|
ஊரில் ஒரு பிரச்னை என்றால் அங்கு அருள்புரியும் தெய்வங்களே அவற்றைத் தீர்ப்பதில் முன்னிலை வகிக்கும். இதற்கு உதாரணமாகத் திகழும் திருத்தலத்தை தரிசிப்போம். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை மணல்மேடுக்கு இடைப்பட்ட கிராமம் காளி என்ற அபிராமி கோயில்பத்து. ’காளி’ என்பது தான் இன்றைய பெயர். கும்பகோணம், மயிலாடுதுறையில் இருந்து செல்லலாம். பலநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு நடந்த நிகழ்ச்சி இது. விவசாயப் பணிகளில் தான் காளி கிராமத்தினர் செய்து வந்தனர். ஒருமுறை அம்மன் அவர்களைச் சோதிக்க முடிவெடுத்தாள். அடைமழை பொழியச் செய்ய ஊரே வெள்ளக்காடானது. விளைந்த பயிர்களோ முற்றிய நிலையில் பாழாயின. மக்கள் அன்றாடப் பாட்டுக்கே அவதிப்பட்டனர். இந்நிலையில் மேலும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. சுத்தம் இல்லாத தண்ணீரைக் குடித்ததால், காலரா பரவியது. ஆடு, மாடுகளுக்கும் கோமாரி என்னும் அம்மை தாக்கியது. வைத்தியர்கள் கொடுத்த மருந்துகள் பலனளிக்கவில்லை. பலரும் இறக்க நேரிட்டது. மக்கள் கூடி ஆலோசித்தனர். அப்போது பெரியவர் ஒருவர், ”நமக்கெல்லாம் தாயாக இருப்பவள் கிராமத்தில் அருளும் அபிராமி. அவளை பிரார்த்திப்போம்” என்றார்.
மக்கள் ஊரிலுள்ள திருக்காமேஸ்வரர் கோயிலில் அபிராமி அம்மன் சன்னதியில் விளக்கு ஏற்றி அபிஷேகம் செய்தனர். தீபாராதனையின் போது மூதாட்டி ஒருத்தி சாமியாடினாள். ஆக்ரோஷத்துடன், ”டேய்ய்ய்... என் சன்னதிக்கு உங்களை வரவழைச்சது நான் தான்டா... உங்களோட நோய் தீரவும், ஆடு மாடுகள் இயல்பு நிலை அடையவும், விவசாயம் செழிக்கவும் வழி சொல்றேன். கேளுங்க...’ என்று சொல்ல, அனைவரும் நெகிழ்ந்தனர். ”சொல்லம்மா.... உன்னோட வாக்குக்காக காத்திருக்கோம்” என மூதாட்டி முகத்தை பார்த்தனர். ”நம் ஊரு கீரைமேடு வாய்க்காலில் காளியின் அம்சத்துடன் சிலை ஒன்னு புதைஞ்சு கிடக்கு. அபிராமியாக அருள்புரியும் நான் இதே ஊரில் விஸ்வரூபம் எடுத்து காளியாக இருக்கப் போறேன். அந்த சிலையை எடுத்து கோயில் கட்டுங்கள். நிம்மதி உண்டாகும்” என்று சொல்லி மயங்கினாள் மூதாட்டி. தண்ணீர் தெளித்து திருநீறு பூச, இயல்பு நிலைக்கு வந்தாள். ஊரார் அனைவரும் கீரை வாய்க்காலை நோக்கி ஓடினர். குறிப்பிட்ட இடத்தில் பள்ளம் தோண்ட, தன் திருமுகம் காட்டினாள் காளிதேவி. சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். பின் நோயிலிருந்தும் விடுபட்டனர். இப்போது இந்த காளி ’மந்தகரை காளியம்மன்’ என அழைக்கப்படுகிறாள். மந்தை போல் திரிந்த மக்களைக் கரை சேர்த்ததால் மந்தைகரை காளி என்றாகி பின்னாளில் ’மந்தக்கரை காளி’ எனப் பெயர் பெற்றாள்.
இந்த தலத்திற்கு இன்னொரு வரலாறும் உண்டு. சிவனின் சாபத்தால் ஒருமுறை அம்பிகை பசுவாக பிறந்தாள். சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து வழிபட சாப விமோசனம் அளித்தார் சிவபெருமான். அதன் பின் சிவன் அம்பிகையை திருமணம் செய்ய வேண்டுமே... காளி என்னும் இத்தலத்திற்கு அருகிலுள்ள திருமணஞ்சேரி தலத்தில் திருமணம் புரிந்தார். இதன்பின் அது திருமண வழிபாட்டுக்குரியதாக விளங்கியது. இங்கு நடந்த திருமணத்தைக் காண தேவர்கள், மகரிஷிகள், சிவகணங்கள் கூடினர். காளியும் அதில் பங்கேற்க, தன் சகோதரர் ஸ்ரீநிவாச பெருமாளுடன் வந்தாள். மீண்டும் புறப்பட்ட காளி வழியில் ஊரின் இயற்கை அழகில் மனதை பறிகொடுத்து இங்கேயே தங்கினாள். இதன் காரணமாக ஊருக்கு ’காளி’ எனப் பெயர் வந்தது. இனி கோயிலுக்குள் செல்வோம். முதலில் இடதுபுறம் விநாயகர் சன்னதி. பின்னர் கோஷ்ட தட்சிணாமூர்த்தி, லிங்கத் திருமேனி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமண்யர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் பிரகாரத்தில் உள்ளன. அபிராமி அம்மனுக்குத் தனி சன்னதி. காளியை ஊரில் குடியிருக்க வைத்தவள் இவள் தானே! வேண்டும் வரம் தரும் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தவிர பால சுகாம்பாள், நந்தி, நவக்கிரகம், பைரவர் சன்னதிகள் உள்ளன.
மணக்கோலத்தில் அருளும் பால சுகாம்பாளின் அழகு கண்களைக் கவர்கிறது. இதழில் புன்னகை, முகத்தில் நாணம் மின்ன சற்று தலை கவிழ்ந்து நிற்கும் மணப் பெண்ணாக நிற்கிறாள். மலர், அட்சர மாலை, அபயம், வரதம் தாங்கிய நான்கு கைகளுடன் இருக்கிறாள். அடுத்தது திருக்காமேஸ்வரர் சன்னதி. பெரிய அழகான சிவலிங்கத் திருமேனி. இவருக்கு ஐப்பசி அன்னாபிஷேகம், மாசி மகாசிவராத்திரி பூஜை சிறப்பாக நடக்கிறது. விருப்பம் நிறைவேற சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம் செய்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்வது சிறப்பு. திருமணத் தடை, குழந்தையின்மையைப் போக்க வழிபடுகின்றனர். திருமணம் தொடர்பான பிரார்த்தனையை நிறைவேற்றும் ’நித்ய கல்யாணப் பெருமாள்’ இத்தலத்தில் உள்ளார். பராந்தக சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. காளி திருக்காமேஸ்வரர், அம்மன், நித்ய கல்யாணப் பெருமாளை தரிசித்து நன்மை பெறுவோம்.
|
|
|
|