|
தொலைக்காட்சி பார்க்கும் போது சேனலை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். நம் மனசும் அப்படித் தான். ஒன்றை நினைக்கும். கண நேரத்திற்குள் வேறொன்றை நினைக்கும். சேனல் மாறுவது போல எண்ணம் மாறிக் கொண்டேயிருப்பதால் ’குரங்கு மனசு’ என்றார்கள் நம் முன்னோர். மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல ’இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா’ என எப்போதும் சஞ்சலப்படுகிறோம்.
இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல மனம் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் நிலை என்னாகும் என்பதை ஒரு அடியவர் வாழ்வில் நடந்த சம்பவம் காட்டுகிறது. கைலாய மலையில் சிவனுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தார் சுந்தரர். சுவாமியைத் தரிசிக்க வருவோருக்கு திருநீறு கொடுப்பது, பூஜைக்குரிய மலர் பறிப்பது, நறுமணப் புகையிடுவது போன்ற பணிகள் செய்வது அணுக்கத்தொண்டு. ஒருநாள் மலர் பறிக்க நந்தவனம் சென்றார் சுந்தரர். அங்கு பார்வதியின் தோழியரான கமலினி, அனிந்தை என்னும் பெண்களைச் சந்தித்தார். அவர்களின் அழகில் மனதைப் பறிகொடுத்தார். மன்மதனை நெற்றிக்கண்ணால் எரித்த சிவபெருமானின் இருப்பிடத்தில் பணி செய்யும் சுந்தரருக்கு பெண் இன்பத்தில் நாட்டம் வரலாமா?
மலர்களுடன் வந்த சுந்தரரை தடுத்தார் சிவன்.
”சுந்தரா! நந்தவனத்தில் இப்போது என்ன நடந்தது?”
தலை குனிந்தார் சுந்தரர். பதிலளிக்கவில்லை.
அவர் பார்வையில் இருந்து யாரால் தப்பிக்க முடியும்? எல்லாம் அறிந்தவர் அல்லவா அவர்.
”சுந்தரா...! கைலாயம் என்பது வழிபாட்டுக்குரிய இடம். காம சிந்தனையுடன் யாரும் இங்கிருக்க முடியாது. பூமியில் மனிதப்பிறப்பு எடுத்து, கமலினி, அனிந்தையை திருமணம் புரிந்து, சில காலம் வாழ்ந்த பின்னர் என்னை மீண்டும் அடைவாயாக” எனக் கட்டளையிட்டார்.
’நம்பியாரூரர்’ என்னும் பெயரில் பிறந்தார் சுந்தரர். அந்த பெண்களும் பரவையார், சங்கிலியார் என்னும் பெயரில் பூமிக்கு வந்தனர். அவர்களுடன் சிலகாலம் வாழ்ந்து விட்டு மீண்டும் கைலாயத்தை அடைந்தார்.
கைலாயத்தில் தொண்டு செய்தாலும், தவறு செய்யும் போது அதற்கான பரிகாரம் தேடத் தானே வேண்டும்.
இப்படித் தான் கிராமத்தில் ஒரு திருடன் இருந்தான். யாருக்கும் சந்தேகம் வராத படி நல்லவனாக நடப்பான்.
தன்னைப் போலவே மகனும் சாமர்த்தியமாக திருடி வாழ வேண்டும் என ஆசைப்பட்டான். ஆனால் மகனுக்கு அதில் துளியும் ஆசையில்லை.
ஒருநாள் இரவில் பண்ணையார் வீட்டுக்குள் நுழைந்தான் திருடன். அவனது கண்ணில் கொழுத்த ஆடு ஒன்று தென்பட்டது. அசட்டுத் துணிச்சலுடன் அதை திருடினான். இரவோடு இரவாக ஆட்டை வெட்டி, கறி முழுவதையும் உப்புக்கண்டம் செய்து வைத்தான். ஆடு காணாமல் போன விஷயம் ஊரெங்கும் பரவியது. உண்மை தெரிந்தால் பண்ணையார் என்ன செய்வாரோ என்ற பயம் தொற்றியது.
”அப்பா! திருடிச் சாப்பிட்ட உணவு உடம்பில் ஒட்டாது. பயத்தால் உங்களின் முகம் வெளிறி விட்டது. உண்மையை ஒத்துக் கொள்ளுங்கள். தண்டனையை ஏற்கத் தயாராகுங்கள்” என பண்ணையாரிடம் அழைத்துச் சென்றான் மகன்.
பயம் கூட சில சமயத்தில் மனிதனுக்கு நல்வழி காட்டுகிறது.
வலிய வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டதால் ஆட்டுக்குரிய விலையை மட்டும் பெற்று மன்னித்தார் பண்ணையார். நிம்மதியை தொலைக்கும் திருட்டை விட்டு உழைத்து வாழ முடிவெடுத்தான் திருடன். மறுநாள் காலையில் பண்ணையார் வீட்டு வயலில் களையெடுக்கும் பணியாளாக சேர்ந்தான். வயலில் நெல்பயிர்களோடு களை வளர்வது இயல்பான விஷயம் தானே!
உழுவது, நாற்று நடுவது, உரமிடுவது போல களை பறிப்பதும் அவசியமானது.
”ஏன் களை எடுக்கணும்? அதுவும் வளர்ந்து விட்டு போகட்டுமே” என சொல்ல முடியுமா? களை எடுத்தால் தான், பயிர்கள் நன்றாக விளையும். இல்லாவிட்டால், மண்ணில் உள்ள சத்துக்கள் மூலம் களைகள் வளர ஆரம்பிக்கும். நல்லதும் தீயதுமாக பலவித எண்ணங்கள் நம் மனதில் வளர்கின்றன. தீமையை களையாவிட்டால் நாளடைவில் துன்பத்திற்கு ஆளாக நேரிடும். ’அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்கிறாள் மூதாட்டி அவ்வை. அரிய மனிதப்பிறவி நமக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நல்லவர்களாக வாழ்வோம். |
|
|
|