|
பசுவின் உடலில் பால் இருந்தாலும் அதனைக் கொம்பிலிருந்தோ, குளம்பிலிருந்தோ கறக்காமல் மடியிலிருந்து கறக்கிறோம் அல்லவா? அது போல் உலகெங்கிலும் இறைவன் பரவிக் கிடந்தாலும் நம் இந்தியா தான் ஆன்மிகத்தின் களஞ்சியமாக உள்ளது.
மகா ஞானியான ஸ்ரீதியாகராஜ சுவாமிகள் தெலுங்கில் “எந்தரோ மஹாநுபாவு(...லு) அந்தரிகி வந்தநமு” என்று பாடினார். அதன் பொருள், ”எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்! அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்” என்பதாகும். உண்மையான மகான்கள், தங்களைப் பெரிய மகான்களைப் போல் காட்டிக் கொள்வதில்லை.
இந்திய பூமியில் பிறந்து நம்மை நல்வழிப்படுத்த வந்த மகான்களைப் பற்றித் தெரிந்து கொள்வது நம் கடமையல்லவா? அவர்களை பார்ப்போமா?
ரங்கநாத கோஸ்வாமி என்றொருவர் இருந்தார். இவரது குரு சமர்த்த ராமதாசர். இந்தப் பெயரை எங்கோ கேள்விப்பட்டோமே என யோசிக்கிறீர்களா? சத்ரபதி சிவாஜியின் குருநாதர் தான் அவர்.
இப்போது ரங்கநாத கோஸ்வாமி பற்றி பார்ப்போம்.
இவர் துறவி தான் என்றாலும் பல்லக்கில் செல்வார். பல்லக்கின் முன் கொடி, சாமரம், குதிரை, தீவட்டி செல்லும். இவருடன் இருப்பவர்கள் இவரது பெருமைகளை எடுத்துச் சொல்வர். இவரை சந்திக்க வருபவர்களுக்கும் அறுசுவை அன்னம் அளிக்கப்படும்.
இவரோடு முன்பு குருகுல வாசம் செய்த மற்ற சீடர்கள் சாதாரண நிலையில் இருக்க, இவர் மட்டும் கொடிகட்டிப் பறப்பதை பார்த்துக் கொண்டு அவர்கள் சும்மா இருப்பார்களா? குருவான சமர்த்த ராமதாசரிடம் சென்றார்கள். ”ஒரு துறவிக்கு ஏன் இந்த ஆடம்பரம்? நாங்களெல்லாம் அடக்கமாக இருக்க, இவர் மட்டும் ஏன் இப்படி?” என கோள் மூட்டினர்.
உண்மையான குருக்கள் வார்த்தைகளை விரயம் செய்ய மாட்டார்கள். அதன்படி சமர்த்த ராமதாசரும் எதுவும் பேசவில்லை.
ஒரு நாள், ரங்கநாத கோஸ்வாமி முகாமிட்டிருந்த சாலை வழியாக குருநாதரான சமர்த்த ராமதாசர் செல்ல நேர்ந்தது. குரு என்ன சொல்லப்போகிறாரோ என ஆவலோடு பார்த்தார் ரங்கநாதர்.
புன்னகையுடன் ”ரங்கநாதா? உனக்கு ஏன் இந்த ஆடம்பரம்? விட்டு விடேன்?”என்றார்.
”அப்படியே ஆகட்டும் குருவே! தங்களின் கட்டளை என் பாக்கியம்” என்றார் மலர்ச்சி குறையாமல்.
பரிவாரங்களை அனுப்பி விட்டு… மரத்தடி ஒன்றில் தியானத்தில் ஆழ்ந்தார்.
பொறாமை கொண்ட சீடர்கள் தங்களுக்குள் தனியாகப் பேசிக் கொள்ளும் போது குருவின் மூலம் புத்தி புகட்டியதாக பேசி மகிழ்ந்தனர்.
ரங்கநாதர் சில நாட்கள் பிட்சை எடுத்து உண்பார். மற்ற நாட்களில் பட்டினி கிடப்பார். அப்படியும் அவர் முகத்தில் இருந்த மலர்ச்சி குறையவில்லை. ஏனெனில், குருநாதரின் கட்டளையை நிறைவேற்றுவதன் மூலம் அவரின் ஆசி கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் செயல்பட்டார்.
ஒருநாள் மகாராஜா சத்ரபதி சிவாஜி வரும் போது, மரத்தடியில் அமர்ந்திருப்பது யார். கோஸ்வாமியா... என வியப்புடன் பார்த்தார்.
அவர் இருந்த நிலை அவருக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் சிரமப்படுவது சரியல்ல என நினைத்தார் சத்ரபதி. உடனே பணியாட்களை அழைத்து, பக்கத்தில் உள்ள ஊருக்குச் சென்று தக்க ஏற்பாடுகளை செய்யும்படி கட்டளையிட்டார். ரங்கநாதர் இருந்த இடத்தில் பந்தலிட்டு, தோரணங்கள் தொங்கவிடப்பட்டன. கரடுமுரடாகக் இருந்த பாதையை சீர்செய்து சமன்படுத்தினர்.
இந்த ஏற்பாடுகளை எல்லாம் ரங்கநாதர் ஏற்க மறுத்தார். மன்னரின் கட்டளையை நிறைவேற்றாவிட்டால் தண்டனைக்கு ஆளாக நேருமே என்ற பயத்தில் பணியாட்கள் கெஞ்சினர். ரத்தினக் கம்பளம் மீது ஆசனம் அமைத்து அவரை வற்புறுத்தி அமரச் செய்தனர்.
ரங்கநாதரின் சூழல் முன்பு போலவே களைகட்டியது. முன்பு போல சமையல் தொடங்கியது. வருவோர் போவோருக்கெல்லாம் உணவு வழங்கப்பட்டது. மன்னர் சத்ரபதி சிவாஜி, பல்லக்குக்கு ஏற்பாடு செய்தார்.
ஒருநாள் மன்னரும் அங்கு வந்தார். ”சுவாமி! தாங்கள் இப்படி இருப்பது தான் அழகு; இவைகள் தொடரட்டும்” என்று சொல்லி விட்டுப் புறப்பட்டார்.
சில நாட்கள் கடந்தன. குருநாதர் சமர்த்த ராமதாசர் ஒருநாள் அந்த வழியாக வந்தார்.
“நீ எப்போதும் இவ்வாறே இருக்க வேண்டும்” என கட்டளையிட்ட சமர்த்த ராமதாசர், மற்ற சீடர்களிடம்,”கவனித்தீர்களா? ஆடம்பரங்களை அவர் தேடவில்லை நான் கட்டளையிட்டதும் ஆடம்பரத்தை உதறித் தள்ளிய அவரது வைராக்யத்தை பார்த்திருப்பீர்கள் அல்லவா? ஆனாலும் அவை மறுபடியும் அவரைத் தேடி வந்தன. அதை ’பிராப்தம்’ என்பார்கள். ஏனெனில் அவை முன்வினைப் பயனால் கிடைத்தவை. அவற்றை அனுபவிக்கும் உரிமை அவருக்கு உண்டு. நன்மையோ, தீமையோ முன்வினைப்பயனால் ஏற்படும் போது அனுபவித்தே தீர வேண்டும்” என்றார். வெட்கித் தலைகுனிந்த சீடர்கள் தங்களின் தவறை உணர்ந்தனர்.
|
|
|
|