|
உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார் சோழ மன்னர் வீரசேனர். ஒருநாள் இரவில் நகர்வலம் புறப்பட்டார். அப்போது, அவருக்கு பசித்தது. அரண்மனைக்குத் திரும்பலாம் என நினைத்த போது மழை பெய்தது. அந்தணர் ஒருவரின் வீட்டுத்திண்ணையில் ஒதுங்கினார்.குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார் அவர். பசி தாங்காத மன்னர் தாழிட்ட கதவைத் தட்ட அந்தணரின் தூக்கம் கலைந்தது. “கதவைத் திறங்கள்” என சப்தமிட்டு கூப்பிடவே வெளியே வந்தார் அந்தணர். “தாங்கள் மன்னர் தானே!” என்றார். ஆச்சரியத்துடன் “எப்படி தெரிந்தது?” என்றார் மன்னர். “பேச்சின் தோரணையே உண்மையை உணர்த்துகிறது” என்றார் அந்தணர். “சரி...போகட்டும்! எனக்கு பசிக்கிறது. ஏதாவது கொடுங்கள்’ என்றார். “மன்னா! உணவேதும் இல்லையே’ ’என்றார் அந்தணரின் மனைவி. ”இதோ! அலமாரியில் பழங்கள் இருக்கிறதே!” என எடுக்கப் போனார் மன்னர். “இல்லை மன்னா! அந்தப் பழங்கள் நாளை காலையில் அமாவாசை சிராத்தத்துக்காக வைத்திருக்கிறோம். பிதுர்தேவதைக்கு சேர வேண்டிய பழங்களை சாப்பிடுவது பாவம்” என்றார் அந்தணர்.
அவரது பேச்சைப் பொருட்படுத்தாத மன்னரோ, பழங்களைச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பினார். மழையும் குறைந்தது. மன்னருக்கு சிறிது நேரத்தில் வயிற்றுவலி ஏற்பட்டது. இதைக் கண்ட மகாராணி “பிறர் பொருளை அபகரித்தது போல் ஏன் விழிக்கிறீர்கள்?” எனக் கேட்டாள். அந்தணர் வீட்டில் நடந்ததை மன்னர் தெரிவித்தார். பரிகாரமாக சிவத்தலங்களுக்கு யாத்திரை செல்லுங்கள் என்றார் அமைச்சர். பல கோயில்களுக்கு சென்ற மன்னர், அகத்தியர் வழிபட்ட சங்கரன்கோவிலை அடைந்தார். அங்கிருந்த துறவி ஒருவர், ’மன்னா! இத்தலத்திலுள்ள தீர்த்தத்தில் நீராடினால் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவம் அனைத்தும் தீரும்’ என வழிகாட்டினார். மன்னரும் நீராடி சுவாமியை வழிபட வயிற்றுவலி மறைந்தது. மற்றவர் பொருளை அபகரித்தவர்கள் மனம் திருந்தி சங்கரன்கோவில் சங்கரலிங்க சுவாமியை வழிபடலாம். மதுரை தென்காசி சாலையில் ராஜபாளையத்தில் இருந்து பிரியும் சாலையில் சங்கரன்கோவில் உள்ளது. |
|
|
|