|
கொடை வள்ளல் கேசவன் முன் அமர்ந்திருந்தார் ஆசிரியர் ராமசாமி. “ஐயா! எங்க பள்ளிக் கூடத்தை விரிவுபடுத்த 10 லட்சம் மதிப்பில் திட்ட மிட்டிருக்கோம். உங்களால முடிஞ்சதை கொடுத்தா நல்லாயிருக்கும். உதவி பண்ணுங்க!” என்றார். ஐயாயிரம் ரூபாயை கொடுத்தார் கேசவன்.
“தப்பா நினைக்காதீங்க! உங்க கிட்டே இருபதாயிர மாவது எதிர்பார்த்தோம். பெரிய மனசு பண்ணுங்க!” என்றார் ராமசாமி.
“குடுக்கிறத வாங்கிட்டு கிளம்புங்கய்யா!” என்று சொல்லி விட்டு, ”ஏம்மா...கோசலை! இவருக்கு டீ கொடுத்தனுப்பு” என்றார் சமையல்காரியிடம்.
அப்போது கேசவனின் அலைபேசி ஒலித்தது. பேசிய அவரது முகம் இறுக்கமானது.
ஆசிரியரிடம், ”ஐயா! அந்த பணத்தைக் கொடுங்க!” என்றார். ’என்னடா வம்பா போச்சு! வெறும் டீ மட்டும் தான் போலிருக்கு! இருபதாயிரம் கேட்டது தப்பா போச்சே! கிடைச்ச பணமும் கையை விட்டுப் போகுதே! டீ வேண்டான்னு உடனே கிளம்பியிருக்கணும்!” என யோசித்தபடி பணத்தை கொடுத்தார்.
செக் புக்கை கையில் எடுத்தவர் ஒரு லட்சம் என எழுதினார். ராமசாமி ஆச்சரியமுடன்,“திடீர்னு திக்குமுக்காட வச்சிட்டீங்களே?” என்றார்.
’ஐயா! இப்போ என் கம்பெனியில தீப்புடிச்சு பத்து லட்ச ரூபாய் நஷ்டமாயிடுச்சு. இது எனக்கு பணம் போற காலம் போலும்! போனது போச்சு! பத்து பதினொன்னா இருந்துட்டு போகட்டும்! இதாவது பயனுள்ளதா இருக்குன்னு நினைச்சுட்டு போறேன்! எவ்வளவு வந்தாலும் தங்குறது தான் தங்கும்” என்றார். |
|
|
|