்கு’உத்தாலகன்’ என்று பட்டம் கொடுத்தார். இதற்கு’தண்ணீரைத் தடுத்தவன்’ என பொருள். உயரத்தில் இருந்தாலும், அடக்கமுடன் வாழ்பவன் உயர்வு பெறுவான் என்பதற்கு இந்த சம்பவமே உதாரணம். |
|
|
|