|
ஆற்றங்கரையோர அரசமரத்து விநாயகர் கோயிலில் சாமியார் ஒருவர் இருந்தார். ஊருக்குள் சென்று மக்களிடம் பிச்சை கேட்பார். மற்ற நேரத்தில் அங்கிருக்கும் வட்டப்பாறை மீது அமர்ந்திருப்பார். இவரை ’வட்டப்பாறை சாமியார்’ என அழைத்தனர். ஒருநாள் சாமியார் பிச்சை கேட்க சென்ற போது, வழிப்போக்கர் ஒருவர் வந்தார். விநாயகரை வணங்கி விட்டு, திருநீறு பூசிக் கொண்டார். அருகில் இருந்த வட்டப்பாறையில் அமர்ந்து விட்டார். சற்று நேரத்தில் அங்கு வந்த சாமியார், பாறையில் யாரோ ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார். “ என்னோட பாறையில் மற்றவர் யாரும் உட்காரக் கூடாது தெரியாதா?” என்றார் ஆவேசமாக. “வாழ்க்கையைத் துறந்து சாமியாரான உங்களுக்கு, இந்த பாறையை துறக்க மனசில்லையா? பட்டினத்தார் ஒன்பது கோடி சொத்துக்கு ஒரே வாரிசு. ஆனாலும் அவர் துறவியான போது தன்னுடைய திருஓட்டைக் கூட சொத்தாக கருதி, அதனை ’வேண்டாம்’ என்று கீழே போட்டு உடைத்தார். ஆனால் உங்களுக்கோ, இந்த பாறையில் வேறொருவர் தெரியாமல் கூட உட்கார்வதை பொறுக்க முடியவில்லையே! சாமியார் என்று உம்மைச் சொல்வது கலியின் கொடுமை தான்!” என்றார். மவுனியானார் சாமியார். |
|
|
|