|
மன்னர் ஒருவரின் பட்டத்து யானை திடீரென இறந்தது. பாகன் சரிவர கவனிக்காததால் தான், யானை இறந்ததாக கருதி மன்னர் கோபம் கொண்டார். என்ன செய்வது என அஞ்சினார் பாகன். தற்செயலாக அங்கு வந்த மகான் குருநானக், “யானை இறக்கவில்லையே! நீ ஏன் பயப்படுகிறாய்” என தைரியமூட்டினார். உடனே பிளிறியபடி எழுந்தது யானை. அங்கிருந்த அனைவரும் அதிசயித்து, குருநானக்கிடம் ஆசி பெற்றனர். இதற்கிடையில் யானை இறந்த தகவல் மன்னருக்கு செல்ல அவரும் அங்கு வந்தார்.
யானை உயிருடன் இருப்பதைக் கண்டதும், “தவறான தகவல் அளித்தது யார்?”எனக் கேட்டார். சேவகர் ஒருவர், “ மன்னா! தகவல் உண்மையே! ஆனால் இறந்த யானையை இந்த மகான் தான் பிழைக்கச் செய்தார்” என்றார்.
மன்னர் வணங்கியபடி “சுவாமி! எனக்காக ஒருமுறை யானையை இறக்கச் செய்து உயிர் கொடுங்கள்” என்றார். “மன்னரே! எத்தனை முறை வேண்டுமானாலும் இறந்தவரை பிழைக்க வைக்க கடவுளால் முடியும். ஆனால் பழுக்க காய்ச்சிய இரும்பு போன்றது நமக்கிருக்கும் சக்தி. ஒருமுறை தொட்டுப் பார்க்கலாம். மீண்டும் மீண்டும் தொட முடியாது” என்றார்.
பக்தரைச் சோதிக்கும் உரிமை கடவுளுக்கு மட்டுமே உண்டு; ஆனால், அவரைச் சோதிக்கும் உரிமை பக்தருக்கு கிடையாது. சோதனைக்கு அப்பாற்பட்டவர் கடவுள்!
|
|
|
|