|
கண்ணனுக்கு பிடித்தது வெண்ணெய். பிடிக்காதது மமதை. திரவுபதி அவருக்கு எவ்வளவு வேண்டப்பட்டவள் என்பது பாரதம் கேட்டவர்களுக்கு தெரியும். திரவுபதியின் துகில் உரிந்த போது ஆடை கொடுத்து மானம் காத்தான் மாயக்கண்ணன். இது போல வேறு யாருக்கும் கண்ணன் அருள் செய்ததில்லை என்ற கர்வம் அவளுக்கு ஏற்பட்டது.
இந்நிலையில் பாண்டவர்கள் நாட்டை விட்டு காட்டில் தங்கியிருந்த காலத்தில் கண்ணன் ஒருமுறை வந்தார். வரவேற்ற திரவுபதி, ” கண்ணா! நீண்ட தூரம் நடந்ததால் உடம்பு வலிக்குமே! குளிக்க வெந்நீர் வைத்து தருகிறேன்” என்றாள். கண்ணனும் சம்மதித்தார். பாண்டவர்களில் ஒருவனான பீமன், பெரிய தவலை (பானை) நிறைய தண்ணீர் நிரப்பினான். சுள்ளிகளால் தீ மூட்டினாள் திரவுபதி. நீண்ட நேரமாகியும் சூடாகவில்லை. பட்ட மரத்தையே பிடுங்கிய பீமன் விறகாக கொடுத்தான். அப்போதும் சூடாகவில்லை.
“கண்ணா! இதென்ன அதிசயம்” என காரணம் கேட்டாள் திரவுபதி. “தண்ணீருக்குள் தவளை ஒன்று இருக்கிறது. தன்னைக் காப்பாற்றும்படி என்னிடம் கதறுகிறது. சூடானால் இறந்து போகுமே! அதனால் சூட்டை தடுத்து அருள் செய்து கொண்டிருக்கிறேன்,” என்றார் கண்ணன். ’தனக்கு மட்டுமே கண்ணன் அருள்புரிந்ததாக நினைத்தோமே... சாதாரண உயிருக்கும் அருள்கிறாரே!’ என்பதை அறிந்து மனம் திருந்தினாள் திரவுபதி.
|
|
|
|