|
பெரியவர் ஒருவர் வீட்டுபூஜைக்காக தினமும் நெய்யால் செய்த பலகாரம் படைப்பார். இதை நோட்டமிட்ட பூனை ஒன்று திருடிச் சென்றது. இதைக் கவனித்த அவர் மறுநாள் குச்சியுடன் காத்திருந்தார். இப்படி தினமும் பூனை வருவதும், அவர் விரட்டுவதும் தொடர் கதையானது. இதைக் கவனித்தபடியே இருந்தான் அவரது மகன்.
பெரியவரின் காலத்திற்குப் பிறகு மகன் பூஜை செய்யத் தொடங்கினான். பூனையை தந்தை ஏன் விரட்டினார் என்பது தெரியாமல், பலகாரத்தை வைத்து விட்டு குச்சியுடன் காத்திருந்து பூனையை விரட்டுவான். ஒருநாள் தந்தையின் நண்பர் வீட்டுக்கு வந்த போது, பூஜைக்காக பலகாரத்தை வைத்து விட்டு குச்சியுடன் நின்றான்.
” ஏன் குச்சியுடன் நிற்கிறாய்?” எனக் கேட்டார் அவர்.
”என் தந்தை பூஜையின் போது பூனையை விரட்டுவது வழக்கம்; அதையே நானும் பின்பற்றுகிறேன்” என்றான். சாதாரண விஷயம் கூட அறியாமையால் சடங்காக மாறியது கண்டு அதிர்ந்தார். கண்மூடித்தனமாக எதையும் செய்யக் கூடாது என தெளிவுபடுத்தினார் தந்தையின் நண்பர். அதன்பின் பூனை நுழைய முடியாதபடி வீட்டு ஜன்னல்களில் கம்பிவலை பொருத்தினான். |
|
|
|