Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கடைசித் தருணங்கள்
 
பக்தி கதைகள்
கடைசித் தருணங்கள்

அன்று மனம் ஒரு நிலையில் இல்லை. மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்றேன். அங்கு ஒரு பெண்,  “உன் மனதில் இருக்கும் கேள்விகளில் எது முக்கிய கேள்வியோ அதை  கேட்டு விடு. அப்புறம்...”

ஆகா! பச்சைப்புடவைக்காரி.  அவளுடைய வார்த்தைகள் என்னை திடுக்கிட வைத்தன.

“ஆமப்பா. இனி நாம் பார்க்க முடியாது. நாம் பேசிய விஷயங்களை அசை போட்டுக்கொண்டிரு. கொஞ்சம் இடைவெளி விட்டுப் பிறகு சந்திக்கலாம்” அழுகையை அடக்கியபடி அவளிடம் பேசினேன்..

“தாயே, உங்களிடம்  எதைக் கேட்க வேண்டும் என்ற அறிவையும் நீங்கள் தான் தர வேண்டும்.”

தலையில் கைவைத்து ஆசியளித்தாள். மனதில் கேள்வி உதயமானது.

“ஏதோ சம்பாதிக்கிறேன். செலவு செய்கிறேன்; எழுதுகிறேன்; பேசுகிறேன்; என்றாலும் வாழ்வின் சாதனைப் பக்கங்கள் இன்னும் காலியாகவே இருக்கிறதே! இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய முடியும்? நான் என் வாழ்வின் முன்னிரவுப் பொழுதில் இருக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியும்.”

“பலரின் மனங்களை துளைக்கும் கேள்வி இது. வெறும் வார்த்தையால் விளக்கம் கொடுத்தால் புரியாது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் ஒரு பெரிய சாதனையாளரைப் பார்ப்போம். காட்சி கண்ணுக்கு தெரிந்தது.

அவர் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். கோல்கட்டாவில் வசிக்கிறார்.

சாகித்ய அகாடமி, ஞானபீடம், பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளைப் பெற்றவர். காதல், ஆன்மிகத்தை எழுத அவரை விட்டால் ஆள் இல்லை. அடுத்த ஆண்டு  நோபல் பரிசுக்கும் அவர்
பரிந்துரைக்கப்படலாம் என அனைவரும் நம்பினர். அவருக்கு வயது 55.

“இப்போது இவரது மனதிற்குள் நாம் இருவரும் நுழையப் போகிறோம். அவர் மனக்கண்ணுக்குத் தோன்றும் காட்சிகளைப் பார்க்கும் வல்லமையை தருகிறேன்”

அது மாலை நேரம். வீட்டில் டீ குடித்துக் கொண்டிருந்தார். திடீரென இடது கை, தோளில் சுருக்கென்ற வலி. அது கொஞ்சம் கொஞ்சமாக உள்நோக்கிப் பரவியது. முகம் குப்பென்று வியர்க்கவே, மனைவியை அழைத்தார். ’மாரடைப்பு... வலிக்கிறது’ என்று சொல்லியபடி சரிந்தார்.  

மனைவி அலறினாள். மருத்துவமனைக்கு ஓடினர்.

வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருந்தார்.

“இப்போது மனத்திரையில் அவரது வாழ்வின் முக்கிய தருணங்கள் காட்சிகளாக விரியும். நாமும் அதைப் பார்க்கலாம்”

“அதில் பார்க்க என்ன இருக்கிறது தாயே? அவர் பத்மபூஷன் விருது பெற்றது அல்லது ஞானபீடப் பரிசுக்கான கடிதத்தை படித்த நேரம் தோன்றும்.  இல்லாவிட்டால் பாராட்டு விழாவில் அவர் பேசிய இனிய தருணம். இப்படி ஏதாவது ஒன்று தான்.”
“நிச்சயமாக இல்லை. அங்கே பார்.”

அவர் அப்போது சிறிய எழுத்தாளராக இருந்தார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நேரம். அவரது கதையை ஒரு பத்திரிகை பிரசுரித்து,  இருநூறு ரூபாய் சன்மானம் அனுப்பினர். அதில் சாமான் வாங்க கடைக்கு கிளம்பினார் மனைவியுடன். அப்போது நண்பர் ஓடி வருகிறார். நண்பரின் மகன் மாடியிலிருந்து கீழே விழுந்து விட்டான்.

ரத்தம்  கொட்டுகிறது. உடனே மருத்துவமனை போக வேண்டும்; கையில் ஒரு ரூபாய் கூட இல்லை என நண்பர் அழுகிறார். இருநூறு ரூபாயை அப்படியே கொடுத்துவிட்டு வெறும் கையுடன் வீடு திரும்புகிறார் எழுத்தாளர். அன்று அவரும், மனைவியும்  சாப்பிடவில்லை.

அடுத்த காட்சி அவரது மனத்திரையில் ஓடத் தொடங்கியது. இப்போது அவருக்கு நிலையான வருமானம் வரத் தொடங்கியிருந்தது. என்றாலும் கைக்கும், வாய்க்கும் சண்டை நடக்கும் மத்தியதர வாழ்க்கை. கடைக்குப் போன இடத்தில் சாமான்களைக் கட்டும் சிறுவனைப் பார்க்கிறார். அவன் கண்களில் சோகம்...வேதனை! அவனுக்கு ஏதாவது பணம் தரலாம் என நினைக்கிறார். வாங்கிய சாமான்களுக்குப் பணம் கொடுத்தால் பெரிதாக மிச்சமிருக்காது.

