|
”நான் எப்படி வாழ்கிறேன்?” என்று மற்றவரிடம் கேட்காதீர்கள். ஒவ்வொருவரும் தன்னைத் தானே கேட்க வேண்டிய கேள்வி இது. அவரவர் மனமே நீதிபதி. அடுத்தவர் வீட்டை பார்த்தால் நம் வீட்டில் அடுப்பு எரியாது. காரணம் அவர்களின் வசதியைப் பார்த்து தான் வயிறு எரிகிறதே. இது சரியான அணுகுமுறையா என சிந்தியுங்கள். மற்றவரோடு ஒப்பிடாதீர்கள். உங்களின் தகுதியறிந்து வாழுங்கள்.
நல்லவனுக்குரிய தகுதி என்ன என்பதை இந்த விறகுவெட்டியின் வாழ்வில் நடந்த சம்பவம் சொல்லும். தினமும் கோடாரியுடன் காட்டுக்குச் செல்வான் அவன். மாலையில் சந்தையில் விறகுகளை விற்று விட்டு, கிடைத்த பணத்தில் காலம் கழித்தான். அவனது எண்ணம், சொல், செயல் எல்லாம் நிம்மதியை மையமிட்டதாக இருந்தது. ஒருநாள் அவனைக் கண்ட வனதேவதை, வளமான வாழ்வு அளிக்க விரும்பியது. அதற்காக ஒரு விளையாடல் நிகழ்த்தியது.
ஒருநாள் அவன் காட்டாற்றின் கரையில் நின்று மரம் வெட்டிக் கொண்டிருந்தான். வேகமாக ஓங்கிய போது, கோடாரி கை நழுவி ஆற்றில் விழுந்தது. தண்ணீருக்குள் தேடியும் கோடாரி அகப்படவில்லை. அவனுக்கு காட்சியளித்த வனதேவதை, ”வருந்தாதே! உன் கோடாரியை நான் எடுத்து தருகிறேன்” என்றது.
”நன்றி” என்று சொல்லி வணங்கினான். தேவதை ஆற்றுக்குள் போய் கோடாரியை எடுத்து வந்து, ”இந்தாப்பா... உன் கோடாரி” என்றது. அது தங்கக் கோடாரி; தகதகவென மின்னியது. விறகு வெட்டி தயங்கியபடி, ”தாயே! இது என்னுடையதல்ல!” என மறுத்தான்.
”ஏனப்பா... மறுக்கிறாய்” என்றது தேவதை.
”தாயே! இந்த கோடரியால் விறகு வெட்ட முடியாது. இதைப் பாதுகாப்பதில் தான் என் கவனம் இருக்குமே தவிர, பணியில் ஈடுபட மாட்டேன்” என்றான்.
மீண்டும் ஆற்றுக்குள் மறைந்து ஒரு வெள்ளிக்கோடாரியை கொண்டு வந்தது தேவதை.
”என்னுடையதல்ல! இதுவும் என்னை சோம்பேறியாக்கி விடும். உழைத்து வாழ்வதில் தான் சுகமிருக்கிறது. பழைய இரும்பு கோடாரி தான் எனக்கு வேண்டும்” என்றான் விறகுவெட்டி. அவனது மனஉறுதி கண்டு வியந்த தேவதை, இரும்பு கோடாரியை கொடுத்ததோடு, நீண்ட ஆயுள், உடல்நலம் பெற்று வாழ ஆசியளித்து மறைந்தது.
விறகுவெட்டியைப் போலவே உழைப்பில் நம்பிக்கை கொண்ட மூதாட்டி ஒருத்தி இருந்தாள். சாலையோரத்தில் அமர்ந்து கீரை கட்டுகளை விற்று வந்தாள். அருகிலேயே அவளுக்கு சொந்தமான பசு நின்றிருந்தது. சிலர் காசு கொடுத்து கீரை வாங்கி, மாட்டுக்கு கொடுத்து விட்டுச் சென்றனர்.
இதை கவனித்தபடி இருந்த இளைஞன் ஒருவன், ”பாட்டி! நீங்க விக்கிற கீரையை வாங்கி உங்க மாட்டுக்கே கொடுக்கிறாங்களே! எனக்கு ஒன்னும் புரியலையே!” என்றான். ”வயசாகி விட்டதால என்னால ஓடியாடி வேலை செய்ய முடியலை. அதுக்காக பிறரிடம் கைநீட்டவும் மனசில்லை. தனியாளான எனக்கு சொற்ப வருமானம் என்பதால மாட்டையும் கவனிக்க சிரமப்பட்டேன்....அப்போ தான் இந்த யோசனை தோணிச்சு. அவசர உலகத்தில யாருக்கும் தர்மம் செய்ய வாய்ப்போ, நேரமோ இல்லை. கீரை விக்கிறது என் தொழில்; அதை வாங்கி மாட்டுக்கு கொடுக்கிறது அவங்களோட தர்மம். விருப்பம் உள்ளவங்க செய்யுறாங்க” என்றாள். சாலை என்று கூட பார்க்காமல் பாட்டியின் காலில் விழுந்தான். ”பாட்டி! என் கண்ணை திறந்திட்டீங்க! வாழ்க்கையில நான் செய்யாத பாவமில்ல! பொய், திருட்டு, கபடம், நயவஞ்சம் எல்லாம் செஞ்சிருக்கேன். ஆனால இதுவரை தண்டனை பெற்றதில்லை. நல்லவேளை... கடவுள் அருளால உங்களை இன்னிக்கு சந்திச்சிருக்கேன். மற்றவர் உழைப்பை திருடாம, சுயமா உழைச்சு வாழ்வேன்” என்றான்.
மறுநாள் கீரைக்கடைக்கு அருகிலேயே ஒரு இளநீர் கடையை தொடங்கினான் இளைஞன்.
அவன் மனதிற்குள், ”உழைத்து வாழ வேண்டும்; பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!” என்ற பாடல் ஒலித்தது.
|
|
|
|