|
வேட்டைக்குச் சென்ற மன்னர் ஒருவர் காட்டில் குடில் அமைத்து தங்கினார். தூங்கும் போது அவரது காதில் பூச்சி ஒன்று நுழைந்தது. எவ்வளவு முயன்றும் பூச்சி வெளியேறவில்லை. அரண்மனைக்கு உடனே திரும்பியவருக்கு மூலிகைச் சாறை பிழிந்து காதில் ஊற்றினார் வைத்தியர். அப்போதும் பூச்சி வராததால், இதை தீர்ப்பவருக்கு பரிசளிப்பதாக அறிவித்தார் மன்னர். பலரும் வைத்தியம் பார்த்தும் பூச்சி வரவில்லை. சரிவர சாப்பிடாததால் உடல் மெலிந்து வாழ்வின் இறுதியை நெருங்குவதாக உணர்ந்தார்.
இந்நிலையில் ரிஷிகேஷத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் வந்த செய்தி, மகாராணியை எட்டியது. துறவியை தரிசிக்க சென்றாள். ’நலமுடன் வாழ்க’ என ஆசியளித்தார். ”சுவாமி! மன்னர் உடல்நலக்குறைவால் அவதிப்படும் போது எப்படி நான் நலமுடன் வாழ முடியும்?” என அழுதாள் ராணி.
அரண்மனை வைத்தியருடன் ஆலோசித்த துறவி தியானத்தில் ஆழ்ந்தார்.
சிறிது நேரத்தில் கண் விழித்த அவர், ”மன்னரே! தங்களின் காதில் நுழைந்தது சாதாரண பூச்சி அல்ல! சாதாரண மூலிகையால் அதை கட்டுப்படுத்த முடியாது. என் சீடர்களை மலைநாட்டிற்கு அனுப்பி பச்சிலையை பறித்து வரச் செய்தால் பிரச்னை தீரும்” என்றார்.
வீரர்களுடன் புறப்பட்ட சீடர்கள் ஒரு வாரத்தில் பச்சிலையுடன் திரும்பினர். ஒருநாள் இரவு முழுவதும் மூலிகையை பூஜையில் வைத்து வழிபட்ட துறவி, மறுநாள் காலையில் சாறு பிழிந்தார். மன்னரின் அருகில் இருந்தவர்களை வெளியே அனுப்பி விட்டு, தான் மட்டும் தனியாக மன்னரின் காதில் மருந்தை ஊற்றினார். காதில் இருந்த பூச்சி, கண் இமைக்கும் நேரத்திற்குள் செத்து விழுந்தது. ஆனந்தக் கண்ணீர் விட்டார் மன்னர். துறவியின் கால்களில் விழுந்து வணங்கினார்.
ராணியும் நன்றி தெரிவித்து உபசாரம் செய்தாள். மன்னரும் தன் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். துறவி சீடர்களுடன் மீண்டும் யாத்திரை புறப்பட்டார்.
நாட்டின் எல்லையை அடைந்ததும் சீடர்கள், ”குருநாதா! சாதாரண பச்சிலையைத் தானே நாங்கள் பறித்து வந்தோம். ஆனால் இத்தனை நாளாக உயிருடன் இருந்த பூச்சியை எப்படி உங்களால் கொல்ல முடிந்தது?” எனக் கேட்டனர்.
வாய் விட்டுச் சிரித்தார் துறவி.
”இத்தனை நாளும் பூச்சி எங்கே இருந்தது தெரியுமா?”
”அவரின் காதிற்குள்”
” நீங்கள் நினைப்பது உண்மை என்றாலும் அந்த பூச்சி ஏற்கனவே செத்திருக்கலாம் அல்லது வெளியே போயிருக்கலாம். இருந்தாலும் பூச்சியால் ஏற்பட்ட குறுகுறுப்பு மன்னரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. உயிருடன் பூச்சி இருப்பதாக மன்னரின் மனம் நம்பியதே பிரச்னைக்குரிய காரணம்”
”குருவே! மன்னரிடம் உண்மையை விளக்கினால் பிரச்னை முடிந்திருக்குமே”
”ஏதோ மலையளவு பிரச்னையில் சிக்கியிருப்பதாக கருதும் மன்னருக்கு, அதற்கேற்ப சிகிச்சையளிப்பது அவசியம். நீங்கள் கொண்டு வந்த பச்சிலையில் சாறெடுத்து ஊற்றியதும் செத்த பூச்சி ஒன்றைக் காட்டி மன்னரை நம்ப வைத்தேன். உடனே அவரது மனப்பிரச்னை மறைந்தது”
மன்னர் போலவே பல மனிதர்களும் தேவையின்றி கவலைப்படுகிறார்கள். சம்பாதிக்க அலைவது, தேடிய பணம் பறி போகுமோ என்ற கவலைப்படுவது என எப்போதும் மனதை அலைக்கழிக்கின்றனர். மரணம் அனைவருக்கும் உறுதி என்னும் போது கவலை எதற்கு?
மாவீரர் அலெக்சாண்டர் இறக்கப் போகும் தருணத்தில் அதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டார். பணியாளர்களை அழைத்து, ”என் உடலை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பொன்நாணயங்களை வீசுங்கள்” என்றார்.
”ஏன் மன்னா ” என வியந்தனர்.
”சம்பாதித்தது எதுவும் கூட வராது என்பதை உலகம் அறியட்டும்” என்றார்.
” ஆகட்டும் மன்னா” என்றனர். மேலும், ” என் சவப்பெட்டியை மருத்துவர்கள் சுமக்கட்டும். இத்தனை நாளாக காப்பாற்றியவர்கள், நிரந்தர சுகத்தை அடையச் செல்லும் என்னை இறுதியாக சுமக்கட்டும்” என்றார்.
தலையசைத்தனர் பணியாளர்கள்.
”இன்னும் ஒரு ஆசை இருக்கிறது. சவப்பெட்டியில் என் கைகள் வெளியே தெரியும்படி விரித்திருக்கட்டும்”
மவுனமாக நின்ற அவர்களிடம், ”ஏன் தெரியுமா? நான் பிறக்கும் போதும் எதையும் கொண்டு வரவும் இல்லை. இறக்கும் போதும் எதையும் கொண்டு போகவும் இல்லை” என்றான்.
”ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே” என்னும் பாடல் வரியை சிந்தித்தால் மனதில் தெளிவு பிறக்கும்.
|
|
|
|