|
கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பது தெரியாத போதே, பள்ளிக்கூடத்தில் சேர்க்க தயாராகி விடுகின்றனர் பெற்றோர். இரண்டு வயசானதும் குழந்தை ’ப்ளே ஸ்கூல்’ செல்ல வேண்டியிருக்கிறது. ’அம்மாதான் குழந்தையின் முதல் ஆசிரியை’ என்பதை மறக்க கூடாது. நல்ல பண்புகளை கற்றுத் தருவது அவசியம்.
நன்மை, தீமையை குழந்தையிடம் திணிக்க காத்துக் கிடக்கிறது வெளியுலகம். பாலும், நீரும் கலந்து வைத்தால் பாலை மட்டும் குடிக்கும் அன்னப் பறவையாக நல்லதை தேர்ந்தெடுக்கும் மனவலிமை இருப்பது அவசியம்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பார்கள். குழந்தையின் மனதில் கள்ளம், கபடம் இருக்காது. எதற்காகவும் கவலைப்படத் தெரியாது. கோபம் வந்தாலும் சிறிது நேரத்தில் மறைந்து விடும்.
இப்படித் தான் நான்கு வயது குழந்தை ஒன்று இருந்தது. அதன் தாய் காலமாகி விட்டாள். தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தது. எழுந்ததும் காலை வணக்கம் சொல்ல வேண்டும்; கடவுளை வழிபட வேண்டும்; உண்ணும் போது கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றெல்லாம் நல்ல பழக்கங்களை சொல்லிக் கொடுத்திருந்தார்.
ஒருநாள் குழந்தை ஏதோ தவறு செய்யப் போக கோபத்தில் அடித்து விட்டார். குழந்தை நெருங்கி வந்தும் புறக்கணித்தார். படுக்கைக்குச் செல்லும் முன்பு ’இரவு வணக்கம் நல்ல கனவுகளோடு’ என்று சொன்ன பிறகே தூங்கச் செல்லும் இந்த குழந்தை.
தந்தை கோபமாக இருக்கிறாரே என சிறிதும் தயங்கவில்லை. கட்டில் மீதேறி வணக்கம் சொல்லி முத்தம் கொடுத்தது. கள்ளம் இல்லாத குழந்தைக்கு விட்டுக் கொடுக்கும் மனம் இருந்தது. ஆனால் பொறுமையுடன் தவறைச் சுட்டிக் காட்டும் பண்பு தந்தைக்கு இல்லையே ஏன்?
”மனிதன் பிறக்கும் போது இருந்த குணம் போகப் போக மாறுது” என்பது சத்தியமான வாக்கு.
குழந்தை வளர வளர அதன் மனதில் கோபம், ஆணவம் என வேண்டாத குணங்கள் வளர்கின்றன. எதிர்காலத்தில் தந்தையாகும் நிலையில் விட்டுக் கொடுக்கும் குணம் மறைந்து விடுகிறது.
மற்றவர் குறையை மன்னிப்பது போல, செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்கும் பெருந்தன்மை வேண்டும். ஆனால் அதை பலர் அவமானமாக கருதுகின்றனர்.
பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்தார் ஒருவர். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. விமான பயணத்திற்கு முன்பதிவும் செய்து விட்டார். கிளம்பும் நேரத்தில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு. விஷஜுரத்தால் படுத்த படுக்கையானது. பயத்தில் அவரது மனைவி பதறினாள்.
குடும்பத்தினரும், மருத்துவரும் குழந்தையைப் பார்த்துக் கொள்வார்கள் என்று தைரியம் சொல்லி விட்டு புறப்படத் தீர்மானித்தார். ஆனால் மனைவியின் பிடிவாதத்தால் குறிப்பிட்ட விமானத்தில் கிளம்ப முடியவில்லை.
ஆனால் மருத்துவரின் கவனிப்பால் ஒரே நாளில் குழந்தை அபாய கட்டத்தை தாண்டியது. தன் பேச்சை நம்பாத மனைவி மீது கோபம் கொப்பளித்தது அதிகாரிக்கு. கண்மூடித்தனமாக கத்தினார். சாப்பிடாமல் அடம் பிடித்தார். ஆனால் நடந்த சம்பவத்தை அறிந்ததும் திடுக்கிட்டார். அவர் செல்லவிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி
அனைவரும் இறந்த செய்தி உலுக்கியது. கடவுள் போல சரியான தருணத்தில் காப்பாற்றிய மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். அன்புக்கு கட்டுப்படுவது தானே மனிதத்தன்மை!
மனிதன் மட்டுமல்ல...! தவறு செய்தவர் கடவுளாக இருந்தாலும் விதிவிலக்கு கிடையாது என்பதற்கு ராமர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் எடுத்துக்காட்டு.
மண்ணில் மனிதனாகப் பிறந்து தர்மவழியில் வாழ்ந்து காட்டியவர் ராமர். அவர் ஒருநாள் ஒரு கல்லின் மீது தனியாளாக அமர்ந்திருந்தார். அப்போது கையில் இருந்த வில்லை எடுத்து மண்ணில் ஊன்ற முயன்றார்.
வில்லில் இருந்த அம்பு, தத்திச் சென்ற தவளையின் முதுகில் குத்தியது.. தன்னை குத்தியது ராமபிரான் என்பதை உணர்ந்த தவளை அமைதி காத்தது.
நடந்ததை அறிந்த ராமர், ”தவளையே! நீ சத்தமிட்டிருந்தால் தப்பியிருக்கலாமே?” என்றார் பரிதாபமாக. ”வேறு யாராவது குத்தினால் ’ராமா’ என தங்களிடம் முறையிடுவேன். நீரே என்னைக் குத்தும் போது யாரிடம் நான் முறையிடுவது?” என்றது. அறியாமல் செய்தாலும் தன் தவறுக்காக சிறிய உயிரான தவளையிடம் மன்னிப்பு கேட்டதோடு, அதற்கு மோட்சத்தை வழங்கினார் ராமர். தவறுக்காக மன்னிப்பு கேட்பது தேவ குணம் அல்லவா!
|
|
|
|