|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » மரணமில்லாப் பெருவாழ்வு |
|
பக்தி கதைகள்
|
|
அன்று காலை பத்து மணிக்கு ஒரு பெரிய மருத்துவமனையிலிருந்து அழைப்பு வந்தது. பேசியது பெண்குரல்.
“அவசரம். இன்னும் அரை மணி நேரத்திற்குள் உங்களால் இங்கு வர முடியுமா? மரணத்தின் விளிம்பில் ஒரு உயிர் துடித்துக் கொண்டிருக்கிறது. கடைசி விருப்பத்தைக் கேட்ட போது உங்களைப் பார்க்க வேண்டும் என்றார்கள்”
மேலும் விபரங்களை அவள் சொன்னாள்.
அந்த பெண் என் மாஜி வாடிக்கையாளரின் மனைவி. மறுக்க மனமில்லாததால் காரில் புறப்பட்டேன். வழியில் ஒரு பெண் மறித்தாள்.
ஆகா! பச்சைப்புடவைக்காரி! அவளும் காரில் ஏறிக் கொண்டாள்.
“அந்தப் பெண்ணிடம் என்ன சொல்லப் போகிறாய்?”
“தாயே. நீங்கள் சொல்வதை அப்படியே கிளிப்பிள்ளை போலச் சொல்வேன். நீங்கள் சொல்வதை எழுதி ’எழுத்தாளன்’ என நான் பெயர் வாங்கவில்லையா?”
அன்னை சிரித்தாள்.
“நீ பல நாவல்கள் எழுதியிருக்கிறாய். அதில் ஒரு நாவலில் வஞ்சனையால் செத்த ஒரு மனிதனைப் பற்றி எழுதியிருக்கிறாயே”.
“ஆம், தாயே! ரங்கநாதன் என்ற அந்த மனிதர் பாவம் தன் உடன் பிறந்த தம்பிகளின் மீது பாசத்தைக் கொட்டி வளர்க்கிறார். அவர்களோ சூழ்ச்சி செய்து சொத்துக்களைப் பறித்துக் கொண்டு நடுத்தெருவில் நிற்க விடுகிறார்கள். அவர் எப்படி மீள்கிறார் என்பதை அந்தக் கதையில்”
“நிறுத்து போதும். அந்த மனிதர் சாவதற்கு முன் எங்கே இருந்தார்?”
“எண்ணத்தில் உருவாகி என் மனதில் உறைந்து போன கற்பனை பாத்திரம்.”
“உனக்கு நாவல் என்றால்... எனக்கு இந்த பிரபஞ்சம்.”
“புரியவில்லை, தாயே!”
“இந்த பிரபஞ்சமே நான் எழுதிக் கொண்டிருக்கும் நாவல் தான்! அதில் நீ ஒரு பாத்திரம். உன்னை மருத்துவமனைக்கு அழைத்த பெண் ஒரு பாத்திரம். சாகக் கிடக்கும் பெண்ணும் ஒரு பாத்திரம். இதோ அங்கே நடக்கும் முதியவர்.. அதோ ஓடும் சிறுவன் எல்லாம் பாத்திரங்கள் தான்”
அன்னையை தியானிக்க படாதபாடு படுகிறோம் நாம். ஆனால் நாம் எல்லாம் அவளின் மனதில் நிரந்தரமாகக் குடியிருக்கிறோம்.
எவ்வளவு பெரிய தத்துவம்! தத்துவத்தை பிறகு பார்க்கலாம் தாயே! இப்போது அந்தப் பெண்ணிடம் என்ன பேசுவது என சொல்லுங்கள்”
“அந்தக் காட்சியைப் பார்.
மேலைநாட்டுப் பெண்ணான ஜனீன் என்பவள் பல சோதனைகளைச் சந்தித்தாள். 2003ல் இதய அறுவைச் சிகிச்சையிலிருந்து அவள் பிழைத்தது அதிசயம். 2005ல் அரிய ரத்தப் புற்றால் தாக்கப்பட்டாள். மரணத்தைத் தள்ளிப் போட முயற்சி செய்யலாம்.’ என்றனர் மருத்துவர்கள்.
