|
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து பாற்கடலை கடைய உதவிய மகாவிஷ்ணு நித்திரையில் ஆழ்ந்தார். அப்போது பாற்கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றினாள். அழகும், செல்வமும் கொண்ட அவளை பார்த்த அனைவருக்கும் திருமணம் செய்ய ஆசை வந்தது. “மகாலட்சுமி! என் தேரில் ஏறிக் கொண்டால் உலகமெங்கும் தினமும் சுற்றலாம்” என்றான் சூரியன். ’மகாராணியாக என் அருகில் அமர்ந்து தேவலோகத்தை ஆளலாம்’ என்றான் இந்திரன். இப்படி தேவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பெருமையை அடுக்கினர். ஆனால் அவள் யாரையும் பொருட்படுத்தவில்லை.
இப்படி களேபரம் நடக்க மகாவிஷ்ணு ஒன்றும் தெரியாதவர் போல கண்களை மூடி இருந்தார். மகாலட்சுமியின் அழகையோ, செல்வத்தையோ கண்டு மயங்கவில்லை. இதை உணர்ந்த அவள், ”என்னை அடைய பலரும் இங்கே ஆரவாரம் செய்ய, கண்மூடி தூங்குகிறாரே இவர்! என் செல்வம், அழகைக் கண்டு ஆசைப்படாத இவரல்லவா எனக்கானவர்” என்றாள். மனதைக் கட்டுப்படுத்தி ஆசைகளை கைவிட்டால் மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கும் கிடைக்கும். |
|
|
|