|
நல்லாப்பிள்ளை என்பது ஒருவரின் பெயர். இவரது பெயரில் இருக்கும் நன்மை வாழ்வில் இல்லை. இளமையில் தகாத நண்பர்களுடன் பழகினார். இவருக்கு திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர். மனைவியோ குணவதி.. இருந்தாலும் பலனில்லை. கூலி வேலை செய்து குடும்பத்தை மனைவி காப்பாற்ற, இவரோ ஊரைச் சுற்றினார். ஒருநாள் நண்பர்களுடன் வெளியே சென்று இரவில் தாமதமாக வந்தார். “வீட்டில் ஒருத்தி இருப்பது உங்களுக்கு நினைவில்லையா? இவ்வளவு நேரம் எங்கே போனீர்கள்?” என கோபமாக கேட்டாள் மனைவி. ”குரு குலத்துக்கு பாடம் கற்கப் போனேன்”என்றார் நல்லாப்பிள்ளை விளையாட்டாக. “இந்த உலக்கைக்கு கொம்பு இருக்கிறது என்றாலும் நம்புவேன். நீங்கள் குருகுலம் பக்கம் போனதாக யார் சொன்னாலும் நம்ப மாட்டேன்” என்றாள்.
மனைவியின் குத்தல் பேச்சு நல்லாப்பிள்ளையின் மனதைப் பிசைந்தது. எந்தளவுக்கு தன்னை முட்டாளாக கருதுகிறாள் என்பதை உணர்ந்தார். இனி படிக்காமல் இருக்கக் கூடாது என முடிவெடுத்து குருகுலம் புறப்பட்டார். நல்லாப்பிள்ளையின் குணம் அறிந்த குருநாதர், ”உனக்கெல்லாம் படிப்பே வராது” என மறுத்தார். குருநாதரின் காலில் விழுந்து, ”குருநாதா! ஒழுங்காகப் படிப்பேன், என்னை மாணவனாக ஏற்க வேண்டும்” என கெஞ்சினார். குருவின் மனம் இளகியது. உணவு, உடை, இருக்க இடம் கொடுத்து பாடம் கற்றுக் கொடுத்தார். நல்லாப்பிள்ளை இப்போது பெயருக்கேற்ப நல்லவனாக மாறினார். இலக்கணம், இலக்கியம் என அனைத்தும் கற்று தேர்ந்தார். படிப்பில் அவருக்கு இருந்த அக்கறை கண்ட குருநாதர் அதிசயித்தார். ஒருநாள் குருவின் மனைவி அளித்த உணவில் துவையல் கசப்பாக இருந்தது. “குருவே! இன்று துவையல் கசப்பாக இருக்கிறதே?” என்றார் நல்லாப்பிள்ளை.
“ இது வேப்பிலை துவையல். தினமும் இதே துவையலை தான் நீ சாப்பிட்டாய். படிப்பில் இருந்த அக்கறையால் பொருட்படுத்தாமல் இருந்து விட்டாய். இப்போது பாடங்களை எல்லாம் கற்றுத் தேர்ந்ததால் உணவின் சுவையை உணர ஆரம்பித்து விட்டாய். நன்றாக படித்த உன்னை சான்றோனாக உலகம் ஏற்கும். சாதிக்கப் புறப்படு” என்றார். நல்லாப்பிள்ளையைக் கண்டு, மனைவி மகிழ்ந்தாள். காவியமான மகாபாரதத்தை தமிழில் எழுதினார் நல்லாப்பிள்ளை. படிப்புக்கு வயது பொருட்டல்ல. எந்த வயதிலும் சாதிக்க முடியும்.
|
|
|
|