|
முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் கோயில்களில் திருவிழா பல நடந்தாலும் அதில் வைகாசி விசாகம் சிறப்பு மிக்கது. ’ரோகிணி’ நட்சத்திரம் என்றால் கண்ணன். ’புனர்பூசம்’ என்றால் ராமன். ’திருவாதிரை’ என்றால் சிவன். விசாகம் என்றால், முருகன் தான்! காரணம் இது முருகனின் அவதார நட்சத்திரம்.
கந்தன், சரவணன், காங்கேயன், சிலம்பன், சிவகுமாரன், சேனாதிபதி, ஆறுமுகன், விசாகன், கார்த்திகேயன், வேலன், குமாரன், சுவாமிநாதன், குருநாதன் இப்படி முருகனுக்குரிய திருநாமங்கள் பல. இதில் ’விசாகன்’ என்பதற்கு ’விசாகத்தில் அவதரித்தவன்’ என்பது பொருள். ’வி’ என்றால் பட்சி (மயில்). ’சாகன்’ என்றால் சஞ்சரிப்பவன். மயில் மீது உலகை வலம் வருபவன் என்பது பொருள்.
அசுரனான சூரபத்மனை வதம் செய்ய முருகனை நெற்றிக்கண்ணில் இருந்து தோற்றுவித்தார் சிவன். ஏனெனில் ’கருவில் தோன்றிய யாரும் தன்னைக் கொல்லக் கூடாது’ என்று சிவனிடம் வரம் பெற்றிருந்தான் சூரபத்மன். நெற்றிக் கண்ணில் தோன்றிய ஆறு தீப்பொறிகளும் ஆறுமுகனாகி, குழந்தை வடிவம் பெற்ற நாள் வைகாசி விசாகம்.
இந்நாளில் முருகன் கோயில்களில் வசந்த விழா நடக்கும். பால் அபிஷேகம் செய்தும், காவடி சுமந்தும், விரதமிருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். குழந்தை இல்லாதவர்கள் விரதமிருந்து கிரிவலம் வந்தால் அடுத்த வைகாசி விசாகத்துக்குள் புத்திரப்பேறு கிடைக்கும். மலைக்கோயில்களில் உள்ள முருகனை வழிபட்டால் முன்வினை பாவம் தீரும். பயம் விலகும். பகைவர்கள் காணாமல் போவர்.
பாத யாத்திரையாக திருச்செந்தூர் வரும் பக்தர்கள் கடலில் நீராடி முருகனைத் தரிசிப்பர். நள்ளிரவு 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபராதனை, 2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 2:30 மணிக்கு தீபாராதனை நடைபெறும். காலை 9:00 மணிக்கு மூலவர், உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். இதை தரிசிப்போருக்கு ஆண்டு முழுவதும் முருகனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். வைகாசி விசாக நாளில் திருத்தணி மலையிலுள்ள சரவணப் பொய்கையில் நீராடி, முருகப்பெருமான் வழிபட்ட குமாரேஸ்வரரை வழிபட்டால் பிரம்மஹத்தி என்னும் கொலைப்பாவமும் தீரும்.
சுவாமிமலை முருகனுக்கு அதிகாலையில் அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அதன்பின் சங்காபிஷேகம், மாலையில் சிவனுக்கு முருகன் உபதேசிக்கும் வைபவம் நடக்கும். இரவு வள்ளி, தெய்வானையுடன் முருகன் புறப்பாடு நடைபெறும். மருதமலை முருகனுக்கு வைகாசி விசாகத்தன்று 108 பால்குட அபிஷேகம் சிறப்பாக நடக்கும். சிவன், பெருமாள், அம்மன் கோயில்களிலும் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. எமன் அவதரித்ததும் இந்த நாளில் தான். எனவே, வைகாசி விசாகத்தன்று திருவாரூர் மாவட்டம் ஸ்ரீவாஞ்சியம் உள்ளிட்ட எமன் சன்னதி உள்ள கோயில்களை தரிசித்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.
திருச்செந்தூர் அருகிலுள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலுக்கு விரதமிருக்கும் பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வர். கடலில் நீராடி, சுவாமிக்கு காவடி, பால்குடம், முடிகாணிக்கையை நேர்த்திக் கடனாக செலுத்துவர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தேரோட்டமும், கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி விழாவும், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம், பால் மாங்காய் நிவேதனமும், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கருடசேவையும் சிறப்பாக நடக்கும்.
காஞ்சிபுரம் – வந்தவாசி வழியிலுள்ள கூழமந்தல் கிராமத்தில் பேசும்பெருமாள் கோயில் உள்ளது. அதனைச் சுற்றியுள்ள கோயில்களின் உற்ஸவர்கள் கூழமந்தலுக்கு எழுந்தருள்வர். ஒரே இடத்தில் 16 பெருமாளை இந்த நாளில் தரிசிக்கலாம். கன்னியாகுமரி பகவதி அம்மனுக்கு ஆராட்டு விழா நடக்கும். ஆந்திராவிலுள்ள சிம்மாசலம் நரசிம்மருக்கு வைகாசி விசாகத்தன்று சந்தனக் காப்பு களையப்படும். இந்த நாளில் சந்தனம் பூசாத சுவாமியின் திருமேனியைத் தரிசிக்கலாம்.
|
|
|
|