சாவின் நிழலில் இருந்த ஜனீனின் வாழ்வில் 2008ம் ஆண்டு ஒரு நம்பிக்கை நட்சத்திரம் தோன்றியது. அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தினர் மரணத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு சிலோசிபின் (ணீண்டிடூணிஞிதூஞடிண) என்ற மருந்து கொடுத்து அதன் மூலம் மரணம் கடந்த நிலை பற்றிய தெளிவை உண்டாக்க முடியுமா என்று ஆய்வு செய்தனர்.
மரணம் நம் முடிவல்ல என்ற தெளிவுடன் ஏற்பதே அவர்களின் ஆய்வின் நோக்கம். ஜனீன் ஆய்வுக்கு உட்பட சம்மதித்தாள். பூர்வாங்க சோதனை முடிந்தபின் ஆய்வுக்கூடத்தில் ஜனீனுக்கு மாத்திரை கொடுக்கப்பட்டது. அவளை ஒரு இருக்கையில் அமர வைத்து, அமைதியான சூழலில் எதையும் பார்க்க முடியாதபடி முகமூடி அணிவிக்கப்பட்டது. இனிய இசையை கேட்கும்படி செய்தனர்.
எட்டு மணி நேரம் வித்தியாசமான சூழலில் புதிய அனுபவங்களைப் பெற்றாள் அவள். அதுவரை கடவுளை நம்ப மறுக்கும் அவள் சொன்ன விஷயம் கேட்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ந்தனர்.
“என் உடலின் ஒவ்வொரு அணுவும் கடவுளுடன் இரண்டறக் கலந்தது. என் மீது கடவுள் தன்மை முழுவதும் படிந்துவிட்டதை உணர்கிறேன்...” இது சோதனையின் ஆரம்பத்தில் ஜனீன் பேசியதன் ஒலிப்பதிவு.
உச்சகட்டத்தில் இசையின் சுருதி படிப்படியாக ஏறிக் கொண்டே போக திடீரென நிறுத்தினர். சில விநாடிகள் அவளது மூச்சு கூட நின்றது. அது பற்றி அவள், ”மூச்சு நின்றால் பரவாயில்லை என தெரிந்த போதும் மனம் சிலிர்த்தேன். அது மிகப் பெரிய ஞானம். அந்த ஞானம் என் மரண பயத்தையே விரட்டியது.” அதன்பின் 2015 வரை வாழ்ந்த ஜனீன் அமைதியாக மரணம் அடைந்தாள்.
“மரத்திலிருந்து இலை உதிர்ந்தால் அது அழிந்ததாகச் சொல்வது அபத்தம். பணியை நிறைவு செய்து விட்டு, மரத்தின் வேருக்கு வலுவூட்டும் உரமாக மாறப் போகிறது இலை. அது பணிமாற்றம் மட்டுமே. முடிவு அல்ல.
மரணம் பற்றிய உண்மையை பகவத்கீதை அழகாகச் சொல்கிறது. அதைப் புரிந்து கொள்ள மேலைநாட்டுக்கு மருந்து, மாத்திரை தேவைப்படுகிறது.
“மரணத்தைப் பற்றிப் பல நுட்பமான விஷயங்களை உனக்குச் சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும் சரியாக உள்வாங்கிக் கொண்டாயா? அப்படியே அவளிடம் சொல்வாயா?!”
“சொதப்பி விடுவேன், தாயே.”
“என்ன உளறுகிறாய்?”
”நீங்கள் எவ்வளவு பெரிய தத்துவத்தை நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள்? இதை எப்படி என்னால் சொல்ல முடியும்?”
“பின் அவளுக்கு யார் இதை சொல்வார்கள்?”
“தாயே, மரணத்தின் விளிம்பில் உள்ள அவளிடம் உங்களை நினைத்தபடி கண்ணீருடன் நிற்பேன். நீங்கள் என் மனதில் எண்ணங்களாக, வார்த்தைகளாக வந்து இறங்கி அவளுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு தருவீர்கள்! நடுவே “நான் சொல்கிறேன்” “நான் செய்கிறேன்” என்ற எண்ணம் எனக்கு வந்தால் எல்லாம் சொதப்பலாகி விடும்.”
அன்னை சிரித்தாள். அப்போது மருத்துவமனையை கார் அடைந்தது. காரை விட்டு இறங்கினேன்; அன்னை மறைந்தாள். மருத்துவமனைக்குள் நம்பிக்கையுடன் நடக்கத் தொடங்கினேன்.
|
|
|
|
|