|
கோபத்தை விலக்கியவர்களுக்கு ’பிரம்மரிஷி’ என்ற பட்டம் கிடைக்கும். ராமரின் குலகுருவான வசிஷ்டர் இந்த பட்டம் பெற்றவர். அவரைப் போல தானும் பிரம்மரிஷியாக விரும்பிய விஸ்வாமித்திரர் தவத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தகுதி வந்ததாக கருதி வசிஷ்டரை காண புறப்பட்டார்.
பிரம்மரிஷிகள் மற்ற பிரம்மரிஷிகளைக் கண்டால் மட்டும் வணங்குவர். மற்றவர்களுக்கு கைநீட்டி ஆசியளிப்பர். விஸ்வாமித்திரரைக் கண்ட வசிஷ்டர் கைநீட்டி ஆசியளித்தார். இன்னும் தனக்கு தகுதி வரவில்லையே என்ற ஆதங்கத்துடன் மீண்டும் விஸ்வாமித்திரர் தவம் செய்தார். ஒருநாள் அவரது குலதெய்வம் காட்சியளித்து, ’வசிஷ்டரிடம் நீ செல்லும் போது அவர், உன்னை பிரம்மரிஷியாக ஏற்க மறுத்தால், அவரது தலை வெடித்து சாம்பலாகட்டும் என்று சாபமிடு” என்றது. சில காலம் தவமிருந்த விஸ்வாமித்திரர், ஒருநாள் வசிஷ்டரை காணச் சென்றார். அப்போதும் வசிஷ்டர் கைநீட்டி ஆசியளித்தார். ஆனாலும் விஸ்வாமித்திரர் சாபமிடவில்லை.
”வசிஷ்டரே! கோபத்தால் தவசக்தி வீணாகும் என்பதை உணராமல் இருந்த எனக்கு பட்டம் எப்படி கிடைக்கும்?’ எனக் கேட்டார். “கோபம் அழிவைத் தரும் என்ற உண்மையை உணர்ந்து விட்டீர் அல்லவா! இன்று முதல் நீங்களும் பிரம்மரிஷி தான்” என வணங்கினார் வசிஷ்டர்.
|
|
|
|