வாங்கிய சாமான்களில் பாதியை வேண்டாம் என திருப்பிக் கொடுத்து பணத்தை வாங்குகிறார்.

“இந்த சாமானை தூக்கிட்டு வர பஸ் ஸ்டாப் வரைக்கும் இந்தப் பையனை அனுப்பலாமா?” என கேட்கிறார்.

வெளியே வந்ததும் அவனை விசாரிக்கிறார். ’காலையிலிருந்து என் அம்மாவும், நானும் சாப்பிடவில்லை’ என்கிறான் சிறுவன். தன்னிடமிருந்த பணத்தை கொடுத்து “நீயும் சாப்பிட்டு, உங்கம்மாவுக்கும் கொடு.” என்று சொல்லி அந்தப் பையனைத் தட்டிக் கொடுத்து கிளம்புகிறார். கண்ணீர் விட்ட அச்சிறுவன் அவரது மனக்கண்ணில் தெரிகிறான்.  

எழுத்துலகில் சாதனை படைத்து பரிசுகள், விருதுகள், உலகளவில் அங்கீகாரம் என்றிருந்த மகத்தான தருணம் ஏதும் நினைவுக்கு வரவில்லை. ஒரு சாதாரண மனிதனாக மற்றவர் மீது காட்டிய அன்பும், மனிதநேயமும் தான் கடைசி காலத்தில் சாதனையாக தெரிந்தது.

’என்ன ஆச்சரியம்!’

“ஒரு ஆச்சரியமும் இல்லை. சாவு என்பது கடவுளுடன் மனிதன் சேரும் காலம். கடவுள் என்றால் என்ன? அன்பு என்றால் என்ன? இரண்டும் ஒன்று தானே! அதனால் தான் அன்பு காட்டிய நேரம் எல்லாம் மகத்தான தருணங்களாகத் தெரிந்தன. உண்மையில் தன் நண்பருக்கும், கடையில் வேலை பார்த்த சிறுவனுக்கும் எழுத்தாளர் உதவியது தான் எனக்கு பிடித்த செயல்கள்.”

“பாவம்.. இந்த நல்ல மனிதருக்கு இப்படி ஒரு அகால மரணம் வரப் போகிறதே?”

“வராது. அவர் சாக மாட்டார். சிக்கலான அறுவை சிகிச்சைக்குப் பின் பிழைத்துக்கொள்வார். அதன் பின் அவரது வாழ்வே தலைகீழாகி விடும். அன்பு காட்டுவதையே தன் முழுநேர வேலையாகச் செய்யப் போகிறார்”

நான் திகைப்பில் ஆழ்ந்தேன்.  

“அருகே வா. ஆன்மிகத்தின் சாரத்தை உனக்குச் சொல்கிறேன்.”

“என்னால் ரகசியம் காக்க முடியாது தாயே! ஊர் உலகத்துக்கெல்லாம் சொல்லிவிடுவேன்.”

“அப்படிச் செய்யவேண்டும் என்பதே என் விருப்பம்.”

“ஒன்று : உன் வாழ்வில் நீ சந்திப்பவர்கள் எல்லாம் உனக்காகவே அனுப்பப்பட்டவர்கள். வேண்டாதவர் என்று யாரும் கிடையாது,

இரண்டு: எது நடந்ததோ அதைத் தவிர வேறு எதுவும் நடப்பதற்கு வாய்ப்பேயில்லை. நடப்பதெல்லாம் நன்மைக்கே.

மூன்று: இந்தக் கணத்தில் ஏதாவது ஒன்று  தொடங்கினால் அது தொடங்க இந்தக் கணம் தான் நல்ல நேரம். வாழும் ஒவ்வொரு கணமும் நல்ல நேரம்தான். கெட்ட நேரம் என்று எதுவுமில்லை.
நான்கு: முடிந்தது முடிந்து விட்டது. அது மீண்டும் தொடங்காது. சென்றது திரும்பி வராது.

ஐந்து: அனைவரையும் நேசி. உன் நேசம் ஆழமாக இருக்கட்டும். நான் அன்புமயமானவள்; அன்புவழியை நீ தேர்ந்தெடுத்தால் அதன் இலக்காக நான் இருப்பேன். அன்பை மிஞ்சிய வழிபாடு இல்லை.

கண்ணீருடன் அன்னையை விழுந்து வணங்கினேன்.

“தாயே நீங்கள் சொல்வதெல்லாம் புரிகிறது. அன்பின் வழியில் நடக்க உங்கள் அருள் வேண்டுமம்மா.”

“அது என்றைக்கும் உண்டு; குழந்தைகள் வேண்டுமானால் அறியாமையாலும், ஆற்றாமையாலும் தாயை வெறுக்கலாம். ஆனால் தாய் என்றும் குழந்தையை வெறுக்கமாட்டாள்.”

அவள் மறைந்தாள். நான் மவுனமாகக் கண்ணீர் சிந்தியபடி நின்றேன்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar