|
உப்பு வியாபாரி ஒருவர், தினமும் சிவன் கோயிலில் வழிபட்ட பின்னரே வியாபாரத்திற்குச் செல்வார். அன்று வழக்கத்தை விட அதிகமான மூடைகளுடன் மாட்டு வண்டியில் புறப்பட்டார். வானம் மேகமூட்டாக இருந்ததால், “சிவபெருமானே! மழை பெய்தால் நஷ்டமாகி விடுமே! மழை வராமல் இருக்க அருள்புரிவாயாக” என வேண்டினார். ஆனால் மழை வெளுத்து கட்டியது. வண்டியை ஓட்ட முடியாதபடி காற்றும் அடித்தது. உப்பு மூடைகள் கரைந்தன. உரிய இடத்தில் சேர்க்க முடியாமல் நஷ்டத்துடன் ஊர் திரும்பினார் வியாபாரி.
வரும் வழியில் கோயிலுக்குச் சென்றவர், “அப்பனே! சிவனே! நான் உன்னை வழிபட்டும் கூட இப்படி நடந்து விட்டதே?” என அழுதார். காட்சியளித்த சிவன், “மழை வரக் கூடாது என வழிபட்டபோது, உன்னை நோட்டமிட்ட திருடர்கள் இருவர் கோயிலுக்குள் ஒளிந்திருந்தனர். வியாபாரம் முடித்து நீ வரும் போது பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். பணத்தை தர மறுத்தால் கொல்லவும் எண்ணியிருந்தனர்.
அவர்களிடம் இருந்து காப்பாற்றவே நஷ்டத்தை ஏற்படுத்தினேன். மழையால் நீ நஷ்டம் அடைந்ததும் போய் விட்டனர். வியாபாரத்தில் லாபமும் நஷ்டமும் சகஜம். மற்றொரு கட்டத்தில் இழந்ததை விட கூடுதலாக பெறுவாய்” என்று சொல்லி மறைந்தார். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதை வியாபாரி உணர்ந்தார்.
|
|
|
|